11. எம் ஊரும் யுத்த வடுக்களும் - மேரி மற்றில்டா

இலங்கை திரு நாட்டில் அழகிய தீவான மன்னாரில் அழகிய நில வளத்தையும், கடல் வளத்தையும், நீர் வளத்தையும் கொண்ட மாதோட்ட பிரிவில் அகிலத்தையும் ஆட்டுவிக்க கூடிய எல்லா வளத்தையும் தன்னகத்தே கொண்ட எம் கிராமமாம் “விடத்தல் தீவு” என்னும் கிராமம் பல இன, மத, மொழி எல்லாவற்றையும் இணைத்து வாழுவதே, வாழ்ந்து வருகின்றதே எம் கிராமம். எல்லா வளங்களையும் கொண்ட எம் மண்ணிற்கு வந்த சோதனைகள் அதிகம் 2006ம் ஆண்டு தொடங்கிய யுத்த சூழ்நிலையால் அழிந்த எம் ஊரின் வரலாறு தான்...

சூரியன் வெளுத்து தனது கதிரை பரவலாக விரித்து மனத்திரையில் உற்சாகத்தையும், வெளுப்பையும் ஈடேற்றிக்கொண்டிருந்தான். மனங்களெல்லாம் மலர்ந்து பூத்துக் குழுங்கிய வண்ணம் சின்னஞ்சிறிய மழலைகள் பள்ளியை நிரப்பிய காலத்தில் வரைந்த ஓவியங்களினாலே பாடசாலை வெண்மையினால் பூரிப்பெடுக்க...2006 க்கு முன் எம் கிராமம் ஒற்றுமை, மனபலம், திருவிழாக்கள், பவணிகள், களியாட்டங்கள், விளையாட்டு வித்தைகள், கலாச்சார நிகழ்வுகள் நிறைவுகள், கல்வி, அரசியல் என பல துறைகள் மற்றும் கலை கலாச்சார சூழல்கள் என்பவற்றிலே எம்மை மிஞ்சிட இவ்வுலகத்தில் யாரும் இல்லை. மாலை நேரத்தில் நெளிந்த நாணலுடன் இடையில் குடத்துடனும் இள மங்கையர் எமது பூர்வீக கிணற்றில் கூடி கும்மாளமடித்து நீர் அள்ள..... மங்கையரை மயக்கும் நோக்கில் தேவர்கள் ரோட்டருகில் உள்ள "வக்கில்” வசை பாடி விமர்சிக்க பழைய மாணவர்கள், இளைய சமூகம் மைதானத்தை நோக்கி பயணத்தை தொடங்க....

அதிகாலை இரண்டு மணிக்கு குளவாசலை பார்க்க சென்றடைவார் அம்மா, அம்மம்மா என வீதியெங்கும் அசுத்தம் களைய படையெடுத்து மகிழும் எம்மவர்கள் குளிப்பதில் என்னவொரு பேரின்பம் அவ்வேளை அனைத்து சொந்தங்களும் ஒன்றாக குளத்தை கலக்கி மகிழ்ந்து வந்த பொழுது... பாவம் என்ன? பரிகாரம் என்ன? எல்லாம் எம்மவர்களின் திருவிழாக்களில்

ஒப்பேற்றிகடவுளை போற்றி துதி பாடிபுகழ்ந்து பாடல்களாலும், மேளங்களாலும், சங்கீத வார்த்தைகளாலும் மகிழ்ந்து கொண்டாடிய தருணம் .

மருதமும், நெய்தலும் கண்டு களிப்படைந்து பாய் மரக்கப்பலிலே.... வானிசை பாடி உடலை வருத்தி உதிரத்தை துறந்து உழைத்து பார் எங்கும் எம்மவர் உழைப்பில் உயர்ந்தோங்கிய நன்னிலைக்காலம் ...... ஆசான்கள் என்றும் எமது உயர்வையும், ஒழுக்கத்தையும், விரும்பி எம்மை ஏற்றி வைக்க பிழை என தெரிந்தால் பிரம்பினால் அன்பு மழை பொழிந்து எம்மை உயர்த்திய பொற்காலம் .

