8. எனது ஊர் விடத்தல்தீவும் எனது மருத்துவ பயணமும் - ஞானசீலன் குணசீலன்

எனது ஊர் விடத்தல்தீவின் வரலாறு, சிறப்புகள், வளங்கள், சாதனைகள், இழப்புகள், கலாச்சாரம், மதநம்பிக்கை, போனறவை மட்டுமின்றி குறைபாடுகள் உட்பட சகல பிரிவுகளிலும் ஆய்வு செய்து அதை வரலாற்று பதிவாக உருவாக்கும் செயற்திட்டமான விடத்தல் தீவு பன்நாட்டு மாநாட்டிற்காக எனது ஊர் விடத்தல் தீவும் எனது மருத்துவமும் என்ற எனது மனதில் நிற்கின்ற உணர்வுகள் மற்றும் சுகாதார விடயங்களை இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

குணப்படுத்த முடியாத அல்லது மருத்துவ சேவைகளை வழங்க சவால்களை எதிர்நோக்கும் பகுதிகளில் பணிபுரிதல் - விடத்தல் தீவு கிராமம்

அறிமுகம்

எனது மருத்துவ தொழிலின் பெரும்பகுதியான காலத்தை மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக கிராம அல்லது பின்தங்கிய பிரதேசத்திலேயே கழித்திருக்கின்றேன். இதில் விசேடமாக எனது ஊரும், பள்ளமடுவும் அடங்குகின்றன. இவை இலங்கையின் வட பிராந்தியத்தின் புவியியல் சார்ந்த இடங்கள் மட்டுமல்ல. நீண்ட கால தவிர்க்க முடியாத வரலாற்றை கொண்டவை. குறிப்பாக முப்பது வருடத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு யுத்தம், பாரிய இடம்பெயர்வுகள், பாரிய உயிரிழப்புகள், பாரிய பொருட் சேதங்கள், அங்கவீனங்கள், உளவியல் தாக்கங்கள், போன்ற பல்வேறு விடயங்களை தாண்டி வந்த பிரதேசங்களாகும்.

எனது மருத்துவ நிலையம் வெறும் மருத்துவ உபகரணங்களையும், ஊசிகளையும், மருந்துகளையும் மட்டும் கொண்ட ஒரு நிலையம் அல்ல மாறாக எனது ஊர் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள், துன்பங்கள், அன்பான உறவு போன்ற பல விடயங்களை என்னுடன் இணைத்த ஒரு நிலையம்.

பல ஆண்டுகளாக ஒரு மருத்துவராகவும், பொது சுகாதார மருத்துவராகவும், சுகாதார அமைச்சராகவும் மற்றும் எனது தாயார் லில்லி அவர்களுடைய பெயர் கொண்ட தனிப்பட்ட மருத்துவ நிலையத்திலும் நான் பணியாற்றி இருக்கின்றேன்.

எனது பணிக்காலத்தில் முன்னேற்ற கரமான நவீன நோயறிதல் வசதிகள் இல்லாமை, மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு, உணவு தட்டுப்பாடு, போசணை குறைபாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ பொது அறிவு போதாமை, உடல் நலத்திற்கு தீங்கான பழக்க வழக்கங்கள், உணவு பழக்க வழக்க மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், கலாச்சார கட்டுப்பாடுகள், சில மதக்கட்டுப்பாடுகள், நீண்ட காலப் போர், இடம்பெயர்வு போன்ற பல்வேறு விடயங்கள் எமது ஊர் மக்களின் உடல், உள ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தி இருந்தன. தற்போதும் தாக்கம் செலுத்தி வருகின்றன.

மக்கள் வெறும் மருந்து மாத்திரைகளுக்காக மட்டும் என்னிடம் வரவில்லை. என்னிடம் இருந்து அவர்கள் மன ஆறுதல், மன உறுதி, நம்பிக்கை, மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் போன்ற பல விடயங்களை பெற்றுக்கொள்ள வந்தார்கள்.

இங்கே எனது மருத்துவ பயணத்தை பற்றி நான் சிந்திக்கும் போது இந்த கட்டுரை ஒரு வரலாற்று சான்றாக மாறலாம்.

