9. விடத்தல் தீவும் உணவுப்பழக்கங்களும் - தவசீலன் ஞானசீலன்

விடத்தல் தீவு. இலங்கையின் மன்னார் மாவட்டத்தின் மேற்கு கரையோர மீனவ கிராமங்களில் ஒன்று. மீனவ கிராமம் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கணிசமான அளவு குடும்பங்கள் விவசாயம் மற்றும் பிறதொழில்களிலும் ஈடுபட்டு வந்த, மும்மதத்தவரும் இணைந்து வாழ்ந்த ஒரு கிராமம். பொதுவாகவே மீனவக்கிராமங்களில் வகை வகையான கடலுணவுகள் பிடிக்கப்படுகின்ற அன்றே சமைக்கப்பட்டு சுவைக்கப்படும். விடத்தல் தீவும் இதற்கு விதிவிலக்கு அல்ல வீட்டுக்கு வீடு விசேடமான சுவைகளில் பல விதமாக சமைத்து பரிமாறுவார்கள். மின்சாரமோ, குளிரூட்டிகளோ இல்லாத காலங்கள் அவை. சமைக்கப்படும் உணவு வகைகளை பட்டியலிட முயன்றால் அது நீண்டு கொண்டே செல்வது மட்டுமல்லாது உங்களுடைய பசியையும் கிளறி விடும் என்பதால் அதனை விட்டு விடுவோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விடத்தல் தீவு கிராமிய நூலகத்தின் மறுபுறத்தில் மாடு ‘அடிப்பதாக ‘கூறுவார்கள். அந்த இடம் பின்னர் ஊரைத்தாண்டி உள்ள தரவைக்கு மாற்றப்பட்டதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. கிழமையில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இறைச்சிக்கறி உண்பதை ஊரவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். ஊரிலுள்ள அனைத்து குடும்பங்களும் இந்த வழக்கத்தை கொண்டிருந்தனர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த நாட்களில் இறைச்சிக்கறி என்பது ஒரு அரிதான, ஆடம்பரமான உணவு வகையாகவே இருந்தது.

இவ்வாறு கணிசமான அளவு கடலுணவுகள், அதை அடுத்து மரக்கறிகள் மற்றும் அவ்வப்போது இறைச்சிக்கறி என வாழ்ந்த 2000ம் ஆண்டுக்கு முந்தைய தலைமுறையினர் பலரும் இன்றும் ஆரோக்கியமான மூப்படைதலுடன் எழுபது, எண்பது, தொண்ணூறு வயதுகளையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப்பழக்கம் மட்டுமல்லாது உடலுழைப்பு மற்றும் அதிக தேவைகள் அற்ற எளிமையான வாழ்க்கை முறையும் இவர்களுடைய ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கலாம்.

90களில் இலங்கை போன்ற நாடுகளில் பிரபலமாக தொடங்கிய பிராய்லர் கோழி வளர்ப்பு முழு இலங்கையின் உணவுப்பழக்கத்தை தலை கீழாக புரட்டிப்போட்டது என்று சொல்ல முடியும். இதற்கு விடத்தல் தீவும் விதிவிலக்கு அல்ல. கோழி இறைச்சி மட்டுமல்லாது ஏனைய அனைத்து வகை இறைச்சிகளுமே இன்று செயற்கையான பல வழிமுறைகளைப்பயன்படுத்தி இயற்கைக்கு மாறான அளவில் அதீத வளர்ச்சி அடைகின்ற, லட்சக்கணக்கில் கூட்டமாக அடைத்து வளர்க்கப்படுகின்ற பாவப்பட்ட சாதுவான விலங்குகளைக் கொடூரமாக கொன்றே முழு உலகுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது. இன்று விடத்தல் தீவு மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் கோழி இறைச்சி என்பது சாதாரண உணவாகி விட்டது. அப்பாவி மக்களுக்கு உண்மைகளை மறைத்து அவர்களுக்கு எந்த விதமான வாழ்க்கை முறையையும் அது எவ்வளவு கொடூரங்களைத்தாங்கியதாக இருந்தாலும் அல்லது விழுமியங்கள் அற்றதாக இருந்தாலும் அவர்களை அவ்வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்தி விட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,

