
6. விடத்தல் ஊற்றின் விளைநிலம் ஜோசப்வாஸ்நகர்- ஜேம்ஸ் சுதாகரன்
இலங்கைத்தீவின் வடக்கே அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தின் A 32 பிரதான வீதியில் அமைந்துள்ள பள்ளமடு சந்தியில் இருந்து மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது எமது சொந்த ஊர் விடத்தல்தீவு .எமது கிராமத்தை பொறுத்தமட்டில் கத்தோலிக்க மக்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் ஆகிய மூன்று மதத்தினரும் தத்தமது மத விழிமியங்களுடன் சுமார் ஆயிரம் குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தமை சிறப்பு.எமது பிராதான தொழில் மீன்பிடி மற்றும் விவசாயம் என்றாலும் பிறப்பிலேயே அறிவாற்றலையும் கல்வியறிவையும், தெய்வபக்தியையும்,இறை விசுவாசத்தையும் தன்னகத்தே கொண்ட கிராமம் எமது விடத்தல்தீவு கிராமம் என்றால் மிகையாகாது.
அந்தவகையில் இரண்டு கத்தோலிக்க ஆலயங்களான புனித அடைக்கலமாதா ஆலயம் மற்றும் புனித யாகப்பர் ஆலயமும், அதில் புனித யாகப்பர் ஆலயம் இலங்கை கத்தோலிக்க வரலாற்றில் அமையப்பெற்ற 400 வருடங்கள் பழமைவாய்ந்த முதலாவது யாகப்பர் ஆலயம் என்பதும், அத்துடன் பிள்ளையார் கோவில் மற்றும் இரண்டு பள்ளிவாசல்களும் எம்மவர்களின் ஆன்மீகத்தை வளர்த்தவை என்றால் மிகையாகாது. எமது புனித யாகப்பர் ஆலய திருவிழா ஆடி மாதம் 25 ம் திகதி மற்றும் புனித அடைக்கல மாதா ஆலய திருவிழா புரட்டாதி மாதம் 8ம் திகதி நடைபெறும் நாட்கள், கிறிஸ்து பிறப்பு விழா மார்கழி 25 மற்றும் வருடப்பிறப்பு தை மாதம் 1ம் திகதி போன்ற திருவிழா நாட்களில் ஊரே விழாக்கோலம் பூண்டு அமளிதுமளியாக கொண்டாடி மகிழ்வதும், தைப்பொங்கல், மற்றும் ஏனைய திருவிழா நாட்களில் பிள்ளையார் கோவிலில் விழா எடுப்பதும், நோன்பு பெருநாள் காலங்களில் நோன்பு கஞ்சியை,பலகாரங்களை பகிர்ந்து கொடுத்த உண்ட அந்த நாட்கள் என்றும் பசுமையே.
அத்துடன்கிராமத்தில் அமையப்பெற்ற புனித ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம், அலிகார் மகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் எம்மவர்களின் கல்வியறிவை மிளிரசெய்தவை அதாவது நகர்புற பாடசாலைகளுடன் மற்றும் நகர்புற கிராமங்களுடன் ஒப்பிடுகையில் ஆரம்பத்தில் போதிய அடிப்படை வசதிவாய்ப்புக்கள் இல்லாதிருந்தும் குறிப்பாக கடற்றொழிலில் பெரும் முதல்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி மற்றும் இயந்திர படகுகள் போன்றவை அற்ற நிலையில் சிறியரக கடற்கலங்களை கொண்டு செய்யப்படுகின்ற சிறகுவலை (பட்டிவலை),மணல வலை, வளிச்சல் வலை,கொட்டுவலை, முரல் வலை ,பறிக்கூடு,நண்டுவலை,போன்ற கடற்றொழில் மீன்பிடியில் பெறும் குறைவான வருமானங்களிலும் தங்களின் பிள்ளைகளை படிக்கவைக்கவேண்டும் என்ற எம் பெற்றோரின் உன்னத இலட்சியத்தாலும், பிறப்பிலிருந்து அமையப்பெற்ற அறிவாற்றலின் நிமித்தம் படிப்பில் எம்மவர்கள் ஒளிவீசினார்கள் என்பதும் சிறப்பு.
மன்னாரில் ஆரம்பத்திலிருந்த நல்லாயன் பாடசாலையில் ஆசிரியர்களாக சேவையாற்றியதிலிருந்து தற்போதுள்ள புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் ஆசிரியர்களாக, அதிபர்களாக சேவையாற்றி புனித டிலாசால் விடுதிசாலையில் பெருநிலப்பரப்பிலிருந்து அதிகளவு மாணவர்களை விடுதி மாணவர்களாக கொண்டிருந்ததும் தேசிய பாடசாலையில் பயின்று பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றிருப்பதும் மன்னார் மண்ணில் பல நகர்புற கிராமங்களை புறம் தள்ளி தன்னகத்தே கத்தோலிக்க அருட்தந்தையர்கள், டிலாசால் அருட்சகோதரர்கள் ,,அருட்சகோதரிகள், வலய உதவி கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்,ஆசிரியர்கள் ,மருத்துவர்கள் மருத்துவ மாதுக்கள் பொறியியலாளர்கள், தொளில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் ,கிராம சேவையாளர்,உதவி அரசாங்க அதிபர்கள்,அரச அரசசார்பற்ற திணைக்களங்களின் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச சபை மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
அத்துடன் கிராமம் ஒன்றுக்கு தேவையான பௌதீக வளங்கள் எமதுகிராமத்தில் கிடைக்கப்பெற்றிருந்தன பாலர் பாடசாலை,சனசமூக நிலையம்,வைத்தியசாலை,விளையாட்டுமைதானம், கமநலசேவைகள் திணைக்களம் நெல்லுச்சங்கம் உபதபாற் கந்தோர் மற்றும் நாங்கள் சுத்தமாக தன்னை அழுக்காக்கிகொண்டிருக்கும் எமது பள்ளமடு குளம் போன்றவைகளை குறிப்பிடலாம். விளையாட்டை பொறுத்தமட்டில் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள விளையாட்டுக்கழகங்கள் அனைத்திலும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் பயிற்சிகள் பயிற்றுவிப்பாளர்கள் அற்ற நிலையிலும் உதைபந்து வலைப்பந்து மற்றும் கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களிலும் தடகள போட்டிகளிலும் அதிகளவில் வெற்றிகளை ஈட்டிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலைகலாசாரங்களை பொறுத்தமட்டில் பல நாடகங்களையும் நாட்டுக்கூத்துகளையும் அரங்கேற்றியதுடன், இயல்பிலேயே இனிமையான குரல்வளம் மற்றும் இசை நாடக மற்றும் நாட்டுக்கூத்து கலைநயம் மிக்கவர்களாகவும் பல அண்ணாவிமார்களை தன்னகத்தே கொண்டதும் பல கலாபூசண விருதுவென்ற சாதனையாளர்களையும் கொண்டிருப்பதும் எமது கிராமத்தின்மற்றுமொரு சிறப்பம்சமாகும். 90 களில் எமது கிராம இறங்கு துறையானது மற்றைய கிராமங்களை போல் அல்லாது வாடை,சோளகம் போன்ற இரன்டு பருவ காலத்திலும் கடல் நீர் வற்றாமல் தொழிலுக்கு எவ்வேளையிலும் செல்லும் தன்மை இருந்தாலும், இருப்பதாலும் மற்றும் கடல் வழியாக நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமம் எமது விடத்தல்தீவு கிராமம் என்பதாலும் பாதைகள் பூட்டப்பட்ட காலத்தில் 1990 களின் பிற்பகுதியில் மன்னார், விடத்தல்தீவு நன்பர்கள் நலன்புரி சங்க படகு சேவையை எமது ஊரில் இருந்த உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தினூடாக நடைமுறைப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நகருக்கு வெளியே பல்வேறுபட்ட திறமைகளையும்,கல்வியறிவையும்,அரச அரசசார்பற்ற நிர்வாகத்தில் பணியாளர்களையும் கொண்டிருந்த கொண்டிருக்கும் எமது கிராமத்தின் எழிலை மதிப்பை சிதைக்க 1999 ம் ஆண்டில் இடம்பெற்ற ஒட்டுமொத்த கிராமத்தின் இடப்பெயர்வு மூலகாரணம் என்பேன் உள்நாட்டு யுத்தம் ஈழத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆரம்பகாலத்திலும்,1990, 1995 ம் ஆண்டுகளிலும் அதற்கு பின்னரும் இலங்கையின் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்ற ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் எமது கிராமம் வந்தாரை வாழவைக்கும் வாழ்விடமாகவும் இடைத்தங்கல் இடமாகவும் இருந்தாலும் அவ் நேரத்தில் கூட நாம் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்து இந்தியா செல்லவில்லை. இலங்கை இராணுவம் எமது ஊருக்கு வந்து வீடுகளை எரித்த நேரத்திலும் பூசாக்கு கைது பண்ணி கொண்டுசென்ற போதும், பம்பர், ஹெலிகாப்டர் என்பன குண்டுகளை பொழிந்த நேரங்களில் கூட அயலில் உள்ள படகுத்துறை, ஊத்தங்கரை, வெள்ளப்பிட்டி கோயில்குளம் புதுக்குளம்,கள்ளியடி போன்ற இடங்களில் தங்கியிருந்த நாம் சுமார் ஓரிரு மாதங்களுக்குள் வீடு வந்திருந்தோம்,
அவ்வாறு ஈழத்தில் இடம்பெயராமல் ஒற்றுமையாக இருந்து மகிழ்ந்திருந்த எமது கிராமத்தில் 1999 ம் ஆண்டு ஆனி மாதம் 29 ம் நாள் இடம்பெற்ற எறிகணை வீச்சுக்கள் சரித்திரத்தையே மாற்றிப்போட்டது மார்கழி லீவும் எங்கட ஊரும்.