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட விடத்தல் தீவு மற்றும் பள்ளமடு பிரதேச மக்கள் சமூகங்களை பொறுத்தவரை அவர்களின் சூழலியல், தொழில் வகைகள், சமூக கலாச்சார, பொருளாதார, மதங்கள் தொடர்பாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான மருத்துவ சுகாதார சவால்களை கொண்டிருக்கின்றன.

இப் பகுதி மக்களின் தொழில்கள் பெரும்பாலும் உடல் ரீதியான உழைப்பில் தங்கியுள்ளன. அதாவது பெரும்பாலானோரின் தொழில் மீன் பிடி மற்றும் விவசாயமாக உள்ளது.

பொதுவான உடல் நலப் பிரச்சனைகள்

01. தொற்றா நோய்கள். இதற்கு உதாரணமாக நீரிழிவு, உயர் குருதியமுக்கம், ஆஸ்துமா, புற்று நோய்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

02. தசை, எலும்பு மற்றும் மூட்டுகள் தொடர்பான பிரச்சனைகள் 03. போசாக்கு குறைபாட்டு பிரச்சனைகள்

04. உளவியல் பிரச்சனைகள்

05. தொற்று நோய்கள்

என்பவற்றை பொதுவாக நாம் எடுத்து கொள்ளலாம். மேற்கூறிய உடல் நலப் பிரச்சனைகள் எனது ஊர் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது. எனது ஊரில் மட்டுமல்ல உலக அளவிலும் இதே பிரச்சனை தான்.

பொதுவாக உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், வரையறுக்கப்பட்ட உணவு பன்முகத்தன்மை, பொருளாதார பிரச்சனைகள், நோய்களை தடுப்பதற்கான முன்கூட்டிய அணுகல் இன்மை, தனிப்பட்ட சுகாதாரம் பேணப்படாமை, தொற்று நோய்கள் தொடர்பில் அலட்சியம், விழிப்புணர்வு குறைவு, நவீன தொழில் நுட்பத்தால் வளி, நீர், உணவு, சூழல் மாசடைதல் பருவ கால மாற்றங்கள் நகர் மற்றும் கிராமப்புறங்கள் அழுக்காதல், வடிகாலமைப்பு குறைபாடுகள், நீண்ட கால மோதல்கள், உயிர் இழப்புக்கள், ஊனமடைதல், இடம்பெயர்வுகள், சொத்து இழப்புகள் போன்ற பல விடயங்கள் மேற்கூறிய உடல் நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன.

இங்கே ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். விடத்தல்தீவு பள்ளமடு பிரதேச வைத்தியசாலையானது எனது சிறு வயது காலத்தில் கிராமிய வைத்தியசாலை என்ற பெயரில் இயங்கியது. இப்போதும் நானும் எனது குடும்பத்தினரும் இங்கு சிகிச்சை பெற்று கொண்டது என் நினைவில் உள்ளது. அப்பொழுது அங்கு பல்கலைகழக பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியாற்றவில்லை பதிலாக பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் (சுஆP) பணியாற்றினார்கள். அந்த காலத்தில் கூட நோயளிகள் இவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அத்துடன் இங்கு கர்பிணி தாய்மார்களின் பிரசவங்கள் கூட நடை பெற்றன. எனது கடைசி தம்பியும், தங்கச்சியும் இங்கு தான் பிறந்தார்கள். பின்பு இவ் வைத்தியசாலை அடிப்படை மருத்துவ சேவை (கவனிப்பு) அலகு (Pஆஊரு) என மாறியது. பின்பு தற்போது அது பிரதேச வைத்தியசாலை விடத்தல் தீவு என மாறி இருக்கின்றது.

ஆரம்பத்தில் இருந்த கிராமிய வைத்தியசாலை விடத்தல் தீவு இல் இருந்து தற்போதைய பிரதேச வைத்தியசாலை விடத்தல் தீவு எனும் காலப்பகுதி வரை இனி கவனத்தில் கொண்டால் இங்கு சிகிச்சைக்காக சென்ற எமது மக்களின் விகிதாசாரம் குறைந்து கொண்டே வந்திருக்கின்றது. பல்வேறுபட்ட காரணங்கள் இதற்கு காரணமாகின்றன உதாரணமாக

மக்களின் போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டமை, பொது போக்குவரத்து, தனியார்போக்குவரத்து, தனிப்பட்ட போக்குவரத்து வசதிகள் அதிகரித்தமை.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த மருத்துவ சிகிச்சை வசதிகளை கொண்டிருந்தமை.