இன்றைய காலகட்டத்தில் விடத்தல் தீவு மக்களில் பல்வேறு தொழில் புரிபவர்கள் அனைவரினதும் உடல் உழைப்புக்கான தேவை குறைந்துள்ளது. முன்பு கடற்றொழில் செய்தோர் துடுப்பு வலித்து கடலுக்கு சென்று மீன் பிடித்தனர். இன்று பெரும்பாலானோர் எரிபொருளில் இயங்கும் என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்துகின்றனர். முன்னைய காலங்களில் ஆண்களும் பெண்களும் குடி தண்ணீருக்காக பள்ளமடுக்கிணறு வரை நடந்து சென்று தண்ணீரை சுமந்து வந்தனர். அவ்வாறே குளிப்பதற்காக பள்ளமடுக்குளம் வரையிலும் நடக்க வேண்டி இருந்தது. இன்று நீர் விநியோகம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படுகின்றது. அத்தோடு மட்டுமல்லாது மக்கள் தங்கள் அன்றாட வீட்டுப்பணிகளைச் செய்வதற்கு முன்பு போல் உடலுழைப்பை பயன்படுத்த தேவையற்ற வகையில் பல்வேறு வகையான இயந்திர சாதனங்களைப்பயன்படுத்தத் தொடங்கியுள்ள்ளனர். அத்தோடு இந்த மாற்றத்துக்கு சமாந்திரமாக மற்றொரு முக்கிய மாற்றமும் நடந்துள்ளது. அதாவது முன்பை விட இறைச்சி வகைகளின் நுகர்வு ( விசேடமாக பொரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்) பெருமளவில் அதிகரித்துள்ளது. குறைந்த உடலுழைப்பும் அதிகரித்த அளவிலானஇறைச்சிநுகர்வும் இருமடங்குதாக்கத்தை மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இத்தாக்கங்கள் உடனடியாக தெரியாவிட்டாலும் சில தலைமுறைகள் கடந்து ஒரு பாரிய பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுக்கலாம்.

இனி இந்த இறைச்சி சம்பந்தமான சில விடயங்களை எடுத்து நோக்குவோம். மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் ஒரு படிநிலையில் அவன் விலங்குகளை உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். ஆனால் பரிணாமம் என்பது எப்போதும் மாற்றங்களை உள்வாங்கி தேவை அற்றவைகளை விட்டு விடுவது என்பது தான். ஒரு கட்டத்தில் உள்ள வழக்கம் என்பது முடிவிலியாய் எப்போதுமே பரிணாமத்தில் தொடருவதில்லை. எனது பார்வையில் மனிதன் இறைச்சி உண்ணக்கூடிய தன்மையை பரிணாம ரீதியில், உயிரியல் ரீதியில், உடற்றொழிலியல் ரீதியில், உளவியல் ரீதியில் பொருந்தாத ஒரு தன்மையை அடைந்து கொண்டிருக்கும் ஒரு

நிலையில் உள்ளான். அதனால் தான் யாருமே இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதை நேரடியாக பார்க்க விரும்புவதில்லை.இன்று இறைச்சி உண்ணும் பழக்கமானது ஒரு ‘சூழலினால் பழக்கப்படுத்தப்பட்ட ‘ஆனால் அத்தியாவசியமற்ற ஒரு உணவுப்பழக்கமாகவே தொடர்ந்து கொண்டுள்ளது.

