
3. சேவைக்கால அனுபவப் பகிர்வுகள் - ஏ.எம். முஹ்ஸின்
வவுனியா வெங்கலச் செட்டிகுள முன்னாள் பிரதேச செயலாளர்
ஆசிரியரின் சுயவிவரம: வவுனியா வெங்கலச் செட்டிகுள முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எம். முஹ்ஸின் பிரதேச மக்களால் நன்கு அறியப்பட்ட சேவையாளர். தமது பதவிகளை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்திச் சேவையற்றிய முன்னுதாரண புருஷர். மக்கள் பணியில் மானிடத்தை முன்னிறுத்திச் செயலாற்றியதால், முஹ்ஸினுக்கு இப்பிரதேசத்தில் தனி மரியாதை உள்ளது. குறிப்பாக யுத்த காலங்களில் இவராற்றிய மனிதாபிமானப் பணிகள் எக்காலத்திலும் நிலைப்படும் விசேட சேவை உத்தியோகத்தராகவும் கிராம சேவை உத்தியோகத்தராகவும், பிரதேச செயலாளராகவும் மற்றும் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளராகவும், கூட்டுறவு ஆணையாளராகவும் பணியாற்றி பலரதும் நன்மதிப்பை வென்றுள்ள முஹ்ஸின் தமது அனுபவங்களைப் பகிர்ந்து பலருக்கும் படிப்பினைக்காக சமர்ப்பிக்கிறார். பொதுப் பணியில் முதலாவது அனுபவத்தை விடத்தல்தீவு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளராகச் செயலாற்றிய காலத்தில் கற்க முடிந்தது. 1979 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை, இப்பதவியூடாக எனக்கு மக்கள் பணியாற்றக் கிடைத்தது. இக்காலத்தில் இச்சங்கத்தின் தலைவராக அஜேம்ஸ் பணியாற்றினார். முதல் அனுபவமே எதிர் நீச்சலாட வேண்டிய சங்கடத்துக்கு என்னை ஆளாக்கியது. சங்கத்தின் நிதி நிலைமைகள் திவாலாகி செயற்பாடுகள் குன்றிக்கும் அளவுக்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் நிலைமைகள் இருந்தன. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. முன்னரிருந்த நிர்வாகத்தின் திறமையீனம் மற்றும் சங்கத்திலிருந்து கடன் பெற்றோர் அவற்றை மீளச் செலுத்தாதமை என்பவைதான், சங்கத்தின் நிதிப் புரள்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்ந்தேன். உடனடியாகச் செயற்பட்டு, சங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் கடன்களை மீள அறவிடவும் வழிவகைகள் முன்னெடுக்கப்பட்டன. கடலட்டை ஏற்றுமதியை ஊக்குவிப்பதனூடாக வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்துக்கு வந்தேன். இதனால், நுகர்வோரும் ஏற்றுமதியாளர்களும் ஆர்வத்துடன் செயற்பட முன்வந்தனர். எதிர்பார்த்ததுபோல, வருவாய் அதிகரித்து, சங்கத்தின் செயற்பாடுகள் வீரியமடைந்தன. சங்க உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்குமளவுக்கு சங்கத்தின் நிதி நிலைமைகள் முன்னேறின.
