அம்மாவின் நண்டுக்கூழ்."‘ ஊர்க்குருவி “ பொனிப்பாஸ்.

கட்டுத் திருக்கைதனை கீர் கீராய் கூறுபோட்டு கிளி மீனும் வெட்டி காலுடைத்த நண்டினையும் கழுவிச் சுத்தம் செய்து கலந்திட்டு பானையிலே காரியம் ஆரம்பிப்பாள் கூழ்காச்ச அம்மாவே.

சீரகம் பெருஞ்சீரகம் சிறிதாய் கொத்தமல்லி மிளகுடன் மஞ்சளும் மிளகாயும் சேர்த்தெடுத்து அம்மியில் வைத்தரைத்து ஆக்கிய மசாலாவும்

கலந்தே அளவாய் உப்பும் கரைத்திடுவாள் பானையிலே

முற்றத்தில் அடுப்பமைத்து மூன்றுபக்கம் விறகுவைத்து யானைமார்க் குச்சியால்

யாகம்போல் தீ மூட்டி

அடுப்பில் பானைவைத்து

அமர்ந்துமே வட்டமாய் காத்திருப்போம் சகலரும் கூழது கொதிக்கும்வரை

கால்மணி நேரத்தில் கொதித்திடுமே கூழது கம கம வாசனையும் காற்றிலே கலந்துவர கண்டவர் நா ஊற் கூழ்காச்ச அன்று நீ

காட்டிய கைவண்ணம்

கனவிலும் தெரியுதம்மா.

பதமாய்க் கொதித்த கூழ் பக்குவமாய் இறக்கிவைத்து குண்டாளக் கோப்பைகளில் கூழ் நிரப்பி அளவாக நண்டுக் கூழ்தனை நா ஊறக் குடிக்கவைத்த அன்னையே உன்நினைவு அகலாதே மனதைவிட்டு

அடியில் மிஞ்சியதை

அளவாய் ருசிபார்த்து

அன்றுதந்த நண்டுக்கூழ் அடிமனதில் தேங்கியதே ஊற்றித்தர நீயுமில்லை ஊரிலே நாமும் இல்லை கூடிநாம் ஊர்தனில் கூழ்குடிக்கும் நாள் வருமோ.