பெரும்பாலானோர் மன்னார் பெரிய வைத்தியசாலையை நாடியமை மற்றும் அங்கு சிறந்த மருத்துவ கவனிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தமை.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான நோயாளர்கள் விடத்தல் தீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சை அல்லது மேலதிக பரிசோதனைகளுக்காக மன்னார் பொது வைத்திய மாற்றப்படுவதால் மக்கள் மனதில் தாம் நேரடியாகவே மன்னார் வைத்தியசாலைக்கு சென்றால் பாதுகாப்பானது எனும் சிந்தனை வளர்ந்துள்ளமை என்பவற்றை நான் பிரதான காரணங்களாக உணர்கின்றேன்.

எவ்வாறு இவற்றை சரி செய்யலாம்?

இது தொடர்பில் விரிவாக இங்கு நான் விளக்க விரும்பவில்லை காரணம் இது சாதாரண விடயம் அல்ல என்றாலும்

அடிப்படையில் முக்கியமாகும்.

எமது விடத்தல் தீவு வைத்தியசாலை போன்ற கிராமப்புற வைத்தியசாலையில் காணப்படும் அடிப்படை குறைபாடுகள் மேம்படுத்தப்பட்டு அதன் சிகிச்சை அளிக்கும் செயற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு சுகாதார திணைக்களத்தினது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இவ் வைத்தியசாலையில் காணப்படும் திருப்திகரமான மருத்துவ சுகாதார சேவைகள் தொடர்பில் எம் மக்களுக்கு தெளிவு படுத்தப்படல் வேண்டும். ஆனால் மேற்கூறிய இரண்டு விடயங்களும் இன்னும் பெரிய சவாலுக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. நான் கண்டறிந்த அனுபவ உண்மைகள்

விடத்தல் தீவு, பள்ளமடுவில் உள்ள எனது தனிப்பட்ட மருத்துவ நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும்நான் செல்லும் போது ஒவ்வொருநாளும் ஒரு சவாலான நாளாகவே கருதினேன். ஏனென்றால் மிக குறைந்த நோயறிதல் வசதிகளுடனும், மருத்துவ வசதிகளுடனும் எனது மருத்துவ அறிவுக்கும் இடையிலான சிக்கலான அனுபவங்களை எதிர்நோக்கினேன்.

எனது ஊர் மக்கள் எனது மருத்துவநிலையத்திற்கு தமது உடல் உள பிரச்சனை தொடர்பில் வரும் போது அவர்களின் வாய் மூலதகவல், அவர்களுடன் கூட வருவோரின் தகவல், நோயாளி மீது நான் மேற்கொள்ளும் உடல் ரீதியான மருத்துவ பரிசோதனை போன்றவற்றை வைத்தே அவர்களின் நோயை கண்டறிந்து சிகிச்சைஅளித்தேன் அல்லது சிகிச்சைகாக ஆலோசனை வழங்கி வழிகாட்டினேன்.

இங்கே ஒரு விடயம் என் மனதில் பளிச்சிடுகிறது. நோய்களை அறிவதற்கான கருவிகள் இரசாயண பரிசோதனைகள் என்பவற்றின் பற்றாக்குறை ஒரு வகையில் எனது நோய் அறியும் திறமையை மேம்படுத்தியுள்ளது. நோயாளிகளின் வாய் மூல தகவல்களும், உடல் பரிசோதனை முடிவுகளும் மட்டுமே ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை முடிவுகள் இன்றி நோய்களை இனம் கண்டு கொள்ள என்னை வழிப்படுத்தின.

இங்கே நோயாளியின் கதையை கவனமாக கேட்பதும் அவர்கள் உடலில் கவனமாக மேற்கொள்ளும் உடல் பரிசோதனையும் மிகவும் முக்கியமானது. ஆனால் இங்கு ஒரு அபாயம் உள்ளது.