1981 முதல் 1982 காலப்பகுதி
மாந்தை தெற்கு உயிலங்குளம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளை மீளாய்வு செய்யுமாறு மன்னார் மாவட்ட கூட்டுறவு ஆணையாளரால் (யு.ஊ.ஊனு) எனக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது. சுமார் ஐந்து வருடங்களாக இச்சங்கத்தின் வருவாய்கள் கணக்காய்வுக்கு (யுரனவை) உட்படுத்தப்படாமலிருந்தன. இதனாலேயே இவ்வுத்தரவு எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. உடன் செயற்பட்ட நான், ஆணையாளர் பிறப்பித்த காலக்கெடுவுக்கு முன்னராகவே கணக்குகளை மீளாய்வு செய்து எண் (இலக்க) பார்வையாகச் சமர்ப்பித்தேன். இதற்காக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவாக எனக்கு வழங்கப்பட்டது. எனது செயற்பாட்டின் வினைத்திறனையறிந்த மன்னார் மாவட்ட கூட்டுறவு ஆணையாளர், மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நிலுவைகளையும் ஆராய்ந்து கணக்கறிக்கையாக சமர்ப்பிக்குமாறு வேண்டினார். இதனைச் செவ்வனே செய்தமைக்காக ஊதியமும் நற்சான்றிதழும் எனக்கு வழங்கப்பட்டது. 1982 முதல் 1984 காலப்பகுதி
பொதுத் தொண்டில் பழுத்த அனுபவங்களைப் பெற்றிருந்த எனக்கு இக்காலப் பகுதியில்தான், அரச சேவையில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. விசேட சேவை உத்தியோகத்தராக (u)நஉயைட ளுநசஎனைந ழுக்கைஉநச) பதவி கிடைத்த கையோடு, வெள்ளாங்குள கிராம அலுவலர் பிரிவில் முதலாவதாகப் பணியாற்றப் பணிக்கப்பட்டது. தேவன்பிட்டி, பாலியாறு, வெள்ளாங்குளம் ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வோரை இனங்கண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக வீட்டுத் திட்டங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தேன். இது தவிர, மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கான சாத்திய வழிகள் சகலதையும் பயன்படுத்தினேன். குடிநீர்க்கிணறுகளை அமைத்தல், விதிகளைப் புனரமைத்தல் மற்றும் பாடசாலைகளில் முன்னெடுக்க வேண்டிய சகல செயற்பாடுகளும் கிராமோதய சபையூடாக முன்னெடுக்க என்னால் முடிந்தது.
1984 பிற்பகுதியிலிருந்து 1987 நடுப்பகுதி வரை
விசேட சேவை உத்தியோகத்தராக வெள்ளாங்குளப் பிரதேசத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், இடமாற்றலாகி சொந்த ஊரான விடத்தல்தீவுக்கு வரக் கிடைத்தது. இக்காலப் பகுதியில் ஏ.சீ.எம். மஹ்ரூப் மற்றும் அஜேம்ஸ் ஆகியோர் விடத்தல்தீவு கிராமோதய சபையின் தலைவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இவர்களது சகவாசம் மேலும் என்னை மக்கள் பணிக்குத் தூண்டியது. இவற்றில் இரண்டை பிரதானமாகக் குறிப்பிடலாம். பள்ளமடுவிலிருந்து விடத்தல்தீவு வரையான பிரதான பாதை
மற்றும் பழைய வைத்தியசாலையிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை என்பன புனரமைக்கப்பட்டன. இத்துடன் புனரமைக்கப்பட வேண்டிய ஏனைய பாதைகளும் புனரமைக்கப்பட்டு வீடில்லாதிருந்த ஏழைகளுக்கு வீடமைக்க உதவிகளும் வழங்கப்பட்டன.