சிறகு முளைத்த பறவைகளாக தத்தமது தேடலுக்காக தொலைதூரம் சென்ற குருவிகள் மாலையானதும் தாயை தேடி கூடு திரும்புவதை போல ஒரே தாய் மடியில் உறங்கிய பிள்ளைகள் என்ற உணர்வோடு எட்டுத்திசை எங்கிலிமிருந்து ஊருக்கு வரும் உணர்வு மார்கழி மாத விடுமுறை காலம். "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”? இந்த பாடல் வரிகள் எல்லா ஊருக்கும் பொருந்துதோ இல்லையோ எமக்கும் எம் ஊருக்கும் இது ரொம்பவே பொருந்தியிருந்தது.
மன்னார் மாவட்ட 432 பிரதான வீதியிலிருந்து சுமார் 1 km தூரத்தில் மேற்கே உள்ளது எமது சொந்த ஊர் விடத்தல்தீவு காஞ்ச ஊர், கருவாட்டு ஊர் என்று ஏனையவர்களால் வர்ணிக்கப்பட்டாலும் நாமும் எமது ஊரும் கொண்டிருந்த அருமை பெருமைகள் சொல்லி மீளாது. நகர் புற கிராமங்கள் பலவற்றை புறந்தள்ளி ஒரு ஊர் கொண்டிருக்க வேண்டிய பல பெளதீக வழங்களை நாமும் எமது ஊரும் கொண்டிருந்தோம். அந்த வகையில் இரு பாடசாலைகள், இரு ஆலயங்கள், இரு பள்ளிவாசல்கள்,கற்பக பிள்ளையார் கோவில், கிராமிய வைத்தியசாலை, கமநல சேவைகள் தினைக்களம், உபதபாற்கந்தோர், பிரதேச சபை உப அலுவலகம், மற்றும் நெற்களஞ்சிய சாலை, போன்றவை எமதூரில் அமையப்பெற்றிருந்தது.
எமது கிராமத்தில் மின்சார இனைப்பு வசதிகள் இல்லாதிருந்தாலும் குப்பி விளக்கிலும், லாம்பிலும் படித்தும், விடியப்புறம் கடலபோற்று வந்து பள்ளிக்குடம் வந்தும் படித்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று உயர் பதவிகளை வகிப்பவர்கள் எம்மூரவர் என்றால் அது மிகையாகாது. கடற்றொழில் தான் எங்களது சீவனோபாயம், ஆழ்கடல் மீன்பிடி கலன்கள், வலைகள் குறைவு. ஆழம் குறைந்த பகுதிகளில் சிறியரக தோணிகளை கொண்டு செய்யப்படும் சிறகுவலை (கண்டிவலை) தொழிலை மூலதனமாக கொண்டு நகர்புற கிராமங்களோடு பல்வேறு துறைகளில் குறிப்பாக கல்வியில் போட்டி போட்டு எம்மவர்கள் சிறந்துவிளங்கினார்கள். இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊர்களில் இருந்த வசதிவாய்ப்புகள் எமக்கு இல்லாதிருந்தும் நாமும் எமது ஊரும் அடைந்த மகிழ்ச்சியான வாழ்க்கைகும் குதுகலத்திற்கும் அளவே இல்லை. அந்த வகையில் எமது ஊரானது பெருநிலப்பரப்பில் அதிகளவு மக்கள் தொகையுடன் கல்வி,கலை கலாச்சாரம், விளையாட்டு போன்ற பல்வேறுபட்ட வரலாறுகளை கொண்டிருந்தோம்.
இலங்கையின் வடக்கே பருத்தித்துறையில் இருந்து தெற்கை உள்ள தெய்வேந்திர முனை மட்டும் பரந்து வாழும் எமது ஊரவர்கள் ஊரில் ஒன்றுகூடுவது வருடாந்த ஆலயத்திருவிழா இரண்டிற்கும் மற்றும் மார்கழி விடுமுறையில் வரும் நத்தார் பண்டிகை, வருடப்பிறப்பிற்காகவுமே. மார்கழி லீவு, றிப்போட் பள்ளிக்குடத்தில தந்த அந்த நேரம் முதல் வருடப்பிறப்பு மட்டும் நாங்க அடையும் மகிழ்ச்சிக்கும், குதுகலத்திற்கும் அளவே இல்ல றிப்போட் வாங்கி திரவுகுள கட்டால வாற எல்லாரையும் குளத்துக்க தள்ளி விடுவதிலிருந்து ஆரம்பிக்கும் எமது அமளிதுமளிகள். ஆங்காங்கே பல்வேறுபட்ட மாவட்ட பல்கலைகழகத்திலிருந்து லீவுக்கு ஊருக்கு வரும் கைம்பஸ் பொடிகளும் பொம்புளப்பிள்ளைகளும், Broth- ers,Sisters, குருமட மாணவர்கள், மன்னாரிலிருந்து லீவுக்கு வரும் பொடிகள், பொம்புளப்பிள்ளைகளால் நிறையும் எமது ஊர். பள்ளமடு Tகட்டும், ஆலமர ஆம்புள கரையும் மாரி லீவு காலத்தில் நிறைஞ்சு வழியும் . பக்கத்தில இருக்கும் கள்ளியடி குளம், அட்டத்தீவு குளம் மழ தண்ணி நிறஞ்சு வழியும்.
கண் ரெத்த சிகப்பா மாறி வீட்ட இருந்து ஆக்கள் தேடிவருமட்டும் முழுக்கு தொடரும். “டே துலைவாரே அங்கால போய் முழுகுங்கடா என்ட திட்டுகள காதில் எடுக்காது ஒருவருடைய தோழில் எறி பக்கத்தில முழுகிற ஆக்களுக்கு மேல் பாய்வதை எளிதில் மறந்துவிட முடியாது. பின்னேரம் 3 மணி ஆனதும் பைப்படி நிறையும், தன்னி குடத்தோடு வீட்டிலிருக்கிற அம்மாமாரும், அக்காமாரும் முண்டியடித்தபடி பைப்படியில லயின்ல நிக்கிற காட்சியும், பூட்ச தோழில போட்டுக்கண்டு பள்ளிக்குட வளவால கிரவுண்டுக்கு விளையாட போக வாற பொடிகள் அங்க நிக்கிற பொம்புளப்பிள்ளைகளுக்கு ஏதாவது கத சொல்லி நக்கல் விட்டு போறதும் பசுமையான நினைவுகள் போளையும்,கையுமாக ஒழுங்கைகள் எல்லாம் சுற்றி திரிஞ்சு போள விளையாடும் சின்னஞ்சில்லாட்டுக்கள், வட்டக்கோடும், பாண்டி பலகையும் விளையாடும் பொம்புளப்பிள்ளைகள், ஆளயால தெரியாம இருட்டுப்பட்டாலும் தொடரும் கிளிக்கோடும், அதனால் வரும் சில்லற சண்டைகளும் எண்டு ஒவ்வொரு நாளும் கழியும் எமது பொழுதுகள்.