சில வேளையில் எனது சிகிச்சை போதுமானதாக இல்லாமல் இருக்கவோ அல்லது தேவைக்கு அதிகமான சிகிச்சையாக இருக்கவோ அல்லது தகுந்த மேலதிக மருத்துவ ஆலோசணை பெறுவதை தவிர்ப்பதாகவோ அமைய வாய்புண்டு,

இங்கே விடத்தல் தீவின் ஒரு ஊர் மகனாகவும் மருத்துவராகவும் எனது மக்களின் மருத்துவம், சுகாதாரம், உளவியல் பிரச்சனை தொடர்பில் எனது மருத்துவ அறிவு அனுபவம் கொண்டு என்னால் வழங்கக்கூடிய அதிகூடிய சேவையை நான் வழங்கியுள்ளேன் என்ற திருப்தி எனக்குள்ளது.

இங்கு இன்னுமொரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். நோய்களை கண்டறிதல், சிகிச்சை வழங்கல், மேலதிக மருத்துவ தேவைக்கு ஆலோசணை வழங்கல் போன்றவை மட்டும் ஒரு மருத்துவனின் கடமை அல்ல மிகவும் உணர்வுபூர்வமான இன்னுமொரு கடமையுண்டு. அதாவது ஒரு நோயாளியின் உடல் நிலை தொடர்பிலும் அவரின் உயிர் வாழும் காலம் தொடர்பிலும் கணிப்பு கூறல் இது மிகவும் மனக்கடினமானது. பல்வேறு சந்தர்ப்பங்களில் எனது ஊரில் இருந்து எனக்கு அழைப்பு வரும். தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள,; மிகவும் வயது முதிர்ந்து படுக்கையில் இயாமல் உள்ளவர்கள் அல்லது வௌ;வேறு மருத்துவ அல்லது இயற்கை காரணங்களின் நிமித்தம் மரணத்தை எந் நேரமும் எதிர்கொள்ள காத்திருப்போரின் வீட்டில் இருந்து இவ்வாறான அழைப்பு வரும். இவ் அழைப்பு பெரும்பாலும் முக்கியமாக உடனடியாக செய்ய கூடிய மருத்துவ உதவிக்காகவும் இன்னுமொன்று இவ்வாறான நோயாளியின் வாழ்கை முடிவு அல்லது மரண காலம் தொடர்பில் அறிவதற்காகவும் இருக்கும்.

ஒவ்வொரு முறையும் நோயாளியின் உறவினர் கண்களில் நோயாளியின் மரணம் எப்போது நடக்கும் என்ற பிரதான கேள்வி வெளி தெரிவதை நான் உணர்ந்துள்ளேன்.

மருத்துவதுறையில் எல்லா மருத்துவர்களும் எல்லாத் துறையிலும் திறமை பெற்றுவிடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயத்தில் விசேட திறமைகள் அமைவதுண்டு.

நான் எனது ஊரில் வீடுகளில் இயலாமல் படுக்கையில் உள்ள நோயாளர்களை பார்வையிடும் போது அவர்களின் உடல் நிலை அவர்களது உயிர் வாழும் காலம் தொடர்பில் எனக்கு தெளிவூட்டும். இவ்வாறான நோயாளர்கள்தொடர்ந்தும் நோயின்துன்பத்தால்அல்லல்படுவதுநான்தனிப்பட்டரீதியில் விரும்புவதில்லை. இதனால் அவர்கள் துன்பமின்றி இறப்பது நலம் என்று என்னுள்ளே எண்ணிக்கொள்வேன். ஆனால் இறப்பை என்னால் தீர்மானிக்க முடியாது அது மருத்துவத்திற்கு அப்பாற்ப்பட்ட சக்தியில் தங்கியுள்ளது. ஆனாலும் எனக்கு மனதில் ஒருவரின் இறுதி முடிவு தொடர்பில் காலக்கெடு தீர்மாணிக்கும் சக்தி எனது ஊர் மக்களாலேயே பயிற்றுவிக்கப்பட்டது.