பள்ளமடுக்குளம் அபிவிருத்தி
விடத்தல்தீவு மக்களின் பழங்கால வாழ்க்கையில் பள்ளமடுக்குளம் பிரதான பங்காற்றியது.ஊர் மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் அவசியமான வேளைகளில் வேறு தேவைக்காகவும் இக்குளத்து நீரையே பயன்படுத்தினர். இதனால், இக்குளத்தில், சில முன்னேற்பாட்டு செயற்பாடுகளையும் செய்ய வேண்டியேற்பட்டது. பெண்கள் ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கான மறைவிடம், குளிக்கும் கரைகளில் படிக்கட்டுக்கள் என்பவற்றை அமைக்கும் தேவைகள் உணரப்பட்டு உடனடியாகச் செய்யப்பட்டன. இதற்கான முன்னோடிச் செயற்பாட்டாளர்களில் நானும் ஒருவன். அமரர் தோப்பியாஸின் ஆலோசனை, வழிகாட்டல்களால் இவை செய்யப்பட்டன. வைத்தியசாலையின் மேம்பாடுகள்
கிராமத்தவர்களின் சுகாதார நலனில் அக்காலத்தவர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட்டதால், வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்காகவென்றே அபிவிருத்திக் குழுவும் அமைக்கப்பட்டது. காலத்துக்குக் காலம் வைத்தியசாலைகளில் எழுந்த தேவைகளை நிவர்த்திக்க இக்குழு முயன்றது. நோயாளர்களுக்கான கட்டில்கள், நுளம்பு வலைகள், மின்சாரம் தடைப்படும் நேரங்களில் பயன்படுத்தவென மின்பிறப்பாக்கி உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொடுக்க இயங்கிய இக்குழுவில், நானும் ஓயாத உழைப்பாளியாக இருந்தேன். இக்காலப்பகுதியில் கிராம சபையின் வளர்ச்சியில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களில் எம்.கலீல் (றாசிக்) ஆசிரியர் மற்றும் ஏ.ஜேம்ஸ் ஆகியோரை என்னால் மறக்க முடியாதுள்ளது.
1987 நடுப்பகுதியிலிருந்து 1990 வரையான காலம்
இதுவரை காலமும் விசேட சேவை உத்தியோகத்தராகப் பணியாற்றிய நான், இக்காலப்பகுதியில்தான் கிராம அலுவலகராக நியமனம் பெற்றேன். இப்பதவியுடன் முதற் தடவையாக பெரியமடுவில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பணியை சிரமமின்றி முன்னெடுக்க இங்கு கிராமோதய சபைத் தலைவராகப் பணியாற்றிய பி.எம். மனாப் கூடியளவில் ஒத்துழைத்ததையும் குறிப்பிட்டேயாக வேண்டும். வழமைபோல, ஏழைகளுக்கு வீடுகளை நிர்மாணிப்பதிலேயே எனது கவனம் சென்றது. 08 மைல் தூரமுடைய பெரிய மடுவிலிருந்து விடத்தல்தீவுக்கு வரும் பாதையை புனரமைத்தமை அக்காலத்துச் சாதனைகளில் பிரதான இடம் பிடித்தது. மன்னார் அரசாங்க அதிபர் எம்.எம். மக்பூலின் உதவி இதற்காகப் பெறப்பட்டது. இந்தப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னரேயே, இடை நிறுத்தப்பட்டபஸ் சேவையை மன்னார் போக்குவரத்துச் சபை மீளவும் ஆரம்பித்தது.
குறிப்பாக நினைவுபடுத்தக் கூடிய மிக முக்கியமான சம்பவத்தையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது நமது சேவைகளுக்கு அழகூட்டலாம். இராணுவத்தினர் 1987 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விடத்தல்தீவைச் சுற்றி வளைத்தனர். நாட்டில் அந்தக் காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்லையில், இவ்வாறான சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவைதான்.
இதில் நேரடியாகப் பாதிக்கப்படுவதும் மனங்கலங்குவதும் குறிப்பாகப் பெற்றோர்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இராணுவத்தின் இச்சுற்றி வளைப்பில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் ஐம்பது பேர் கைதாகி அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்நிலையில், மன்னாரிலிருந்து விடத்தல்தீவுக்கான பாதை பயணிக்க முடியாதளவுக்கு அக்காலத்தில் சிதைந்திருந்ததையும் வாசகர்களின் நினைவுக்கு விடுகிறேன். நிலைமையின் விபரீதம் கருதிய பெரியமடு கிராம சேவையாளரான நானும், கிராமோதய சபைத் தலைவராகவிருந்த அ ஜேம்ஸ் மற்றும் கிராம சபையின் முன்னாள் தலைவரும் வர்த்தகருமான கே. எம். மீரான் மொஹிதீன் ஆகியோரும் மன்னாருக்கு கடல்வழியாகச் சென்று, மன்னார் அரசாங்க அதிபர் மக்பூலைச் சந்தித்து இளைஞர்களின் விடுதலைக்கு வழியமைத்தோம்.
