
பள்ளமடு குளம்
பெனடிற் பொனவெஞ்சர்.
பள்ளமடுக் குளம் எங்கள் சமத்துவப் பிறப்பிடம்
விடத்தல் எல்லையிலே சடைத்த நல் மருதக் காவுடனே வடலியும் பனையுமாய்
வயற் காடு சூழ்ந்து காண தெளிபுனல் வானம் காட்டும் எங்கள் பள்ளமடுக்குளம்.
மாரி காலத்தில்
நிறை மாதக் கர்ப்பிணியாய் நீர் நிறைந்து நிற்கும் - ஆங்கே துள்ளி விளையாடும்
மீன் குஞ்சுக்கூட்டமும் நீர்ப்பாம்பு குட்டியுடன் நீச்சல் பழகுமே...
வழிப்போக்கர் கால்கழுவி மருத மரத்தடியில்
உட்கார்ந்து அளவளாவ குடை நிழல் போல்
உவந்தளிக்கும்.
நீராடும் குழந்தைகளும்
கரையின் விளிம்பில் நின்றே பாத்திரத்தால் நீரெடுத்து
ஒப்பிச்சா! ஒப்பிச்சா!' - என்று குரலெழுப்பி நீராடுவார்.
ஆண்களும் பெண்களுமாய் அவரவர் கரை நின்று
வேடிக்கைக் கதை பேசி கூடிக் குளிக்கையிலே
கடிகார முள்ளும் அது காட்டும் நேரமும் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் களிக்குமாம்....
துணிமணி அலச வந்தோர் துவைத்துவிட்டு பிழிந்தெடுத்து செடிகள் மீது உலரவைத்தே
பக்குவமாய் அதை மடித்தே வீடுசேர்வார் சோர்வின்றி..
சனிக்கிழமையென்றாலே
ஊராரும் உற்றாரும் உவப்புடனே குளம் நோக்கி அதிகாலை கருக்கலுடன் பைய நடைபயின்று
பெய்யும் பனிமறந்து கூடி வருவார்....
மாட்டு வண்டிகளில்- பொருத்திய காளை மணிச்சத்தம் ஜல் ஜலென்று சவாரி போக அதிகாலை அமைதியும் அதிர்ந்து போம்....
மருத மரமேறிக் குதிக்கும் மந்திகள் போல பயமறியா இளைஞரும் நீச்சலுடன் மனம் நிறைந்து குளிரதனைப் போக்கிடவே கூச்சலுடன் குதித்தெழுவார். உடுத்த சாரமதில்
அடைத்த காற்றுடனே
முட்டைபோல இடுப்பில் கட்டி நீந்துவார் களிப்புடனே.....
இந்துக்கள் இசுலாமியர் இவர்களுடனே
கிறிஸ்தவ நண்பர்களும் ஒற்றுமையாய் தாயொன்றின் மதலைகள் போல அவரும் மகிழ்ந்து நிற்பார்.
ஒற்றைக் காலில் நின்றே தவமிருக்கும் கொக்குகளும் ஏற்ற நல் மீன்பிடித்து மகிழ்ந்து செல்லும்...
சமத்துவத்தின் இருப்பிடமாய் நிலைத்து விளங்கும் எங்கள் பள்ளமடுக் குளமது
விஞ்சும் தன் அழகுதனை இயற்கையது காட்டி நிற்கும் பன்புல்லும் மூங்கில் போல ஓங்கி நிற்கும்.
ஆங்காங்கே தவளைகளும் அரட்டி நிற்கும்...
பதுங்கி நிற்கும் பாம்புகளும் அதைப் பிடித்து மகிழ்ந்துண்ணுமே.
மறக்கமுடியுமோ பள்ளமடுதனை மறப்பாரும் உள்ளராயின்
மகத்துவமே இல்லை என்பேன்...