இத விட ஈச்சங்கம்பில தடம் செய்து ஒரு பூவரசு விடாம ஓணாண் பிடிப்பதும், பூத்து காய்க்கும் பூவரசு மரத்தின் மொட்டங்காய், அலரிக்காய்களை பிடுங்கி குழுக்கழாக பிரிந்து ஆளையால் மாறி மாறி எறிந்து விளையாடுவதும், புளியங்காய் புடுங்க பம்போஸ் அடிக்கும், பொன்னாமோட்டைக்கும் போவதும், காக்காப்பாட கமத்திற்கு போய் இலையே இல்லாத மா மரத்தில மா பிஞ்சுகளை தேடுவதும், அங்கிருந்த தென்னை மரத்தில் குரும்பைகளை பிடுங்குவதும் மறப்பதற்கில்லை. வேட்ட நாய்களை சாச்சுக்கண்டு சமைக்க நூடில்ஸ் வாங்கி கொம்புதீவு அட்டத்தீவு என்று அலைஞ்சு திரிஞ்சு முயல் புடிச்சு கறிகாச்சி தின்னுவதும், மாரி வெள்ளத்தால் தரவைக்கு ஏறும் மணலை பிடிக்க மாயவலையுடன் சுடுகாட்டு தரவை, அட்டத்தீவு தரவ,ஊருக்கு கிட்ட இருக்கும் அனைத்து படுவைகளுக்கும் போய் மாயவலையில் மணல பிடிப்பதும் மறக்கமுடியாத நினைவுகள். தரவைகளில் மாரி காலத்தில் தங்கும் மாடுகளை திரத்தி மாட்டு மயிரால் தடம் செய்து கண்ணி குத்தி குருவிகள், பிடிப்பதும் எமது ஊரில் நாம் ஈடுபாடுடன் அனுபவித்தவைகளே.
ஊரில் ஏகப்பட்ட பக்தி சபைகள் இருந்த காலம் பின்னேரம் 3 மணிக்கு தொடங்கும் இறையிரக்கம். கூடுதலாக (நயின்ரி )905 என்டு நாங்க கூப்பிடுற வயதுபோனவர்களே கோயில் நிறைய இருப்பார்கள். ஆறுகள், ஓடைகள் ஏல்லாம் மாரி வெள்ளத்தால நிறைஞ்சு இருக்கும். ஆத்த மறிச்சு சார் அடைச்சு சாமம் சாமமாய் மீன் பிடிச்சு சுட்டு சாப்பிடும் சுவையே தனி.
மாரி காலத்தில் வெள்ள றால் சீசன். துறை முழுவதும் தோணிகள் நிறைய வெள்ள றால் எம்மவர்கள் ஆங்காங்கே தோணிகளில் றால் தெரிஞ்சுகொண்டிருப்பார்கள். சில நேரம் கள்ளாத்தில கலக்காம், கீளிமீன் ஓடையில கலக்காம், துறைக்கு சாய கொம்புதீவு நேரில கலக்காம் என்டு வலைகளை பிடுங்கி பாய அல்லோல கல்லோலப்படும் சந்தர்ப்பங்களும் நிறைவேறியதுண்டு.
வீட்டில இருக்கும் ஒரு சில அம்மாமார், சில அக்காமாரும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆறுகளில் பிடிறாலுக்காக இறங்கிறால் பிடிப்பதும் வழமையே.
மார்கழிமுதல்ஞாயிற்றுக்கிழமையே பூசையில பாதர்கரோல் பாட்டுக்கு பொறுப்பா பாடகர்குழாமஅறிவிச்சு பாட்டுப்பழக சொல்லுவார். அன்றிலிருந்து பின்னேரத்தில் பாட்டுப்பழக நேசறி, அருள்மாரி மண்டபத்தில எல்லாரும் ஒன்றுசேருவோம். மார்கழி 24ம் திகதி இரவு அமளிதுமளியான ஆய்த்த வேலைேைளாடு தொடங்கும் கரோலுக்கு வெள்ள சிகப்பு நிற உடுப்போடு பொடிகளும், பொம்புளப்பிள்ளைகளும் ,பெற்றோல் மெக்ஸ் பிடிக்க கொண்சன் அண்ணன், பிறேமன் அண்ணன் இவர்களோடு ஆய்தமாக இருப்போம். சாம பூச முடிய,அஞ்சாறு பாட்டுக்கு கோயில் போட்டிக்கோவில போடுற ஆட்டம் இருக்கே சட்டப்படிதான்.
மாரி,மழ வெள்ளம் ஊரில் பல இடங்களை நிறைத்திருந்தாலும் ஒரு வீடு விடுபடாமல் பாலன் பிறப்பு செய்தியை மகிழ்வோடு அறிவித்த அந்த மறக்கமுடியாத நினைவுகள் .அந்த காலத்தில் காதல் ஜோடிகள் சந்திப்பதை ரேண் என்று நாங்க குறிப்பிடுவது வழமை. கரோல்,ஒளிவிழா, ஒளி இரவு போன்ற நிகழ்வுகளை சாக்காக பயன்படுத்தி பல காதல் ஜோடிகள்( ரேண்) சந்திப்பதுண்டு. கரோல் போய்கொண்டிருக்கும் போது தீடிரென காணாமல் போய், மறைஞ்ச காதல் ஜோடிகள் தத்தமது வீடுகளில் பிடிபட்டதும் உண்டு. 24ம் திகதி சாம பூசைக்கு முதலும், பூசமுடிஞ்சபிறகும் ஊரில கரோல் போவோம். எல்லா வீடுகளிலும் இல்லாவிட்டாலும் சில வீடுகளில் கரோல் குழுவுக்கு சிற்றுண்டிகளும், தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்படுவதும் வழமையே. 24ம் திகதி பாலன் கொட்டில் வீடுகளில் வைப்பதற்காக தோணிகளிலும், சைக்கிளிலும் மின்னியெறிஞ்சான் பக்கம் போய் சாத்தாவாரி, சவுக்கு, கீரி வெட்டிக்கொண்டு வந்து பாலன் கொட்டில் வைப்பதும், குப்பையில கிட்கிற பழைய பெற்றிகள எடுத்து, கொட்டில்ல போய் ஐஸ் பெட்டி ஆணி 2,3 வாங்கி பலகயில வச்சு அடிச்சு பல்பு எரியச்செய்வதும் மறக்கமுடியாத நினைவே.
ஊரில கரோல் முடிஞ்ச கையோட பள்ளமடு, மொங்கானா குளம், புலக்காடு,எமில்ரன் அண்ணன்ர கமம், சன்னார், ஈச்சளவக்க, பெரியமடு, சவிரிகுளம்,கோவிற்குளம், புதுக்குளம், கூராய், ஆத்திமோட்ட, கள்ளியடி, கத்தாளம்பிட்டி, கட்டாடிவயல், இலுப்பக்கடவ, படகுதுற, அந்தோனியார் புரம், தேத்தாவாடி, மூனாம்பிட்டி, பாலியாறு, தேவன்பிட்டி இப்படி ஒரு இடம் விடாம 27ம் திகதி மட்டும் கரோஷ், கரோல் என்டு திரிஞ்ச காலம் எனி வருமா?. 27ம் திகதி நடக்கும் ஒளி இரவு நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கி சாமம் செல்லும் முடிய,யானைக்கு வால் வைத்தல், ரொம்போலா, தலயன சண்ட, மெழுகுதிரி கொழுத்துதல்,போத்தலுக்கு வளையம் போடுதல், பாசல் பரிமாறுதல், சங்கீத கதிரை, நற்செய்தியாளர் நான்கு, கோல் சூட் போடுதல், நெற்போல் சூட் போடுதல் பாசல் எடை பார்த்தல், பாவைக்கு பெயர்வைத்தல், கிறிஸ்மஸ் மரம், கரம் போட், மாவுக்குள் பணம் தேடுதல் இப்படி எக்கச்சக்க விளையாட்டுக்கள் நடப்பது எங்கட ஊரில் களைகட்டும். மார்கழி பிறந்தவுடனே,எங்கட ஊரில் உள்ள அண்ணாவிமார்களினால் தொடங்கும் நாடக பழக்கங்கள், நாட்டுக்கூத்துகள், வில்லுப்பாட்டு, கோலாட்டம், தாள லயம், என்ற ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். இவையாவும் 29ம் திகதி நடக்கும் பங்கு ஒளிவிழாவுல அரங்கேறுவதற்காகவே. இதைவிட அயலிலுள்ள ஊர்களில் இருந்தும் எமது ஊருக்கு ஒளிவிழாவுக்கு நிகழ்ச்சி கொண்டுவரும் அயல் ஊரவர்களையும் அவர்களது நிகழ்ச்சிகளையும் பார்த்து இரசித்து அதப்பற்றி கதைகள் சொல்லுவதும் நாம் எமதூரில் செய்தவைகளே. ஊரிலிருந்தது ஒரே ஒரு பேக்கரி அதால நத்தாருக்கு கேக் அடிச்சு பேக்கரியில குடுக்க சனங்கள் முந்தியடிப்பதும், குடுத்த கேக் சிலவேளைகளில் கருகி பேக்கரிக்காரர் முட்டைக்கும், மாஜரினுக்கும் ஓடுப்பட்டுத்திரிஞ்சு விடியப்புறம் திரும்ப தாங்க கேக் அடிச்சு குடுத்ததும் உண்டு. வெளியில ஆயிரம் சலூன் இருந்தாலும் ஊரிலுள்ள றவீந்திரன் அண்ணன், யேசசதாசன் அண்ணன், அன்ரனி அண்ணன் இவங்கட கையாலதான் முடி வெட்டி சேவ் எடுக்க நாங்க முந்தியடிப்போம், அதேபோல தான் பாதிமாமா,தேவன் அண்ணன், றாஜன் அண்ணனிடம் ரவுசர், சேட் தைக்காட்டி எமக்கு பத்தியப்படாது. சில வேளைகளில் தையலுக்கு நிறைய உடுப்புகள் இருந்து பூசைக்கு மணியடிக்க மட்டும் பாதிமாமாட ரெயிலர் கடையில நின்டு வாங்கி கொண்டு போன சந்தர்ப்பங்களும் உண்டு.