மனிதன் தனது சிக்கலான பெருமூளை வளர்ச்சியினால் இன்று மற்ற விலங்குகளை விட கூடுதலான அளவு உயர்நிலை சிந்தனை கொண்ட ஒரு விலங்காக மாறிநிற்கின்றான். இந்த மாற்றத்துடன் சேர்ந்து பிறந்தது தான் உணவுக்காக விலங்குகளைக்கொடூரமாக கொல்ல வேண்டி இருப்பதனால் ஏற்படுகின்ற குற்ற உணர்ச்சி ஆகும். இதைதவிர்ப்பதற்காகவே விலங்குகளைக்கொல்லும் பொது அவற்றை கடவுளுக்கு பலியிடுவதாக அல்லது எதாவது ஒரு சமயச்சடங்குடன் தொடர்புபடுத்தி அந்தக்கொலையை செய்வதற்கான குற்ற உணர்ச்சியை கடவுளுக்கு அல்லது சமயத்திற்கு மடை மாற்றி விடுகின்றனர். இதனை உலகம் முழுவதும் உள்ள மதச்சடங்குகள் அல்லது கலாச்சாரங்கள் அனைத்திலும் அவதானிக்க முடியும். ஏனென்றால் இந்த குற்ற உணர்ச்சி என்பது மனித இனத்திற்கே பொதுவானது. இறைச்சி உண்ண வேண்டும் என்றால் அவரவர் தங்கள் இறைச்சிக்கான விலங்கினை அவரவரே தான் கொன்று உண்ண வேண்டும் என்று ஒரு சட்டம் வருவதாக கற்பனை செய்து கொள்வோம். எத்தனை பேர் இறைச்சி தொடர்ந்து உண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள்? விலங்குகளைக்கொடூரமாக கொல்லும் இந்தக் குற்ற உணர்ச்சிக்கு எதிரானபோராட்டமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. ஏனெனில் மனிதன் உயர்ந்த சிந்தனைத்திறன் கொண்டவன் அல்லவா? அதனால் தான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலால் உண்ணாமை என்ற ஒரு தனி அத்தியாயத்தையே திருக்குறளில் எழுதினார். அது மட்டும் அல்லாது சில மதங்களும் (உதாரணமாக சைவ சமயம்) அவற்றின் உட்பிரிவுகளும் சைவ உணவை வலியுறுத்துவனவாக உருவாயின.

இங்கு கிறிஸ்தவ மதத்தையும் இறைச்சி உண்பது தொடர்பான நடைமுறையையும் சற்று மீளாய்வு செய்வது நலம். கிறிஸ்தவ மதம் என்றாலே தாராளமாக இறைச்சி உண்பதற்கு அனுமதி உண்டு என்பது போன்ற ஒரு தோற்றம் உண்டு அதற்கு ஒரு முக்கிய காரணம் இம்மதம் எப்போதும் மேற்குலக நாடுகளுடன் தொடர்புடையதான ஒரு தோற்றம் உண்டு ஏனெனில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக்கண்டங்களில் வசித்து வருவதாலும் அவர்களுடைய அன்றாட உணவு முறையில் இறைச்சி இடம் பெறுவது தற்போதைய நடைமுறையாகவும் உள்ளது.

ஆனால் பைபிளில் பழைய ஏற்பாட்டிலே மரக்கறி தான் இறைச்சிவகையை விட சிறந்த உணவு தானியேல் அரசனுடைய கதையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் christospiracy எனும் ஆவணப்படம் அமெரிக்காவில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் இயேசு எந்த காரணங்களுக்காக உண்மையில் கொல்லப்பட்டார் என விரிவாக ஆராய்கின்றது. இயேசு நல்லவற்றை போதித்தார், பல நன்மைகளை செய்தார், நோயாளிகளைக்குணப்படுத்தினார் என்றால் மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அன்றைய ஆட்சியாளரின் கோபத்துக்கு ஏன் ஆளானார் எனும் கேள்வி எழுகின்றது. பொதுவாக இயேசு அந்நாட்களில் இருந்த மதச்சட்டங்களையும் சடங்குகளையும் எதிர்த்து போராடினார் என்பது தெளிவாக தெரிகின்றது. அத்தோடு அன்றைய ஆட்சியாளர்கள் மதத்தையும் மதகுருக்களையும் சார்ந்தே ஆட்சி நடத்தினர் என்பதும் தெளிவு.