எமது கிராமம் உலகளாவிய ரீதியில் பேசும் பொருளான வைரமானது. அனைத்து துறைகளையும், துறையினரையும், கொண்ட எம் சமூகத்தினரை யாராலும் இலகுவில் வீழ்த்தி விட முடியாது. எம் ஊரின் சிறப்பியல்புகளையும், தனித்துவத்தையும் சொல்ல வார்த்தைகளே போதாது அவ்வாறு பெருமிதம் கொள்ள வைக்கிறது. எமது அழகு, எழில் கொஞ்சும் எழுது மண்ணே ..... விடத்தல் ஊர்..... இதை அசைத்து பார்க்கவே .........

2006ம் ஆண்டு தொடக்கத்திலே விடுதலைப்புலி அமைப்பினர் எமது கடற்பரப்பினால் மருந்துகள், உணவுப்பொதிகள், இதர பொருட்களை பண்ட மாற்று செய்ய உக்கிரம் கொண்டனர். என்ன வளம் இல்லை.... என்பதனை பெருமையோடு கூறி தமது ஆட்சியை நடாத்தி வந்தனர். எம்மவர்களும் பயத்தாலும் பற்றாலும் வேலையை அவர்களுக்கே உரித்தாக்கி வாழ்ந்த நேர காலமது .........

எமது வளத்தில் பிரதானமான வளமே நெய்தலே அவற்றை எம் தேச விடுதலைக்காய் பயன்படுத்த முயன்றாலும் எம்மவர்களின் உயிரினும், உடலிலும், சமூகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. கடலில் மீன்பிடிக்க சென்றதான எம்மவர்களை இடிக்க நேர்ந்த கலியுக காலம் எம்மவர்களின் கனவுகளில் ஆளரவமற்ற வனாந்திரத்தை உருவாக்கியது வீட்டுக்கொருவர் நாட்டைக்காக்க புறப்பட்டனர் சிலர் விருப்பத்தோடு .... பலர் பிரச்சார நடவடிக்கை மற்றும் வீதி நாடகங்கள் ஊடாக உந்தளி சென்றனர். ஆனால் இக்காலத்தில் எம்மூரில் பல இளையோர் ஆட்சேர்ப்பிற்கு உட்பட்டனர். எமது போர்ச்சூழல் மாற்றம் பெற விடுதலைப்புலிகள் ஆட்சேர்ப்பிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு எமது எதிர்கால சந்ததியினர் பலர் தமது உறவுகளை காப்பாற்ற இணைக்கப்பட்டு சொல்லண்ணா துன்பத்தை தந்த காலமாக அமைந்தது. அத்தோடு அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் பாரிய நெருக்கடி, உறவுகளை சந்திப்பதில் விரிசல், பாடசாலை கல்வி வாழ்க்கை வீழ்ச்சி, ஆசிரியர்களின் வருகை கேள்விக்குறி? கடலுக்கு சென்றவர் வீடு திரும்புவாரா என பல போராட்டத்தோடு கழித்த காலங்கள் அவையாகின..........

எம் பாடசாலையின் வளர்ச்சியிலும், பற்றிலும், தன்னை மிஞ்ச யாரும் இல்லை என எமது சமூகம் சார்ந்த கல்விமான்களையும் பதம் பார்த்த யுத்த காலம் 2007.02.27 திரு கிறிஸ்டியான் ராஜகோன் அதிபர் மற்றும் திரு சிலுவைராசா அமலநேசன் ஆகியோரை இழந்தோம். தொடர்ந்து எம்மவர்கள் இறைவேண்டுதலுடன் ஆலயங்களிலும் "எறிகணைகள் எம்மை தேடுவதும் கிபிர் விமானம் வானில் வலம் வருவதையும் வழமையாக்கினோம்.வீடுகள் தோறும் பதுங்கு குழிகள்... எவ்வேளையிலும் எமது பாதுகாப்பு பதுங்கு குழியே..... பாடசாலையிலும், பொது இடங்கள், கடைகள் என ஓர் இடமும் பதுங்கு குழிகளுக்கு பஞ்சமில்லை......