இதே போலதான் புதுசா தைச்ச உடுப்புகள சாமம் சென்றாலும், எந்த நேரம் என்றாலும் அச்சு பிசகாம அயன் பண்ணி தருவாங்க பூபால் அண்ணனும், ராதா அண்ணனும். எங்கும் இல்லாதவாறு ஊரில வீடுகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமா இருப்பத போலதான் நாங்க கொண்டிருந்த உறவுகளும், பரஸ்பரங்களும் வேலியால என்ன கறி இன்டைக்கு? எண்டு கேட்டு காய்ச்சின கூறிய குடுத்து,வாங்கி, சாப்பிட்டு வாழ்ந்த அந்த ஒப்பற்ற இனிய வாழ்வும் ஊரில நாங்க அனுபவிச்சதெல்லாம் 1999 இடப்பெயர்வுக்கு முன்னரே ஆகும்.
அன்று இந்த நாள் ஏன் வந்தது?
1999ம் ஆண்டு ஆனி மாதம் வவுனியா மன்னார் பிரதான வீதியினூடாக இராணுவம் முன்னேறி உள்நாட்டு போர் உக்கிரமடைந்து போர் மேகங்களால் நிறைந்து மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச கிராம மக்கள் ஒவ்வொன்றாக இடம்பெயரந்து கொண்டிருந்தனர். அடம்பன் பிரதேசஅனேக கிராம மக்கள் இடம்பெயர்ந்து மடுக்கோவிலிலும்,சில கிராம மக்கள் எங்கள் ஊரிலும் தஞ்சமடைந்து ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், ஏனைய பொது இடங்களிலும் தங்கியிருந்தனர். அக்காலப்பகுதியில் ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்தும் இடம்பெயர்ந்து எமது ஊரில் அதிகளவான மக்கள் வசித்து வந்தனர்.
விமான குண்டுவீச்சுக்கள், எறிகனை வீச்சுக்கள் என்பவற்றின் பேரிரைச்சல்களும், கருமேகங்களும் எமது ஊரை சூழ்ந்து நிசப்தத்தை நிர்மூலமாக்கிய ரணங்களாக நாட்கள் நகரந்துகொண்டிருந்தது. "உடனடியான ஊரை விட்டு எழும்புங்க, ஆமி மூவ் பண்ணி வாறான் ஊரவிட்டு போங்க " என மாவட்ட தளபதி லக்ஸ்மன் அண்ணன் மற்றும் அந்த காலத்தில் பொறுப்பாளராக இருந்த செங்கோட்டை அண்ணன் அவர்களும் எமக்கு பொதுக்கூட்டத்தில சொல்லிச்சென்றிருந்தனர்.
அந்த காலகட்டத்தில் அருட்பணி ஜெயபாலன் அடிகளார் எமது ஊரின் பங்குத்தந்தையாக இருந்தார்.”எல்லாரும் உங்க உங்க பாதுகாப்ப தேடிக்கொள்ளுங்க ஊரில ஒரு ஆள் இருந்தாலும் நான் இருப்பன் ஊர விட்டு போகமாட்டேன் " என்றவரிடம்,"நாங்க ஊர விட்டு வெளிக்கிட மாட்டோம் நடக்கிறது நடக்கட்டும் “ என்ற பதிலை பாதரிடம் ஊர் ஒருமித்தவர்களாக சொன்னோம்.
ஊர் சனங்கள் அனேகர் அடைக்கலமாதா கோவிலிலும், சந்தியோகுமையோர் கோவிலிலும் நிறைந்திருந்தனர்.
சில குடும்பங்கள் தத்தமது விருப்பத்திற்கிணங்க அருகில் உள்ள கள்ளியடி, முழங்காலில் போன்ற இடங்களுக்கு சென்றுமிருந்தனர். 28/6/1999 செல்வின்ர பிறந்த நாள் அன்றுதிரவுகுளத்தில் இருந்த அருள்மாரி மண்டப தவனேசன் அண்ணணின் கடையிலும், தங்கப்பொன் அக்காவின் கடையிலும் கொத்துரொட்டி வாங்கி சாப்பிட்ட நினைவுகள். ஊருக்கு மேலாக எறிகணை செல் வீச்சுக்கள் போய்கொண்டிருந்த சத்தமும் ,அவை ஊரை சுத்தி விழுந்து வெடிச்ச சத்தமும் இன்னும் பயத்தை உண்டுபண்ணியது. இடைவிடாத செல் மழையால் ஊரே அல்லோலகல்லோலப்பட்ட நாட்களை எளிதில் மறக்க முடியாது.
காலையில் இருந்து பின்னேரம் வரை க்கும் தொடரும் செல்வீச்சுக்களுக்கு மத்தியிலும் பள்ளமடுவுக்கு முழுக நடந்து போனோம் .நெல்லுச்சங்க தரவையில செத்துக்கிடந்த மாடுகள் கொஞ்சநஞ்சமில்ல, அவைகளை கடந்து போய் குளத்தில முழுகிற்று வந்தோம். கையில் றேடியோவுடன் கோஸ்டி கோஸ்டியாக லண்டன் பி பி சீ செய்தியின் மாணிக்கவாசகரின் இலங்கைக்கான செய்தி கண்ணோட்டத்தை ஆவலாக கேட்ட அந்த நாட்கள் மறக்கமுடியாத ஞாபகங்கள். நாங்கள் செய்த புண்ணியம் இவ்வளவு செல் மழை பொழிந்தும் ஒன்றுகூட ஊருக்குள்ள விழேல் இவ்வாறு நாட்கள் நகர்ந்தன, என்ன நடந்தாலும் ஊரவிட்டு போறேல நடக்கிறது நடக்கட்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்த அந்த நேரம் நடந்த துன்பியல் நிகழ்வு எமது ஊரின் வரலாற்றையே மாத்திப்போட்டது. 29/6/1999 அன்று இரவு மாதா கோயில் வக்கடியில ஏதோ பிரச்சினையாம் எண்டு கேள்விப்பட்டோண சூட்டிமாமி வீட்ட இருந்த நான் கோட்வினோட மாத கோயில் வக்கடிக்கு ஒடிப்போய் பார்த்தா அங்க தள்ளுமுள்ளுப்பட்டு வாய்த்தர்க்கம் நடந்துகொண்டிருந்தது.
விசயம் பாதர் ஜெயபாலன் அவர்களுக்கு எட்டி அவர் அறவீட்டில் சம்மந்தப்பட்டவர்களோடு கதைச்சுக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில யாரும் எதிர்பாராத விதமாக செல் வீச்சு கூவிக்கொண்டு போய் வெடிச்ச சத்தத்தோடு ஊரின் அமைதியை குலைத்து மக்களின் அலறல் சத்தம் அந்த இரவில் வானை பிளந்தது. "சந்தியோகுமையோர் கோவில்ல விழுந்திற்றாம் எண்டதும் விழுந்தடிச்சு ஓடி போய் சங்ககடைக்குகிட்ட வரும்போது அடுத்த செல் கூவிக்கண்டு வந்து விழுந்து வெடிச்சது. அதிலிருந்து சந்தியோகுமையோர் கோவில் வரை ஒரே புகைமண்டலமும் மரஇலைகளும் தூசி நிறைஞ்சு வெடிமருந்து வாடையும் எங்கும் நிறைந்திருந்தது.கோயில்ல படுத்திருந்த சனத்திர மரண ஓலமும், அலறலும் சொல்லி மீளாது. ஓடிப்போய் வீட்டு வாசல்ல ஏற வாசல் நிறைய ரத்தம் கிடந்தது ஒருவரையும் காணேல யாருக்கு என்ன நடந்திருக்கோ எண்டு அலறியடிச்சு அங்கலாய்த்த போது “தம்பி உங்கட அக்காக்கு செல்பட்டு கொண்டு போறாங்க எண்டு பக்கத்து வீட்டு அண்ணன் சொல்லவும் அங்கிருந்து சந்தியோகுமையோர் கோயில் வாசலில் நிண்டு நன்பன் ஜோண்ராஜ்ச கூப்பிட்டன்.