ஊரில் இன்னும் என்னைப்பற்றி ஒரு அபிப்பிராயம் உள்ளது. ஆதாவது "குணம் டொக்டர் வந்து பார்த்து சொன்னார் என்றால் நேரம் தப்பாது” அது என்னவோ தெரியவில்லை ஒருவரின் இறப்பு தொடர்பில் எனது கணிப்பும் பெரும்பாலும் பொய்த்ததில்லை. இதற்காக பெருமைப்படுவதா? கவலைப்படுவதா? என எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் இம் மாதிரியான எனது கணிப்பு எனது ஊர் குடும்பங்களினதும் அவர்களது இறுதித்தருவாயில் உள்ள நோயாளிகளினதும் பல்வேறு கஷ்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இது ஒரு கசப்பான ஆனால் நிதர்சனமான உண்மை. "கடவுளுக்கு நன்றி”

எமது விடத்தல் தீவு ஊர் மக்களின் நோய்கள் தொடர்பாக அவர்கள் பாவிக்கும் பேச்சு மொழி.

இலங்கை வட பகுதி, கிழக்கு பகுதி மக்கள் தமிழ் பேசும் மக்கள் என்றாலும் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களுக்கும் பேச்சு மொழியில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு விடத்தல் தீவும் விதிவிலக்கானது அல்ல.

எனது ஊர் மக்கள் தமது உடல் உபாதைகள் தொடர்பில் தனிவிதமான சில மொழி பிரயோகத்தை பாவிக்கின்றனர். ஓர் ஊர் மகனாக இவற்றை புரிந்துகொள்வது எனக்கு எளிதானதாக இருந்தது. உதாரணமாக * நாரி கொதிக்குது

*உடம்பு நெருப்பா கொதிக்குது

* கண் எரியுது

* கால் விறைக்குது

போன்ற பல மொழி பிரயோகங்கள் உள்ளன.

விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலையில் தினமும் சராசரியாக வெளி நோயாளர் பகுதியில் 32 நோயாளர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் ஒருவரை பார்வையிடுவதற்கு வைத்தியர் ஒரு சில நிமிடங்களையே செலவிடுகின்றனர். ஆனால் தனியார் மருத்துவ நிலையங்களில் சற்று கூடுதலாக நேரம் எடுக்க வேண்டியிருக்கும். இது அவசியமானது மட்டும் அல்ல நோயாளிகளின் எதிர்பார்ப்பும் ஆகம்.

எங்கள் ஊரில் பல நோயாளர்கள் மருத்துவ ஆலோசனைகளும் ஒரு சிகிச்சை முறை தான் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் மருத்துவ ஆலோசனை மட்டும் போதுமானதாக இருந்தாலும் பெரும்பாலும் நோயாளர்களால் ஒரு சில மாத்திரைகள் என்னிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. மருந்து இல்லை என்றால் வைத்தியம் இல்லை என்று அர்த்தமல்ல என்பதை அவர்களுக்கு கற்பிப்பதும் ஒரு வகை முன்னேற்றமான செயற்பாடு ஆகும். பல சமயங்களில் நோயாளிகளுடன் ஆன உரையாடல் உணர்ச்சி பூர்வமானதாக அமையும். சில நோயாளிகள் தங்களின் நோய் தொடர்பான விடயங்களுடன் தங்களின் தனிப்பட்டபிரச்சனைகள் அல்லது சோகங்களையும் என்னுடன்பகிர்ந்துகொள்ளவிரும்புவார்கள். இவ்வாறு பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ஒரு மருத்துவராக என்னால் இதை தவிர்க்க முடியாமல் இருந்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் மருத்துவராக இருப்பதை மறந்துவிட்டு செவிமடுப்பவராகவும், ஆறுதல் அளிப்பவராகவும், ஆலோசணை வழங்குபவராகவும் மாறிவிடுகின்றேன்.

பல சந்தர்ப்பங்களில் எனது மருத்துவ அறிவை நோயாளர்களின் மேற்கூறிய உணர்வு பூர்வ விடயங்களுடன் சமப்படுத்தி கடமை புரிய வேண்டி இருந்தது.