இவ்வாறு கழிந்த காலத்தில் யுத்த நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இழப்புக்கள் அதிகரித்து மக்கள் எம்மவர்கள் அச்சத்தில் எமது உயிரினும் மேலாக நேசித்த மண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்வு வெறுப்பபுடன் நகர்ந்தது.

2007.03 ம்மாதத்திலிருந்து நாளாந்தமாக .........அயல்கிராமங்களுக்கு அடைக்கலம் புக நேர்ந்தது கொஞ்ச உறவுகள் மூன்றாம் பிட்டி, கொஞ்ச உறவுகள் தேவன்பிட்டி, வெள்ளாங்குளம் என பிரிவு பட்டு வாழ்ந்தாலும் ஊரவர்களின் உறவு நிலையில் மாற்றம் ஏதுமில்லை....

"எம்மவர்கள் எங்கும் எதிலும் சளைத்தவர்கள் அல்ல” சென்ற பாடசாலைகளில் எல்லாம் எம்மவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு என புகழார மழை.

எம்மை தோற்கடிக்க யுத்த களம் எதிர்த்து நின்ற போதும் எமது ஆசான்களான கற்றோர்கள் எல்லாம் துணை நின்றனர். எறிகணை எம்மை நோக்க பதுங்கு குழி எம்மை பதம் பார்க்க " மரணச் செய்திகள் மனதை வருடி

எல்லோரையும் வாடச் செய்தன.......”

தொடர்ந்து எம் சோக வரலாறு எவ்வாறு குதுகலமாக நம்மவர் வாழ்ந்தார்களோ அவ்வளவாய் துயரம் துரத்தியது எறிகணைகள் ஓர் பக்கம். இடம்பெயர்வுகள் மறுபக்கம்.... காற்றோடு காற்றாய் கலந்து வந்த துயரச் செய்தி – மும் மங்கையர்களின் ஆண்டானாக வீட்டில் வாழ்ந்தவன், பாடசாலை நாட்களின் நினைவுகளின் தனி ஆணாக நின்று வீர செயல் செய்து வியக்க வைத்தவனின் அமைதியான இறப்பு செய்தி ..! 2007.06.05. எமது விடத்தலின் வித்தாக செல்வன் நீக்கிலாஸ் வின்சன். பல உறவுகள் தமது உடமைகளையும் இழந்து உயிரைக்காப்பாற்ற கடலாலும், தரையாலும் எண்ணியபோது தனது வாழ்வை விடத்தல் மண்ணிற்கே சொந்தமாக்கியவள்....இவள் இருக்கும் இடம் சிரிப்பினால் நிறைந்து குதுகலிக்கும் கலியுகனுக்கு இவன் சிரிப்பு பிடித்து போனதோ..... அன்று 2008.01.26 அவளும் சென்றாள்.... செல்வி. மரியாம்பிள்ளை டயனிசாலினி