அன்று நல்ல நிலவு வானத்தில் செல் தூசியும் புகையும் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தது,கோயில்ல இருந்த சனம் அபயக்குரல் எழுப்பியவாறு பிள்ளைகள்,பெற்றோர்கள், உறவினர்கள என ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். அடுத்த செல்வர முதல் கோயில்ல நிண்ட சனத்த பள்ளிக்கூடத்திற்கும் கோயிலுக்கும் இடையில் இருந்த மதிலால் ஒவ்வொருவராக தூக்கி விட்டுக்கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் யாரோ அழும் குரல் கேட்டது,அங்க போய் பாக்க பள்ளிக்கூட மெயின் கேற்றுக்கு கிட்ட றஞ்சினி அழுதுகொண்டிருந்தாள். யாரோ ஒருவருடைய உடம்பெல்லாம் மண் மூடி மூச்சுப்பேச்சின்றி அசைவில்லாமல் குப்பற கிடந்தது. “யார் புள்ள இது ஏன்று கேட்கவும் எங்கட தம்பி என்றவாறே அழுதார் . அங்கு வந்த எட்மன் சேரும் அவனை பார்த்து அழுதுகொண்டிருந்தார்.
நானும்,ஜோண்ராஜும் அதில வந்த நிசாந்தனும்,அவன தூக்கிக்கொண்டு போய் பள்ளிக்கூட பின் கேற்றடியில இருந்த பூவரசு மரத்துக்கு கீழ வளத்தினோம். காயப்பட்ட ஆக்கள அறவீட்டுக்கு கொண்டுவரட்டாம் பாதற்ற வேன் நிக்குது எண்டு சொல்லவும் அந்த இடத்தில வந்த பெரியவர் ஒருவருடம் இவன தூக்கிக்கொண்டு போய் வேனில ஏத்துறீங்களா? என்றேன் எப்படி நான் இவன தூக்கிறது ? வெள்ள சேட்டோட நிக்கிறன் ரெத்தம் பிரண்டிடும் என்றவரை " இதில நிக்காம போங்க மாமா " என்று பேசி அனுப்பினான் ஜோன்ராஜ், நிசாந்தனையும்,எட்மன் சேரையும் சொன்னேன் தூக்கிக்கொண்டு அறவீட்ட போங்க இல்லாட்டி கடக்கரைக்கு கொண்டுவாங்க தோணியில ஏத்துவம் எண்டிற்று ஜோண்ராஜ்சோடு கோயிலுக்க ஒடினேன். கோயில் வளவு முழுவதும் புகையும் சனத்திர பாய் , தலவணிகள்,வெற்சீற்றுக்கள், எல்லாம் திக்குதிக்கா கிடந்தது, எல்லா இடமும் சாமன்சட்டுக்களாகவே காணப்பட்டது.
பக்கத்து வீட்ட இருந்த கேணி ஆச்சி காயப்பட்டு செத்திற்றா எண்டு நினைச்சு விடிய அதப்பற்றி பாப்பம் எண்டிற்று கோயில் விறாந்தையில காயப்பட்ட ஆக்கள வளத்தினோம். புஸ்பசீலி மாமியும் அங்கே வளர்த்தப்பட்டிருந்தார்.முத்தன் மாமாட கால் காயத்த பிறைம் குமார் அண்ணனும், றெஜி அண்ணனும் வெற்சீற்ற கிழிச்சு கட்டினார்கள். சிறில் பப்பாட காயத்த ஜோண்ராஜ் சுத்தி கட்டினான். பக்கத்தில காயப்பட்டு கிடந்த டெய்சி ரீச்சற்ற முதுகில நகுலன் கைவைக்க "யாரிது?என்டு டெய்சி ரீச்சர் கேட்டது “ இன்னும் நினைவில உள்ளது. அது நான் நகுலன் அக்கா என்டிற்று ரீச்சற்ற இடுப்பு காயத்த சுத்தி நகுலன் கட்டினான். ரெங்கும் மயான அமைதி நிலவியது, வெத்தான ஆக்கள் யாருமே இல்ல, கோயில் வளவு வெறிச்சோடி போயிருந்தது. சரியான வத்து நேரம்,சுடுகாட்டு ஓடையில கிடந்த ஜோண்ராஜ்சிட பெரிய தோணிய போய் கஸ்டப்பட்டு தக்குமுக்குப்பட்டு தள்ளி சவுக்கால பிட்டிக்கு இழுத்துக்கொண்டு வந்தோம். கோயில்ல கிடந்த தலவணிகள கொண்டந்து தோணிக்க வடிவா மெத்தபோல அடிக்கி காயப்பட்டவங்கள ஒவ்வொருவராக காவு தடி செய்து தூக்கிக்கொண்டு வந்து தோணிக்க வளத்தினோம். எல்லாரயும் தோணிக்க வளத்திற்று வேறு யாராவது காயப்பட்ட ஆக்கள் கிடக்கிறாங்களா என்டு கோயில சுத்தி ஒருக்க பாப்பம் எண்டு கோயில் வளவ சுத்தி வரும்போது யாரோ ஒருவருடைய உருவம் சந்தியோகுமையோர் கோவில் அறவீட்ட தெரிஞ்சது. ஆற்றா அது என்டு கிட்ட போய் பாத்தோம்,அது சத்தி அப்புட பெரியண்ணண், வாய் பேச முடியாதவர். அவருக்கு கிட்ட சத்தியப்புவும் படுத்திருந்தார். அவர்களை யாரும் அந்த நேரத்தில் கையேற்கவோ, தங்களோடு கூட்டிக்கண்டு போகவோ இல்லை, அந்தரவழியில் அவர்களை விட்டு சென்றிருந்தனர்.
தோணிக்க இடமில்ல, விடிய வந்து இவங்கள ஏத்துவம் எண்டிற்று,கிடந்த தலவணிகள அடுக்கி ரெண்டுபேரையும் வாழத்திப்போட்டு அவங்கள சுத்தி தலவணிகளால மறச்சு வெற்சீற்றால போத்தீற்று படுங்க விடிய வந்து ஏத்திறம் எண்டிற்று வந்து தோணிய தள்ளினோம். வத்தால தோணி மிதக்காம கஸ்டப்பட்டு தள்ளி கொடுவாப்பள்ளம் வரை வந்தோம். நானும் நகுலனும் தோணியில் காயப்பட்டவங்கள ஏத்தி வர மற்றவங்க சுடுகாட்டு தரவயால நடந்துபோனாங்க. அப்ப வெறும் மரக்கல் தான். நகுலன் தாங்க நான் அணியத்தில இருந்தேன். "யார் ஆக்கள்? எங்க போறீங்க ? “எண்ட உரப்பலுடன் ரோச் லைற் முகத்துக்கு வந்தது,
அது நாங்க,காயப்பட்ட ஆக்கள கொண்டு போறம் எண்டு கனத்த மனதுடன் பல ஏக்கங்களுடன் பிறந்த மண்ணை விட்டுப்பிரிந்து கள்ளியடி நோக்கி தாங்கினோம். 1999ம் ஆண்டு எமது ஊரில் நடந்தேறிய எறிகணை வீச்சின் துன்பியல் நிகழ்வின் காரணமாக ஊரில் இருந்து ஒட்டுமொத்த கிராம மக்களும் இடம்பெயர்ந்தனர். சிலர் தரை மார்க்கமாகவும் கடல் வழியாகவும் அயல் கிராமங்களான கள்ளியடி,இலுப்பைக்கடவை, தேவன்பிட்டி போன்ற ஊர்களில் தஞ்சம் அடைந்திருந்தனர். அவ்வாறே 30/6/1999ம் ஆண்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் தங்கியிருந்த மக்களில் சுமார் 99 குடும்பங்கள் கடல்வழியாக 32 தோணிகளில் மன்னார் பள்ளிமுனை கரையை அடைந்தனர். அல்லோல கல்லோலப்பட்டு உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள வெறும் கையோடு பள்ளிமுனை கரையை அடைந்த எமது மக்களுக்கு பள்ளிமுனை பங்குத்தந்தை மற்றும் மக்களால் சமைத்த உணவு மற்றும் உடுத்த உடைகள் என்பன வழங்கப்பட்டது.