"மக்கள் மாத்திரைகளுக்காக மட்டும் என்னிடம் வரவில்லை மாறாக தம் உணர்வுகள் என்னால் கேட்கப்படுவதற்காகவும் வந்தார்கள்”.

மட்டப்படுத்தப்பட்ட மருந்து வகைகள், குறைவான நோயறிதல் வசதிகளை கொண்ட எனது மருத்துவ நிலையத்தில் நோயாளிகள் திருப்தியுடனும், நம்பிக்கையுடனும், ஒரு வித நிவாரணத்துடன் வெளியே

செல்வதை உறுதி செய்ய வேண்டி இருந்தது.

பல சந்தர்ப்பங்களில் பெரும்பாலான நோயாளர்கள் தங்கள் உடல் உபாதைகள் சில மணித்தியாலங்களிலோ அல்லது உடனடியாகவோ அல்லது சில நாட்களுக்குள்ளோ இல்லாது போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இது அவர்களின் நோய் வகைகளை பொறுத்தது என்பதை நான் சரியாக புரிய வைக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் என் சிகிச்சை மீது அவர்கள் சந்தேகம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். இன்னுமொரு முக்கிய விடயம் யாதெனில் சிகிச்சைக்கான கட்டணம் பெற்றுக் கொள்ளல். சில வேளைகளில் மருந்துகளின் விலைகள், பரிசோதனைக்கான செலவுகள் போன்றவை உயர்வாக இருக்கும் போது மொத்த கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இது எனக்கு தர்ம சங்கடமான நிலையை தோற்றுவிக்கும். கட்டணம் தொடர்பாக எனது மக்கள் என்னைப்பற்றி தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக விடயங்களை தெளிவாக விவரிக்க வேண்டியுள்ளது.

மருந்து வகைகளை நோயாளர் எதிர்பார்ப்பதில் கூட வேறுபாடுகள் உள்ளன. சிலர் குறைந்த அளவிலான குறைந்த வகையான மருந்துகளுடன் திருப்தி அடைவதில்லை. அதிக அளவில் எதிர்பார்ப்பார்கள். சிலர் இதற்கு எதிர்மாறான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவும் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சரியான விளக்கம் கொடுக்க கஷ்ரப்பட வேண்டி இருந்தது.

*

ஒழுங்காக சிகிச்சை முறை தொடராமை

இதுவும் ஏனைய கிராம மக்களை போன்று எனது கிராமத்திற்கு உரிய பிரச்சனை தான்.

மருந்து வகைகளை ஒழுங்காக எடுத்துகொள்ளாமை.

தேவையான மருத்துவ சோதனைகளுக்கு ஒழுங்காக சமூகம் தராமை

கிளினிக்குகளுக்கு ஒழுங்காக சமூகம் தராமை

குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துவகைகளை பாவித்த பின்னர் தமது உடல் நிலை சீராக இருப்பதாக உணர்ந்து மருந்து எடுப்பதை நிறுத்தி விடுதல்

உரிய மேலதிக பரிசோதனைகள் அல்லது மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் போது அவ் ஆலோசணைகளை பின்பற்றாமை.