christospiracy ஆவணப்படம் அந்தக்கால யூத ஆலய வழிபாடு முறைகளை ஆராய்ந்து முடிவாக ஒன்றைத்தெளிவாக்குகின்றது. அன்றைய யூத ஆலயங்கள் அனைத்திலும் மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது மிருக பலிகள்தான். ஜெருசலேம் தேவாலயத்தின் பலிபீடத்தின் கீழே இராட்சத கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி விலங்குகள் கொல்லப்படும் போது உருவாகும் இரத்த ஆறு ஓடி வெளியேறுவதற்கான வழியாகவே இது அமைக்கப்பட்டிருப்பதாக இந்த ஆவணப்படம் குறிப்பிடுகின்றது. இயேசு மத குருமார் செய்த தவறுகளைக்கண்டித்தார் என்பதோடு மட்டும் அல்லாமல் இந்த கொடூரமான கொலைகளைத் தீவிரமாக எதிர்த்தார் என இது குறிப்பிடுகின்றது. அன்பை போதித்தவர் ஆட்டை அறு என்று சொல்லி இருக்க சந்தர்ப்பம் இல்லை என்பது கண்கூடு. இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இந்த கொடூர மிருக பலிகளும் அதன் மூலம் நடை பெறும் இறைச்சி விற்பனையும் தான் இந்த ஆலயங்களின் பிரதான வருமானத்துக்கு வழி வகுத்தது. ஏனெனில் அந்த நாட்களில் சொத்துக்கள் என்றாலே கால்நடைகளும் தானியமும், உலோகங்களும் தான். அவர்கள் இயேசுவைக் கொல்லும் அளவுக்கு சென்றதில் எந்த ஆச்சரியமுமில்லை.

இயேசு இறைச்சி உண்ணாத, இறைச்சிக்காக மிருகங்களைக்கொல்வதை தீவிரமாக எதிர்த்த ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்று இந்த ஆவணப்படம் சொல்கின்றது. ஒரு நிகழ்ச்சி இதனுடன் பொருத்திப்பார்க்கக்கூடியவாறுபைபிளில்குறிப்பிடப்படுகின்றது. ஒரு நாள் இயேசு ஆலயத்தினுள்நுழைந்து அங்கு பலவித பொருட்களையும் முக்கியமாக கால்நடைகளையும் பறவைகளையும் விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகளை சாட்டையால் அடித்து விரட்டியதாக அது கூறுகின்றது. மேலும் அவரது சிறு பராயம் பற்றிய விரிவான தகவல்கள் பெரிதாக பைபிளில் இடம் பெறவில்லை. ஆனால் அவர் முப்பதாவது வயதில் வெளியுலக வாழ்வை ஆரம்பித்த பின்னர் எங்குமே அவர் இறைச்சி சாப்பிட்டதாக குறிப்புக்கள் இல்லை

மீனையும் அப்பத்தையும் சாப்பிட்டதாகவும் மற்றவர்களுக்கும் கொடுத்ததாகவும் குறிப்புக்கள் உண்டு. சிலர் இதற்கு எதிர்வாதமாக இயேசு ஒரு யூதராகையால் சமயச்சடங்குகளின் போது அவர் ஆட்டிறைச்சி உண்டிருக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். அவர் சிறு பராயத்தில் அச்சமய சடங்குகளில் பெற்றோருடன் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் தெளிவடைந்து முழு மனிதனாக தனது வாழ்வைத்தொடங்கிய பின்னர் அவர் இறைச்சி உண்டதாக எந்தக்குறிப்புக்களும் இல்லை என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. அவர் யூத மாதத்தில் உள்ள பல தவறுகளைச்சுட்டிக்காட்டியே தனது போனதைகளை மேற்கொண்டார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