பாராளுமன்ற. உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மக்களை தேடி ஆவலாய் வருகைதந்து இன்னலுற்ற மக்களுக்கு உடுத்த உடைகளை வழங்கியிருந்தார். 1/7/1999 ம் ஆண்டு பேசாலையில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு அரசாங்க அதிபர் மூலமாக மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே வங்காலையை சேர்ந்த சோதி என அறியப்படுகிற கிராம சேவையாளர் நலன்புரி நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார் .அங்கே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு 3 நாட்கள் சமைத்த உணவு எமக்கு வழங்கப்பட்டு நிரையான கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டோம். ஒரு ஊருக்குள்ளே பல கட்டுப்பாடுகளோடு, வரையறைகளோடு, ஒரே சமூகமாக வாழ்ந்த நாம் பல்வேறுபட்ட சமூகங்களை ,பல்வேறுபட்ட சமூகசீர்கேடுகள் காணப்பட்ட பல சமூக மக்களோடு வாழ நேர்ந்தது. அதிகளவான கிளிநோச்சி மாவட்ட மக்கள் இருந்த இடத்தில் நாங்கள் 10:10 அளவுடைய குடிசைகளில் சுமார் 400 குடும்பங்களை விடத்தல்தீவை சொந்த இடமாக கொண்டவர்கள் நலன்புரி நிலையத்திலும் சுமார் 75 குடும்பங்கள் தத்தமது வசதிகளுக்கு ஏற்ப்ப மன்னாரிலும் வாழ்ந்தோம்.
மலசல கூட வசதிகள், கல்வி வசதிகள், சுகாதார வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாத அந்த முகாம் வாழ்க்கை எம் மக்களுக்கு துயரை வருவித்திருந்தது. எமது இடப்பெயர்வை கேள்விப்பட்ட எமது ஊரில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் எம்மை தேடி வந்தமை மனமகிழ்வை வருவித்திருந்தது. அந் நேரத்தில் பேசாலை சமூக மக்களால் உடுத்த உடைகள் எமக்கு வழங்கப்பட்டமையும் எளிதில் மறந்துவிட முடியாது. அடுத்தநாள் 2/7/1999 காலை மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் பேசாலை நலன்புரி நிலையத்தில் எம்மை வந்து சந்தித்தார். அந்நாட்களில் மன்னார் மாவட்ட கதாதோலிக்க நிறுவனமான வாழ்வுதய நிறுவனம் எமக்கு உதவியிருந்தார்கள். UNHCR நிறுவனம் சமைத்த சாப்பாட்டு பொதிகளை வழங்கியதுடன் சிங்கள சகோதர மொழி பேசும் இளைஞர் மன்றத்தினர் எமக்கு உடைகளை வழங்கியிருந்தனர்.
எமது கிராமத்தில் நாம் கொண்டிருந்த அமைப்புகளையும், சங்கங்களையும் இடம்பெயர்ந்த நிலையிலும் கொண்டு நடாத்தியிருந்தோம் அந்த வகையில் விடத்தல்தீவு மேற்கு மீனவ கூட்டுறவு சங்கம், மன்/தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய பாடசாலை நிர்வாகம், தேசிய இளைஞர் மன்றம், விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக மற்றும் ஏனைய சங்கங்கள் அமைப்புகளை ஆரம்பித்திருந்தோம்.
வாழ்வாதாரமும், தொழில் துறையும்.
எமது சீவனோபாயம் கடற்றொழில் எமது தொழில் உபகரணங்கள் யாவும் கைவிடப்பட்ட நிலையிலேயே நாம் வைத்திருந்த தோணிகளில் மன்னார் நோக்கி இடம்பெயர்ந்திருந்தோம் .பள்ளிமுனை துறையில் எமது தோணிகள் யாவும் இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. எமக்கான தொழில் வசதிகள் பேசாலை நலன்புரி நிலைய ஆரம்ப நாட்களில் இல்லாது அன்றாட சீவியத்தை போக்குவதற்காக மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியிருந்தோம்.
யுத்த காரணத்தால் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் நிறைந்த காலம், யாரும் முகாமை விட்டு வெளியே செல்ல முடியாத நாட்கள், பேசாலை நலன்புரி நிலையத்தில் அடிக்கடி நிகழும் சுற்றிவளைப்புகளும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யபாபடுவதும், பொலிசாரின் சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்றதால் எமது சீவியத்தை போக்குவதற்கு நாங்கள் பட்ட வேதனைகளும், துன்பங்களும் சொல்லிமீளாதவைகள். கைக்குழந்தைகள்,சிறுவர், இளைஞர், முதியவர்கள் என பல்வேறுபட்ட எம்மவர்கள் ஒருபோதும் அனுபவித்திராத அடைந்திடாத துன்பதுயரங்களை முகாம் வாழ்க்கை எமக்கு கற்றுத்தந்தது. எமது அன்றாட சீவியத்திற்காக நடுக்குடா பக்கம் சென்று கரைவலை இழுக்க கூலிக்கு சிலர் சென்றிருந்தனர், சிலர் வீடுகள் மேய்வதற்கு கூலிக்கு சென்றிருந்தனர், சிலர் மலசலகூடம் நிரம்பி அதனை மீள எடுப்பதற்கு முகாமிற்கு வரும் கொள்கலன் வண்டிக்கு பாதையமைத்து தகரம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர், இன்னும் சிலர் பேசாலை வாழ் மக்கள் சிலருடைய வீட்டு வேலைகளுக்கு கூலிக்கு சென்றும் வந்திருந்தனர்.
இவ்வாறு பல்வேறுபட்ட கூலிவேலைகளை செய்து எமது நாளாந்த சீவியத்தை போக்கிவந்த எமது மக்களுக்கு எமது மீனவ கூட்டுறவு சங்கத்தின் அனுமதியோடு மன்னார் புனித டிலாசால் சபை அருட்சகோதரர்களால் 8 வெளியிணைப்பு இயந்திரங்கள் மானிய அடிப்படையில் எமது மண்ணின் மைந்தனும் டிலாசால் சபை அருட்சகோதரருமான ஸ்ரனிஸ்லொஸ் அவர்களது முன்னிலையில் வழங்கப்பட்டது. மேலும் தொழில் செய்வதற்குரிய வலைகள் மானிய அடிப்படையில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்தது. எமது மீனவர்கள் பள்ளிமுனை துறையூடாக 1999ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து 2000ம் ஆண்டுவரை தொழிலுக்கு சென்றுவந்தனர். அதன் பின்னர் மன்னார் பாலத்தடி ஊடாக பனங்கட்டுக்கொட்டு சங்கத்தின் அனுமதியோடு 2000ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரை தொழிலுக்கு சென்றுவந்தனர். பின்னர் கோந்தப்பிட்டிதுறையின் ஊடாக பல்வேறுபட்ட அசம்பாவிதங்களையும் இடஞ்சல்கள், இடையூறுகளையும் சந்தித்தவர்களாக கடந்த 2002ம் ஆண்டில் இருந்து இன்றுவரை தொழிலுக்கு சென்றுவருகிறார்கள்.
பாடசாலையும் கல்வியும்....
இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 400 குடும்பங்களை கொண்ட நாம் எதை இழந்தாலும் எமது கல்வியை இழக்கக்கூடாது என்ற சிந்தனையில் எமது பிள்ளைகளின் கல்வியை பேசாலை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் அவர்களது அனுமதியுடனும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய நிர்வாக சபையின் அனுமதியுடனும் ஆலய வளாகத்தில் எமது பாடசாலையின் ஆசிரிய வளத்தை கொண்டு மன்னார் ADS திருமதி கணபதிப்பிள்ளை அவர்கள் வடமாகாண கல்வி பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு பெற்றுத்தந்த அனுமதியுடன் அங்கே தொடர்ந்தோம். உள் நாட்டு யுத்தத்தினால் மாந்தை மேற்கு மடு வலய பாடசாலைகள் இடம்பெயர்ந்த நிலையில் இராணுவம் கைப்பற்றியிருந்த தட்சனா மருதமடு பாடசாலையில் இருந்த ஒரு தொகுதி தளபாடங்களை மடு வலய கல்வி அதிகாரிகளின் அனுமதியோடு எமது பாடசாலையில் கல்வி கற்பித்த பகுதிநேர ஆங்கில ஆசிரியர்களான திரு.ஜேம்ஸ் சுதாகரன் மற்றும் திரு பொன்ராசா ஸ்ரிபன் ஆகியோர் மன்னார் கச்சேரிக்கு சொந்தமான லொறியில் சென்று தளபாடங்களை கொண்டுவந்திருந்தார்கள்.
அந்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த நிலையிலும் எமது பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை எமது மக்களின் நிதிப்பங்களிப்பிலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மண்ணின் மைந்தனுமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்களது நிதிப்பங்களிப்பினூடாகவும் மிக விமர்சையாக நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2001ம் ஆண்டளவில் மடுவலய கல்வி திணைக்களம் எமக்கெனதனியாக பாடசாலை அமைக்கும் திட்டத்தை முகாமில் ஆரம்பித்து நடவடிக்கைகள்மேற்கொண்ட பொழுது சிறிது காலத்திற்கு பேசாலை பற்றிமா பாடசாலையில் மாணவர்களும் சில ஆசிரியர்களும், சென் மேரீஸ் பாடசாலையில் மாணவிகளும் சில ஆசிரியர்களும் சென்று கல்வி கற்கவும், கற்பிக்கவும் பணிக்கப்பட்டோம். அதன் பின்னர் எமது தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் என்ற பெயரில் எமக்கென தனியாக பாடசாலை பேசாலை நலன்புரி நிலையத்தில் அமைத்து தரப்பட்டது.