இடம்பெயர்வுகளும் சோக செய்திகளும், எறிகணைகளும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி எம்மை அயலவர்களின் ஊரில் கூட அங்கும் எம்மை கண்ணீரில் மூழ்கடிக்க வந்தது . கட்டாய ஆட்சேர்ப்பில் பலவந்தமாக தன்னை இணைத்து கொண்டவளின் மரண செய்தி “ நிமிர்ந்த நன்நடையும் நேர் கொண்ட பார்வையும்” என்பதற்கு சொந்தகாரி செல்வி. கில்லறி டயானா அவளின் சோக செய்தி பாடசாலைக்கல்வி வாழ்வில்தனக்கெனவரலாறு கொண்டவள்இவள்இக்கொடியயுத்தம் அவளையும் 2008.04.23 அழைத்ததுவோ .... எம் சமூகத்திற்கு தொடர்ச்சியான இழப்பிற்கான காலமாக மாறிய போதும் எம்மவர்களின் பயணங்கள் ஓயவில்லை. துவிச்சக்கரவண்டியிலும், மோட்டார் சைக்கிலிலும், உழவு இயந்திரத்திலும், நடைகளிலும் இடம்பெயர்வுகள் சொந்தமாயின.........

சொந்தங்களை, உறவுகளை இழந்த நிலை கண்டு எம்மருங்கிலும் உள்ள மரமெல்லாம் இலையுதிர்த்து சோக செய்தி பரப்பிட .....

நிமிடங்களை கடப்பதே பெரும் யுகமாய் மாறியது......

என்னதான் என்றாலும் இழப்புக்கள் நீள்கதையாகின ....

அன்று ஓர் காலை வேளை கதிரவன் மன மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொழுது கூடவே வந்தது பேரிடியான தலைப்பு – 2008.04.26 எமது மண்ணின் மகத்தான மகள் றூபன் பிறேமினியின் அகால செய்தி.

கதை

ஆடிப்போயினர் எம்மவர் மெலிந்த உடலமைப்பை கொண்டு எந்நேரமும் கதையளப்பாள் சொல்லியே அனைவரின் இதயத்திலும் இதமாய் வாழ்ந்தவளின் இழப்பு ஈடு இல்லாமல் தலை விரித்தாடியது குடும்ப பாரத்தை சிறு வயதிலேயே சுமந்த வீரப் பெண்ணாய் மண்ணுக்கு சொந்தமாகி கதிகலங்க வைத்தவள் எம் சமூகத்தை.

இவ்வாறே நாட்கள் சில கடந்தன .... எம்மவர்களின் இடம்பெயர்வும் குறையாமல் நீண்டது ... ஓர் நாள் ஓர் ஊர் என வாழ்ந்தனர். ஆனாலும் ஒற்றுமையும், இறையன்பும், ஆளுமையும் குறையாமல் காலத்தை கடத்தினர் ....

எம்மவர்களுக்கு எத்தனை புதிய உறவுகள், நண்பர்கள், பாடசாலைகள், ஆசான்கள்....... இவ்வாறு எல்லாம் நீண்டு கொண்டு போனது ஓர் நாள் ஒரு பாடசாலை வாரத்தில் ஐந்து பாடசாலை .... எம்மை போல் படித்தவர்கள் யாரும் இல்லை. இலங்கை இராணுவம் எம் நிலத்தை ஆக்கிரமிக்க போரின் எண்ணலைகள் உயர்ந்தோங்க ... எம்மவர்களும் ... முழங்காவில், ஜெயபுரம் என தறப்பாள்களால் ஆன கொட்டகைகளை அமைப்பதும் விச ஐந்துக்களை அழித்து பாதுகாப்பு பதுங்குகுழிகளை அமைத்து முடிப்பதற்குள் எறிகணை எம் நிலத்தை பதம்பார்க்கும். பின்னர் என்ன அவசர அவசரமாக கொட்டகைகளை பிரிப்பதும், ஓடுவதும், எறிகணைக்கும் வான்படைக்கும் அஞ்சி பதுங்கி ரோட்டில் கீழே விழுந்து எழுவதுமே எமது பிரதானமானது

இவ்வாறு வழிப்போக்கராகி போனோம் எம்மண்ணையும், உறவுகளையும் இழந்து அநாதைகளாக பல்வேறு ஜாதி, மத இனத்தவருடனும் புதிய மாவட்டங்களுக்கும் சென்றோம். அங்கலாய்த்த சுற்றுலாவாககிளிநொச்சி மாவட்டம் எல்லா கிராமங்களிலும் எம்மவர்கள் பரந்து பட்டு வாழ்ந்தனர் .... நமது கிராமத்தவர்களின் இழப்பு குறைவு பட்டாலும் உயிர் சேதங்கள் குறைவடையவில்லை. பாலகர் தொடங்கி முதியோர் வரை அங்கவீனராக்கப்பட்ட துன்பியல் சம்பவங்கள் பல நூறு.....