போன்றபலவிடயங்களைகுறிப்பிடலாம். இவற்றில்மேலதிகபரிசோதனைகள்அல்லதுமேலதிகசிகிச்சைகள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியும் அதை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருத்தல் என்பது நான் இங்கு சற்று ஆழமாக தெரிவிக்க வேண்டியதொன்று விடத்தல் தீவு மக்களை பொறுத்தவரையிலும் இது ஒரு கவனிக்கதக்க குறைபாடு ஆகும். பல அனுபவங்களில் எனது ஊரிலேயே மூன்று இளம் நோயாளிகளிடம் தற்செயலாக அவர்களுக்கு புற்று நோய்க்குரிய அறிகுறிகளை நான் அவதானித்து உடனடியாக அது தொடர்பான சில முக்கிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறத்தினேன்இ ஆனால் அவர்கள் என் அறிவுறுத்தலுக்கு அவர்கள் நகைச்சுவையாக "சும்மா இருங்கள் டொக்டர் சாவு எப்பவும் வரும், நாங்கள் பயப்படவில்லை” என்று கூறினார்கள். எந்தவித மேலதிக நடவடிக்கைகளுக்கும் செல்லவில்லை. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே புற்று நோயின் தாக்கம் அதிகரித்து குணமாக்க முடியாத நிலைக்கு சென்று அவர்கள் மரணத்தை தழுவி கொண்டார்கள். உண்மையில் ஆரம்ப காலத்திலேயே அவர்கள் வேண்டிய சிகிச்சைக்கு சென்றிருந்தால் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்புண்டு. இது ஒரு கவலைக்குரிய விடயமாகும். மேலும் இன்னுமொரு பொதுவான விடயத்தையும் நான் கண்ணுற்றேன். அதாவது ஆங்கில மருத்துவம் (மேற்கத்தேய மருத்துவம்) ஆயுர்வெத அல்லது பாரம்பரிய மருத்துவம் ஆகிய மருத்துவங்கள் காணப்படுகின்றன. ஆனால் வௌ;வேறான நோய்களில் பல ஆங்கில மருத்துவத்தாலும் வேறு பல ஆயுர்வேத மருத்துவத்தாலும் குணப்படுத்தமுடியம். ஆனால்சரியானமருத்துவமுறையை தெரிவு செய்யாமல் இரண்டையும் தவறான முறையில் பாவித்தல் அல்லது இரண்டில் ஒன்றை முற்றாக புறக்கணித்தல் போன்ற செயற்பாடுகள் உயிர் ஆபத்தை விளைவிக்ககூடியவை. இவ் விடயத்திலும் விடத்தல் தீவு பின்னடைவான நிலையில் இருந்ததை அவதானித்தேன்.

எனது ஊர் மக்களை பொறுத்தவரையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக செல்வதற்கு தயங்கும் நிலை காணப்படுகின்றது. மன்னார்வைத்தியசாலையில் நடைபெற்ற சில சம்பவங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். இங்கு இவர்கள் தாம் தவறான சிகிச்சைக்கு உள்ளாவோம் அல்லது மருத்துவ சிகிச்சையில் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்று கூற கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்கு ஒரு படி மேலாக மன்னார் வைத்தியசாலைக்கு சென்றால் சாவு தான் என்று கூறுபவர்களையும் கண்டிருக்கின்றேன். இங்கு இந் நிலை மாற வேண்டுமாயின் மன்னார் வைத்தியசாலையின் சேவை மேம்படுத்தப்பட்டு ஒழுங்கான நிர்வாகத்திறனுடன் இயக்கப்பட வேண்டும். அத்துடன் எம் மக்களுக்கு மருத்துவ சேவை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட வேண்டும்.

இனி மற்றுமொரு விடயத்திற்கு செல்வோம்

விடத்தல் தீவு கிராமமும் அதை சூழ உள்ள கிராமமும் விவசாய மற்றும் கடல் தொழில் சார்ந்தவையாகும். பெரும்பாலான சமயங்களில் இத் தொழில் சார் விபத்துக்கள் அல்லது நோய்கள் அல்லது காயங்களுடன் எனது மருத்துவ நிலையத்திற்கு பலர் வருவார்கள். உதாரணமாக விடத்தல் தீவில் இருந்து கடல் உயிரினங்கள் அல்லது நஞ்சுகளால் தாக்கபபட்டவர்கள் சிகிச்சைக்காக வருவார்கள். கெழுறு மீன், திருக்கை மீன், சுங்கன் மீன் பொன்ற மிகுந்த வலியை தரக்கூடிய முட்களை கொண்ட மீன்களின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் இதற்குள் அடங்கும். மற்றுமொறு பொதுவான விடயம் "சுணை அடித்தல்” என்று சொல்வார்கள். இது ஒரு வகை ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய நஞ்சு ஆகும்.

மேற்கூறிய சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் மிகுந்த வலியுடனும், சுவாசிப்பதற்கு சிரமத்துடனும் காணப்படுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களது வலியை குறுகிய நேரத்தில் குறைப்பதும், உடல் நிலை மேலும் சிக்கலாகாமல் தடுப்பதும் எனக்கு சவாலாக இருக்கும். ஆனால் இவற்றில் நான் சாதித்து இருக்கின்றேன்.