அந்த காலப்பகுதியில் இலங்கை நாடு நழுவிய கல்விச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து அதிபர் விஸ்வராஜா அவர்களது தலமையில் பேசாலை நலன்புரி நிலையத்தில் இருந்து சென்றிருந்தோம் அந்த கல்வி சுற்றுலா தென் இலங்கையின் பல முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்ததுடன் குறிப்பாக இலங்கை பாராளுமன்றத்தை பார்வையிடும் வாய்ப்பாகவும் அமைந்திருந்தது மேற்படி வாய்ப்பை எமக்கு வழங்கி பாராளுமன்றத்தில் எமக்கான மதிய உணவையும் வழங்கிதந்த பெருமை எமது மண்ணின் மைந்தனும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களையே சாரும்.
இன்னும் பேசாலை நலன்புரி நிலையத்தில் இயங்கிய எமது பாடசாலை தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய மாணவர்களை அவ்வப்போது மடு கல்வி வலயம் சார்பாக நடைபெறும் ஆங்கில தின போட்டிகள், தமிழ் தின போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் என்பவற்றுக்கு ஆசிரியை திருமதி இம்மானுவேல் அன்னமலர், ஆசிரியை மாக்கிறற் ஆசிரியை மேரி சுஜாதா ஆசிரியை திருமதி சாள்ஸ் ஜோசப்,மற்றும் பகுதிநேர ஆங்கில ஆசிரியர் ஜேம்ஸ் சுதாகரன் ஆகிய ஆசிரியர்கள் கொண்டு சென்று பல சான்றிதழ்களையும், வெற்றிகளையும் பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
முகாம் வாழ்க்கையும் விளையாட்டும்.
இடம்பெயர்ந்து பொழுதுபோக்குகள் அற்று அடிக்கடி நிகழும் சுற்றிவளைப்புகளுக்கும், கைதுகளுக்கும் மத்தியில் வாழ்ந்த எமக்கு பின்னேரங்களில் முகாம் நுழைவில் அமைந்த தவரை பற்றைகளை துப்பரவு செய்து விளையாடும் அனுமதி கிடைத்தது. எமது முன்னாள் ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர்கள், நலன்விரும்பிகளின் உந்துதலுடன் ஐக்கிய விளையாட்டு கழக நிர்வாகத்தை அமைத்து மன்னாரில் நிகழ்ந்த உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கட் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றியதுடன், எமது விடத்தல்தீவு பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு கடல்வழியாக படகுகளிலும், தோணிகளிலும் சென்று விளையாடி வந்த அந்த நாட்கள் என்றும் பசுமையே.
ஆன்மீக வழிபாடுகளும் ஆலய விழாக்களும்.
மன்னார் மறைமாவட்ட கிராமங்களில் இறைபக்தியிலும், இறைவிசுவாசத்திலும் சிறந்துவிளங்கிய எம்மவர்கள் இடம்பெயர்ந்த நிலையிலும் தமது விசவாச ஆன்மீக வாழ்க்கையில் தளர்வின்றி வாழ்ந்தனர். அந்த நாட்களில் முகாமில் இரு சிறிய கொட்டகையில் அமைந்த அந்தோனியார் ஆலயம் அங்கு ஏற்கனவே அகதிகளாக இருந்த மக்களால் பேணப்பட்டிருந்தாலும் எமது மக்களின் வருகைக்கு பிற்பாடு அந்த சிற்றாலயம் சிறப்பு பெற்றது என்றால் அது மிகையாகாது. ஊரில் இருந்தபோது எவ்வாறு ஆலயத்தை முன்னிலைப்படுத்தி ஆன்மீக காரியங்களில் சிறந்து விளங்கினது போலவே சிறியவர் முதல் பெரியவர் வரை நேரம் தப்பாமல் அடிக்கடி சென்று சிற்றாலயத்தில் வழிபட்டனர். ஊரில் கொண்டிருந்த அனைத்து பக்தி சபைகளையும் முகாமிலும் நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு மறைக்கல்வி வகுப்புகளை நடாத்தியதுடன் இறை இரக்க பக்தி செபமாலையையும் நாள் தவறாமல் சொல்லியிருந்தோம். ஊரில் நாள் பூசை தவறாதவர்கள், ஞாயிற்றுக்கிழமை பூசை தவறாதவர்கள் இருந்தும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு மணல் பாங்கான இடத்தால் நடந்து செல்லுவது முதியவர்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு முடியாமல்போனதால் முதியோர் வீட்டிலே இருக்க வேண்டி இருந்தது. முகாமில் எம்மை தரிசிக்க வந்த ஆயர் அவர்களிடம் ஆசிரியர் யோகியோமர் பயஸ் அவர்கள் சிற்றாலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுப்பது சம்மந்தமான கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதன் அடிப்படையில் ஆயர் அவர்களது அனுமதியோடு கிழமையில் 2 நாட்கள் முகாமில் அமைந்த சிற்றாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு எமது முதியோரும் சிறியவரும் தமது ஆன்மீக தேவைகளை பூர்த்திசெய்திருந்தனர். மற்றும் எமது ஆலய திருவிழாக்களான ஆடி 25 மற்றும் புரட்டாதி 8 ஆகிய திருவிழாக்களை இடம்பெயர்ந்த நிலையிலும் சிறப்பாக சிற்றாலயத்தில் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் 2000ம் ஆண்டு மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்ற மருதமடு மாதாவின் வருகையை முன்னிட்டு விசேடமாக இடம்பெயர்ந்த எமக்கு வழங்கப்பட நேரத்தின் அடிப்படையில் பிரமாண்டமான சிகரம் அமைத்து பேசாலை நலன்புரி நிலைய பிரதான வாயிலில் அதனை அமைத்து எமது விடத்தல்தீவு பங்கு சார்பாக அதனை நிறுத்தியிருந்தோம். அத்தோடு அமலமரி தியாகிகள் சபையின் உலக தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வும் எமது முகாமில் நடைபெற்றிருந்தது.
ஜோசப்வாஸ் நகருக்கு குடியேற்றம்.
இவ்வாறு பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சனைகளை எதிர்கொண்டு பல சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்த எமக்கு கிடைத்த மாபெரும் விடிவுதான் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் வளங்கிய மறைமாவட்டத்திற்கு சொந்தமான நிலப்பரப்பில் வாழ்வதற்கான இந்த மாபெரும் வாய்ப்பு. அதன் அடிப்படையில் தோட்டவெளி பகுதியில் மன்னார் மறைமாவட்டத்திற்கு சொந்தமாக அமைந்த அடர்ந்த காட்டு பகுதியில் விடத்தல்தீவை சொந்த இடமாக கொண்ட சுமார் 310 குடும்பங்களுக்கான காணி வழங்கப்பட்டு பகுதி பகுதியாக அவை துப்பரவாக்கப்பட்டது.
அந்நாட்களில் எமக்கான காணியை தோட்டவெளி பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி அசெபமாலை அடிகளார் தலமையில் அளந்து தரப்பட்டதுடன், சுமார் 50 குடும்பங்கள் முதன்முதலாக பேசாலை நலன்புரி நிலையத்தில் இருந்து தோட்டவெளி பகுதிக்கு 2001 ம் ஆண்டு 8 ம் மாதம் 30ம் திகதி குடியமர்த்தப்பட்டனர். மறுநாள் 1/9/2001 ம் ஆண்டு தோட்டவெளி பங்குத்தந்தையாக அருட்பணி கிறிஸ்ரியன் வாஸ் அடிகளார் பொறுப்பேற்றிருந்தார். எமக்கான அளந்துதரப்பட்ட நிலத்தில் கிராம அபிவிருத்தி நிதியத்தினூடாக ( RDF) 10:10 அளவுடைய குழாய் கம்பியிலான குடிசை வீடு தரப்பட்டது. அதற்கு UNHCR நிதியுதவிகளை வழங்கியிருந்தார்கள். பொது மலசலகூடங்கள், 11 குடிநீர் கிணறுகள் மற்றும் வீதி அமைப்பை கிராம அபிவிருத்தி நிதியம் வன்னி புணர்வாழ்வு அமைச்சின் நிதியினூடாக மேற்கொண்டிருந்தது இதனை எமது கிராமத்தின் அமரர் கூவரப்பிரகாசம் அவர்கள் தலமையேற்று நடாத்தியிருந்தார்.