எம்மவர்களின் இருப்பிடங்கள் விரிந்து சென்றது. உழவனூர், இரணப்பாலை, அம்பாள்குளம், கனகராயன், கல்மடு, புதுக்குடியிருப்பு, கைதடி, மாயவனூர் என விரிசலாக வாழ்ந்தனர் .... ஓட்டமும் நடைக்குப் பின் ...... எமது மைந்தன் அவன் ... அவனது சாந்த குணமும், நல்ல சிந்தனையும், பிறரை மதிப்பதில் அவனை மிஞ்ச யாரும் இல்லை அவனையும் இப் பாரிய கொடூர முகம் கொண்ட யுத்த களம் 2008.09.17 கிளிநொச்சி வைத்தியசாலையில் வாரிக்கொடுத்தோம்..... செல்வன் றொபேட் சாள்ஸ் றொபின்சனை ......

இவ்வாறு எமது வரலாறு சொல்லண்ணா துன்பத்தோடு துன்பமாகவே கலந்தது ..... தனது மகளை கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்ததை எண்ணி எண்ணி தானும் சுகயீனமாகி 2008.10.13 அன்று தனது குடும்பத்தை நெஞ்சில் சுமந்த தாயாய் எம்மவர்களிடமிருந்து விடை பெற்றாள் திருமதி.வேதம் மேரி விக்டோரியா ராணியை கல்மடுவில் இழந்தும் தொடர்ந்தது எம் சொந்த சோகக்கதை ....

எம்மவர்களுக்கு எறிகணைகளின் சத்தம் கேளாவிடில் தூக்கமின்மை யுத்த நிலை உச்சம் அடைந்தது மன்னார் மாவட்ட மக்களோடு கிளிநொச்சி மாவட்டமும் சேர்ந்து 2008.10ம் மாதத்திற்கு பின்னர் உறவுகளை மாத்திரம் கரம் பற்றியவர்களாக அனைத்தையுளும் இழந்தவர்களாக உயிரை மட்டும் காப்பாற்றும் நோக்கில் இறை பிரார்த்தனையுடன் கூடிய ஆமை நகர்வை மேற்கொண்டோம். 100m வீதியை கடக்கவே2 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. அதற்கிடையில் பல எறிகணைகள் பல உயிர் சேதங்கள் .... அங்கவீனங்கள்.... காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என தடுமாறி நிலைபெயர்ந்த நிலையிலே ......

எமது அமைதியின் சிகரம் பெண்மையின் பெறுமதியானதிருமதி சுதேஸ் மேரிகியூஜினை துப்பாக்கி தோட்டா பதம் பார்த்து 2009.02.09 சுதந்திரபுரத்திலே தேவிபுர பாடசாலையில் அடக்கம் செய்து விட்டு எம்மவர்களின்

பயணம் தொடர்ந்தது. நின்று அழ கூட முடியாத நிலை வார்த்தையால் வடிக்க முடியாது. எம்மவர்களின் உணர்வுகளை கிளிநொச்சி மாவட்டமும் முடித்து முல்லைத்தீவு எம்மை அன்போடு வரவேற்றுக் கொண்டு நின்றன. இரு மருங்கிலும் அதனூடாக சென்று நிழலில் இளைப்பாறுவதா? நடைபயணத்தை முடிப்பதா? ஒன்றும் வழியில் இல்லை. சிட்டுக்குருவிகளுடன் தாயும் கூட்டுடன் தந்தையுமாய் மக்கள் வெள்ளத்தில் பிரிந்தோரை தேடுவோரும், எறிகணையில் சதையற்று உடலால் நலிவுற்றோரை தூக்கி சுமக்க நாதியற்ற நிலை ... ஐயோ!