நாம் சாப்பிடும் இறைச்சி வகைகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது பற்றிய அடிப்படை அறிவு மிக அவசியமானது. முன்னர் போல் சிறிய அளவில் கால் நடைகளை இயற்கையோடு பொருந்திப்போகும் வகையில் வளர்த்த முறை சிறிது சிறிதாக மறைந்து வருகின்றது. பெரும்பாலான உயர் வருமானம் கொண்ட நாடுகளில் இந்த முறை ஏறத்தாழ இல்லாமலேயே போய் விட்டது. அதற்கு பதிலாக செறிவு படுத்தப்பட்ட விலங்கு வளர்ப்பு முறை (concentrated animal feeding operation -CAFO) எனும் முறையில் பல்லாயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான விலங்குகளை நெருக்கமாக அடைத்து வைத்து அவற்றின் இயல்பான வாழ்வு முறைகளைத்தடுத்து செயற்கையான பல செயல்முறைகளைக்கையாண்டு அவை அபரிமிதமான வளர்ச்சியடையச்செய்கின்றனர். இன்று இறைச்சிக்காக வெட்டப்படும் பெரும்பாலான விலங்குகள் குழந்தைப்பருவத்திலேயே கொல்லப்படுகின்றன. ஏனெனில் அவை அவ்வளவு வேகமாக வளரும்படி பல்வேறு முறைகளைக்கையாள்கின்றனர். எல்லாமே குறைந்த அளவு காலத்தில் நிறைந்த அளவு லாபம் பார்க்கும் பேராசையின் விளைவுகள் தான். இலங்கை இறக்குமதி செய்யும் இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் எல்லாமே இந்தக்கொடூரங்களின் கறை படிந்தவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. விரைவில் இலங்கையிலும் இவ்வாறான தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். இன்று முக்கியமாக உண்ணப்படும் இறைச்சி வகைகளான கோழி, மாடு, ஆடு, மற்றும் பன்றி இறைச்சிகளின் உற்பத்தியில் அவை தொடக்கம் முதல் எமது உணவுத்தட்டில் இடம்பெறும் வரையிலான செயல்பாடுகளை விபரமாக விபரிக்க முயன்றால் இது ஒரு மிக நீண்ட கட்டுரையாக மாறி விடும் என்பதால் அதைத்தவிர்த்து விடுகிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எமது ஒவ்வொரு இறைச்சிக்கறிக்கு பின்னாலும் அழுகையும் சுதந்திரத்திற்கான ஏங்கலும் உடல் சார்ந்த கொடும் வலிகளும் மனம் சார்ந்த பிரச்சனைகளும் இறுதியாக கொடூரமான இரத்த ஆறு ஓடும் கொலைகளும் உள்ளன என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மைகள்ஆகும். நாம் வாழும் உலகம் அமைதியானதாகவும் அழகுள்ளதாகவும் இருக்கவேண்டும் என நாம் விரும்புகின்றோம். ஆனால் எமது நாவின் திருப்திக்காக எமது வாழ்விடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான (உலகம் முழுவதும் கோடிக்கணக்கான) மென்மையான உணர்வுகளைக்கொண்ட, அபிவிருத்தியடைந்த இந்த சாதுவான விலங்குகளின் மரணக்கதறல்களிடையே அவற்றை பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இதில் வருந்தத்தக்க இன்னொரு விடயம் என்னவென்றால் முழுக்க முழுக்க தாவரங்களில் இருந்து மட்டுமே பெறப்படும் பலவகையான மிகவும் சுவையான உணவுகள் ஏற்கனவே உள்ளதோடு தொடர்ந்து புதிதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டு வருவதை பலர் அறியாமல் இருப்பதாகும்.

அப்படியானால் கடல் வாழ் உயிரினங்களை கொன்று உண்பது மட்டும் சரியானதா என்ற ஒரு நியாயமான கேள்விஇங்கு எழுகின்றது. நான் இங்கு வலியுறுத்துவதுஉயிர்கொல்லாமை எனும் தத்துவம் அல்ல ஏனெனில் நாம் எமது உடலில் தினமும் பல கிருமிகளைக்கொன்று தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் நடக்கும் போது பல பூச்சி புழுக்கள் மிதிபட்டு இறக்க நேரிடலாம். கடல் வாழ் உயிரினங்களான மீன், றால், நண்டு, கணவாய்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது பறவைகளும் பாலூட்டிகளும் மிக உயர்ந்த மூளைத்திறன் உடையவையாக உள்ளன. கடல் வாழ் உயிரினங்கள் தாம் பிடிபடும் வரை ஒரு இயற்கையான வாழ்வு முறையை வாழ்கின்றன. ஆனால் தரை வாழ் பறவைகளும் பாலூட்டிகளும் தொடக்கத்தில் இருந்தே பலவித கொடுமைகளுக்கு உட்பட்டு வாழ்வதுடன் அவை அனுபவிக்கும் உணர்வு பூர்வமான வலிகளும் கொல்லப்படும்போது அனுபவிக்கும் உயிர்வலிகளும் ஏறத்தாழ ஒரு மனிதன் அவ்வாறான சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப்படும்போது அவன் உண்டாகும் வலிகளுக்கு சமமானவை. உயிரின் மதிப்பு ஒன்று தான் என்றாலும் குறைந்த பட்சம் பறவைகளையும் எம்மைப்போன்ற பாலூட்டும் விலங்குகளையும் எமது கொடூரப்பிடியில் இருந்து விடுவிப்பதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்திற்கான முதல் படியை எடுத்து வைப்போம்.