அதன் பின்னரான காலப்பகுதியில் தனித்தனி குடும்பங்களுக்கான மலசல கூட வசதிகளை மன்னார் வாழ்வுதயம் நிறுவனம் வழங்கியிருந்தது.2002 ம் ஆண்டு எமது பாடசாலை தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலையின் பேரூந்துச்சேவை என்பன ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திருப்பலி மற்றும் ஏனைய வழிபாடுகளுக்கு தோட்டவெளி புனித வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்திற்கு சென்றுவந்த எமது மக்களின் ஆன்மீக தேவைகருதி 2002 ம் ஆண்டு வைக்காசி மாதம் தோட்டவெளி பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி வாஸ் அடிகளாரின் முன்னிலையில் சிற்றாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
எமது கிராமத்தில் அந்நாட்களில் இலங்கைக்கான புனிதராக புனித நிலைக்கு உயர்த்துவதற்கான நிலையில் இருந்த தூய ஜோசப்வாஸ் அடிகளாரது திருச்சுரூபம் 2004 ம் ஆண்டு 5ம் மாதம் திறந்துவைக்கப்பட்டது. சிற்றாலயத்திற்கு தேவையான கூரை தகடுகளை வாழ்வுதய இயக்குநர் அருட்பணி ஜெசுராஜா அடிகளார் வழங்கியிருந்தார். ஆரம்ப நாட்களில் எமது கிராமத்திற்கான வீதி அமைப்பு, மின்சார வசதிகளை மேற்கொள்ளுவதற்கான நிதியினை தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் வழங்கியிருந்தார்கள்.
எமது கிராம இளைஞர்,யுவதிகளின் விளையாட்டு திறணை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதிப்பங்களிப்பினூடாகவும், UNDP நிறுவனம் வழங்கிய ரூபா 500000/= ( ஐந்து இலட்சம்) நிதிப்பங்களிப்பினூடாகவும், மைதான காணி வாங்கப்பட்டதுடன் மேலதிகமாக செலுத்தப்பட வேண்டிய மைதான கொள்வனவுக்கான மீதித் தொகையினை காணியில் இருந்து பெறப்பட்ட மண் விற்று முழுத்தொகையும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மைதான காணி கொள்வனவு செய்வதற்கான குழுவில் திரு.பே. எமிலியானுஸ் பிள்ளை, திரு கெ.அந்தோனிப்பிள்ளை, திரு.க. எலியாஸ், திரு.மா. பிரான்சிஸ், திரு.வெ.தயானந்தன், அமரர் அ. கீர்த்திசீலன் ,திருபொகியோமராசா,திரு.ம. நெவிலஸ் மற்றும் கெயூட்றோசர் ஆகியோர் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆரம்பத்தில் சுற்றுமதிலை அமைப்பதற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ரூபா 2000000/= ( இருபது இலட்சம்) மற்றும் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் 1000000/= ( பத்து இலட்சம்) ரூபா நிதியை ஒதுக்கியிருந்தார்கள். அத்துடன் மின்மாற்றி (Transformar),மற்றும் களியினால் ஆன வீதிக்கு 2 மில்லியன் ரூபா நிதியை எமது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் 1 மில்லியன் ரூபா நிதியை முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் வழங்கியிருந்தார்கள்.
எமது கிராமத்தில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் அவர்களது 500000/= நிதி ஒதுக்கீட்டினூடாகவும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் 1500000/= நிதி ஒதுக்கீட்டினூடாகவும் நூலகம் அமையப்பெற்றது. ஊரில் உள்ள மீள் எழுர்ச்சி கட்டடம் மற்றும் போட்டோ பிரதி இயந்திரத்தை முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமது நிதி ஒதுக்கீட்டில் வழங்கியிருந்தார். மேலும் சுற்றுமதில் நூலகத்திற்கு எமது மண்ணின் மைந்தனும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமது நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வழங்கியிருந்தார். நூலகத்திற்கான கணணியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஸ்தான் அவர்கள் 2கட்டமாக வீதி அமைக்க நிதி( 600000 + 1000000) ஒதுக்கியிருந்தார், மற்றும் ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய அறவீட்டிற்கு ரூபா 500000/=யும் வீதிக்காக ரூபா 300000/= நிதியையும் ஒதுக்கியிருந்தமை குறிப்பிட்த்தக்கது.
கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்கள் விளையாட்டு மைதானத்தில் மலசல கூடம் அமைப்பதற்கும்,வீதி அபிவிருத்திக்கும் 2கட்டமாக 1000000/= மற்றும் 2 மில்லியன் ரூபா நிதியை எமக்கு ஒதுக்கியிருந்தார். எமது மண்ணின் மைந்தன் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 225000/=ரூபா நிதியை மீனவ சங்க சுற்று மதிலுக்கும், ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கு 300000/= நிதியையும், வீதி அபிவிருத்திக்கான நிதியாக ரூபா 850000/= முதியோர் சங்கத்திற்கு 225000/=நிதியையும் நூலகத்திற்கான மலசல கூடம் அமைக்க ரூபா 225000/=நிதியையும் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நற்கருணை ஆண்டவர் ஆலய நிர்மாணம்.
எமது மக்களின் ஆன்மீக தேவைக்காக ஆலயம் அமைக்கும் அனுமதியை மறைந்த ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை வழங்கியதோடு ஆலயத்திற்கான அடிக்கல் 2009/7/5ம் திகதி ஆயர் ஆண்டகை அவர்களால் நாட்டப்பட்டது.இவ் அடிக்கடி நாட்டும் நிகழ்வு முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி யூட்குரூஸ் நடைபெற்றதுடன் ஆலயத்திற்கான அடிக்கல் ஒன்றும் அவரால் நாட்டப்பட்டது. அடிகளார் தலமையில்
எமது ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய திறப்புவிழா முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி மரியதாசன் குரூஸ் அடிகளார் இலங்கை திருச்சபையில் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் பல ஆயர்களின் பிரசன்னத்தில் எமது மன்னார் மறைமாவட்ட முன்னார் ஆயர் மறைந்த அதிவந்தனைக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களது 75வது பிறந்த தினத்தில் 2016ம் ஆண்டு 4ம் மாதம் 16ம் திகதி ஆசீர்வதிக்கப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி ராஜநாயகம் அடிகளார் தலமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கான நினைவாலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது, இதற்கான நிதியை எமது கிராம மக்களும், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மண்ணின் மைந்தனுமாகிய கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் வழங்கியிருந்தனர். ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களது நினைவாலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இம்மனுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களால் 7/1/2024 ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது .மேற்படி நினைவாலயம் அமைப்பதற்கான நிதியை மக்களிடமிருந்து திரட்டியதுடன் மற்றும் ஏனைய ஒழுங்குகளை திரு.மா.பிரான்சிஸ், திரு பே எமிலியானுஸ்பிள்ளை, திரு. சி.பர்ணபாஸ், திரு.க. எலியாஸ், திரு. ஞா. பேனாட் ஆகியோர் தலமையேற்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய பங்கு பணிமனைக்கு முன்னாள் பங்குத்தந்தையான அருட்பணி ஆரோக்கியம் அடிகளார் அடிக்கல் நாட்டியதுடன் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி ராஜநாயகம் அவர்கள் பங்குபணிமனையை திறந்துவைத்தார். எமது ஜோசப்வாஸ் நகர் ஆயர் இராயப்பு ஜோசப் விளையாட்டு மைதானம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் ஒழுங்கமைத்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை முன்னிட்டு 2017ம் ஆண்டு 18ம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் எமது ஜோசப்வாஸ் நகரின் பங்குத்தந்தைகள் வரிசையில் அருட்பணி யூட்குரூஸ் அடிகளார், அருட்பணி நேரு அடிகளார், அருட்பணி நெவின்ஸ் அடிகளார் (உதவி பங்குத்தந்தை) அருட்பணி ஜெகானந்தன் அடிகளார் (உதவிபங்குத்தந்தை) ஆகியோர் பணியாற்றியதுடன் ஜோசப்வாஸ் நகர் தனி பங்காக மாற்றப்பட்டு அருட்பணி மரிடிகோல் அடிகளார், அருட்பணி லக்கோண்ஸ் அடிகளார், அருட்பணி ஆரோக்கியம் அடிகளார், அருட்பணி ராஜநாயகம் அடிகளார் பணியாற்றியதுடன் தற்பொழுது அருட்பணி ஜெயபாலன் அடிகளார் பணியாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது. மருதமடு அன்னையின் வருகை மன்னார் மறைமாவட்டபங்குகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது 2024/1/9 ம் திகதி எமது ஜோசப்வஸ் நகர் பங்கிற்கு எடுத்துவரப்பட்டது. இடம்பெயர்ந்த பின் பல மாற்றங்களையும், வழர்ச்சிகளையும், முன்னேற்றங்களையும் அடைந்திருந்தாலூம். ஊரப்பற்றி நினைக்கும் போது,ஏதோ ஒன்றை பறிகொடுத்தாற் போலும், ஏதோ ஒன்றை இழந்தது போலவும் என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வரும்.