யாரை யார் பார்ப்பது சுமப்பது இனம் தெரியாத மர்மம் இறைவா நீயே எல்லாம் என்ன? பிரார்த்தனை மழை பொழிந்தது. எறிகணை வீடுகளையும், வீதிகளையும் பதம் பார்க்க.... உணவின்றி, உடையின்றி தடுமாறும் பல உறவுகள் இன்றும் வலிக்கிறது .... அத்துயரம் சுதந்திரபுரத்தினூடாக தேவிபுரத்திற்கு சென்று எமது மக்கள் கைவேலி, புதுக்குடியிருப்பினூடாக முள்ளிவாய்க்கால் என எம் பயணங்கள் முடியாமல் பல கிராமங்கள் ஊர்களைத்தாண்டியது. 2008ம் ஆண்டு நிறைவுப்பகுதியில் அனைத்து மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்றவை அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டது. இதன் பிற்பாடு 2009ம் ஆண்டு ஆரம்பத்திலேயே வலஞ்சர் மடத்திலே கொட்டகைகளுடன் எம்மவர்கள் தொடர்ந்து "பாதுகாப்பு பிரதேசமென” ஆலயங்களை பாடசாலையை அறிவித்தனர்.

மக்கள் மன்னனை நம்பி வாக்கை நம்பி பாதுகாப்பு வலயத்திற்கு மக்கள் குவிந்தனர். ஆனால் காலை வேளை மக்களின் வயிற்றை நிரப்ப தொண்டர்கள் பலர் "கஞ்சி காச்சி” கொடுக்க அதனை வேண்ட மக்கள் திரண்ட வேளை வந்தது “5 இஞ்சி” எறிகணை எத்தனை உயிர்களை காவு கொண்ட நாள் அது.

இத்தனையிலும் எம்மவர்களின் உயிர்களையும் இறைவன் காத்தார். எறிகணைகளின் வீச்சுக்கள் உக்கிரமடைந்தது .... விமானப்படை வானை வட்டமிட்டது ... இடைவெளி என்பது கொஞ்சமும் இல்லை. பதுங்குகுழிகளே எம்மவர்களின் வாழ்க்கையானது சிறைப்பட்டது. பாதைகளும் இன்றி உணவுப்பொருட்களின் விலையும் எண்ணுக்கடங்காமல் அதிகரித்தது. 2009. 3ம் மாதத்தில் தேங்காய் ஒன்றின் விலை 900/= ஆகி போன வரலாறும், ஓர் பவுன் கொடுத்து ஓர் அங்கர் வாங்கியவர்களும் உண்டு குழந்தைப்பசி போக்கும் எண்ணத்தில் எறிகணைகளுக்கு ஏழை, பணக்காரன் தெரியவில்லை. நல்லவன், கெட்டவன் புரியவில்லை குழந்தை, சிறுவர், பெரியவர் என ஒன்றும் தெரியாது ..... எம்மவர்களை பிரித்தான். 2009.02.24 நாளன்று எமது “ஒட்ட நாயகி" படிப்பென்றால் அப்படியொரு விருப்பு .... எந்நேரமும் தன்னை கல்வியால் செதுக்கியவளின் தகவல் திடுக்கிட வைத்தது அவளே எம் மண்ணின் மங்கை செல்வி. தேவா அமலதாஸ் கனிஸ்ரெலா என்பவரின் பிரிவுச் செய்தியே. உடைந்து உருக்குலைந்தது கல்விச்சமூகம். கெட்டிக்காரி அவளைப்போல் பிறர் வாழ தூண்டுபவளையும் நாங்கள் இழந்தோம். இனிமேலும் எம்மால் பயணிக்க முடியாது என கூறி சுதந்திரபுரத்தினால் நமது உறவுகள் பலர் இராணுவ கட்டுப்பாட்டுக்கு 2008 சித்திரை வருகை தந்தாலும் இரத்த உறவுகளை நாட்டுக்காக விட்டு விட்டு வர மனமில்லாத சொந்தங்கள் யுத்த கணங்களை அனுபவித்தனர்.