மேற்கூறிய விடயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நான் எனது ஊரில் பிரபலம் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

அடுத்ததாக இன்றைய முக்கிய சமூக பிரச்சினையான விடயத்துக்கு வருவோம். ஆம் மதுப்பழக்கம், புகையிலை மற்றும் புகைத்தல், போதைப்பொருள் பாவனை என்பவற்றுக்கு வருகின்றேன். மேற்கூறிய விடயங்களுக்கு எமது ஊரும் விதிவலக்கல்ல தற்போது இது பெரும் பூதாகரமான பிரச்சனையாக எமது ஊரில் தலையெடுத்துள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் இப்பழக்கங்களினால் கட்டுண்டு கிடக்கின்றார்கள். இவற்றை கட்டப்பாட்டுக்குள் அல்லது ஒழிப்பது இலகுவான விடயம் அல்ல சுகாதார திணைக்களம், சட்டம் ஒழுங்கு தொடர்பான திணைக்களம், சமூக அமைப்புகள் மற்றும் மத அமைப்புகள் போன்றவை ஒன்று சேர்ந்து இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

இறுதியாக இக் கட்டுரையானது ஒரு மருத்துவ அறிவுரை அல்லது சுகாதார கட்டுரையாக நான் எழுதவில்லை. எனது ஊருடன் எனக்கு ஏற்பட்ட மருத்துவ ரீதியான அனுபவங்களுடன் எனது மனதில் தோன்றிய கருத்துக்களையும் சேர்த்துள்ளேன்.

விடத்தல் தீவு மக்களின் புவி சார்ந்த சமூக பொருளாதாரம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, மத நம்பிக்கை சார்ந்த மற்றும் வாழ்க்கை யதார்த்தங்களை மதிக்கும் அல்லது இணைந்து பயணிக்கும் ஒரு கிராமப்புற சுகாதார அமைப்பை நான் கனவு காண்கின்றேன். என் வாழ்நாளில் இந்த கனவு மெய்ப்பதை நான் காணாமல் போகலாம். ஆனால் இதை நான் ஒரு பதிவாக வரலாற்றில் எழுதுகின்றேன். நான் பார்த்தேன், நான் வாழ்ந்தேன், நான் பழகினேன், நான் சிகிச்சை செய்தேன். நான் அக்கறை காட்டுகின்றேன்.

ஒட்டுமொத்தத்தில் கிராமபுற மக்களை நினைவில் கொண்டுள்ள ஒரு அரசாங்கமும், கிராம மக்களுடன் இணைந்து பயணித்து சேவையாற்றும் ஒரு சுகாதார கட்டமைப்பும் எதிர்கால தேவையாக உள்ளது இறுதியாக இக் கட்டுரை ஏதேனும் ஒரு நல்ல நோக்கத்திற்கு பங்களிப்பு செய்யுமாயின் நான் மிகுந்த மன நிறைவு அடைவேன்.மன்னாருக்காக, விடத்தல் தீவிற்காக, மருத்துவத்திற்காக அர்த்தமுள்ள எதிர்கால மாற்றத்திற்காக செயற்படும் அனைவருக்கும் சமர்ப்பணம்.

மாபெரும் வரலாற்று நிகழ்வான “விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு” எனும் நிகழ்ச்சி நிரலில் நானும் எனது கட்டுரையினூடாக ஒரு பங்காளி ஆகியதை இட்டு பெருமிதம் அடைகின்றேன். இச் சந்தர்ப்பத்தினை வழங்கிய எனது சகோதரர் பேராசிரியர் ஞானசீலன் ஜெயசீலன் அவர்களுக்கும் மாநாட்டு ஒழுங்கமைப்பு குழுவிற்கும் எனது நன்றிகள். முக்கியமாக வரலாற்றில் முதலாவது வடக்கு மாகாணசபையில் நான் சுகாதார அமைச்சராக பதிவேற்றம் பெற்றமைக்கு அடிப்படை உழைப்பை எனக்கு தந்த விடத்தல் தீவு என் சொந்தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகளை தெரிவித்து விடை பெறுபவன். உங்களில் ஒருவன் விடத்தலூரான் “மருத்துவர் ஞானசீலன் குணசீலன்”.