2009.04.30 அன்று எமது அருமை ஆசானான செல்வி மதுரநாயகம் மேரி கில்டா என்பவரின் இழப்புச் செய்தி இறப்புச்செய்தி. கண்டிப்பில் இவரைப்போல் ஆசான் இல்லை. விளையாட்டுப்போட்டிகளின் போட்டியாளர்களுடன் தானும் சேர்ந்து ஒடி உற்சாகப்படுத்துபவர், ஊரை நேசித்தவர், கல்விச்சமூகத்தை உருவாக்குவதே இவரது தீராத தாகமானது ஆனால் இறைவன் வெருவாய் அழைத்ததுவோ ... இவ்வாறா இழப்புக்களை சந்தித்த பின்னரும் எம்மவர்களின் மனதில் போராட்டம் நிறைந்தது. முள்ளிவாய்க்கால், புளியம்பொக்கணை என இடம்பெயர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துப்போனது. 2009.04.08 அன்று காலை 7.20 மணியளவில் மீதமுள்ளவர்களை காப்பாற்றும் நோக்குடன் எம்மவர்களின்பலர் குடும்பங்களோடு (20 குடும்பம்) நந்திக்கடலூடாக இராணுவ கட்டுப்பாட்டை அடைய முற்பட்ட வேளை துப்பாக்கி தோட்டா டோறஸ் ஜோண் சகாயராஜா, சகாயராஜா ஜெஸ்லி போன்றோரையும் நந்திக்கடலில் இழக்க நேர்ந்த குரங்கால நாளாகியது.

என்னடா ! கொடுமை உயிரை காப்பாற்ற முனைந்து உயிரை இழந்தோமே சிறுவனின் உயிரைக் காப்பாற்ற இராணுவத்தினர் போராடியும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் (2009.04.08) கிசிச்சை பலனளிக்காது அக்குழந்தைச் செல்வத்தை இழந்தது எம் சமூகம். சகாயராஜா என்பவர் எமது சமூகத்தோடு ஒன்றிணைவாக இருப்பவர். மீனவ பிரச்சனைகளை கையாளுபவரும், சமாசங்களின் தலைவராகவும் செயலாற்றியவர். அவரது உடலை அடக்கம் செய்யமுடியாத அளவு துப்பாக்கி தோட்டாக்களின் இரைச்சல்கள் காதுகளை கிளித்தன. பல உயிர்ச்சேதங்களை தாண்டியும் எமது சொந்தங்கள், உறவுகள் வேறு வழி இன்றியும், மனமின்றியும் இராணுவ கட்டுப்பாட்டை அடைந்ததும் தமது உறவுகளை தேடி அலைந்து கண்டு கொண்டவர்களும், காணாமல் பரிதவித்தவர்களும் பலர்.

சோக வரலாறுடன் கஸ்ரம் நிறைந்த வாழ்வையும் அருணாச்சல், ஆனந்தகுமாரசாமி, செட்டிகுளம், Zome – 04 போன்ற இடைத்தங்கல் முகாம்களில் சொல்லண்ணா துயரங்களை அனுபவித்து சிறு சந்தோசங்களுடனும் அரசு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் எமது உயிரிலும் மேலான எம் மண்ணிற்கு 2009.12.05ம் திகதி அன்று வந்தடைந்தோம். மண்வாசைன எம்மை ஈர்த்து கண்ணீர் துளிகளால் எம்மை ஆனந்தக்களிப்பாக்கியது.