1990 வெளியேற்றத்தின் பின்னர்
முஸ்லிம்களை வெளியேறுமாறு விடுதலைப்புலிகளின் நிர்வாகம் விடுத்த உத்தரவு வடபுலத்தின் இயல்பு நிலையை தலைகீழாக்கியது. இந்த உத்தரவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் ஆவலுடனிருந்த முஸ்லிம்களுக்கு இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது. 1990-10-23 ஆம் திகதி எனது இல்லத்துக்கு வந்திருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அதே மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற நேரிடும் எனத் தெரிவித்ததுடன், வெளியேறும் உறுதியான தினத்தை நாளை அறிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.பின்னர் வெளியேறுவதற்கான திகதி 26 என, உறுதியாக அறிவிக்கப்பட்டது. பள்ளிவாசல்களின் உதவியுடன் இதுபற்றி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. பெரும் அமளி துமளியேற்பட்டிருந்த அந்த நேரத்தில் மக்களின் பயண ஏற்பாடுகளைச் செய்வதில், நாம் தீவிர கவனம் செலுத்தினோம்.
நாளொன்றுக்கு ஐம்பது குடும்பத்தினர் வெளியேறத் திட்டமிட்டிருந்தனர். முதல் நாளன்று பள்ளிவாசலின் முன் மண்டபத் தளத்திலிருந்து விடத்தல்தீவு பங்குத் தந்தை செபமாலை அடிகள் கண்ணீர் மல்க சொற்பொழிவாற்றி வழியனுப்பி வைத்தார். இறுதி நாளான 30 ஆம் திகதி நானும் எனது குடும்பமும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் வெளியேற நேர்ந்தது. இந்தக் காட்சியைக் கண்ணுற்ற இந்து, கிறிஸ்தவ மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்த காட்சி இன்று வரைக்கும் மனிதாபிமானத்தின் அடையாளம்தான்.
1990-11-03 தொடக்கம் 2002-10-01 வரை
கிராம அலுவலகரான நான் புத்தளம் நகரில் எனது வதிவிடத்தை அமைத்ததுடன், மக்களுக்கான பணிகளை புத்தளம் பிரதேச செயலகத்திலுள்ள கிராம அலுவலர்களுடன் இணைந்து முன்னெடுத்தேன். இதே காலப்குதியில்தான் கிராம அலுவலகர்களை தரம் 01 க்கு தரமுயர்த்தும் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. இந்த பரீட்சையின் முடிவுகள் 1994 ஆம் ஆண்டு வெளியானபோது, மன்னார் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றிருந்தேன். இதனால், எனக்கு பதவி உயர்வும் கிடைத்தது. இதையறிந்த மன்னார் அரச அதிபரான எஸ். எம். குரூஸ் புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக மன்னார் வருமாறு என்னை அழைத்தார். அங்கு சென்று அரசாங்க அதிபரைச் சந்தித்த எனக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தோரின் இணைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியது.
எனக்கு வழங்கப்பட்ட பணிகள்
இடம்யெர்ந்த அரச ஊழியர்களின் சம்பளங்களை மாதாந்தம் கொண்டு சென்று அவர்களிடம் ஒப்படைப்பது, இடம்பெயர்ந்த நிலையில் நாடு பூராகவும் பரந்து வாழும் முதியோர்களின் மாதாந்த உதவிப் பணத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவரவர் வாழும் பகுதிகளுக்கு அல்லது அகதி முகாம்களுக்கு ஒப்படைப்பது என்பவற்றை பிரதான பணிகளாக முன்னெடுத்தேன். இவர்களின் நிதியைப் பாதுகாப்பாகக் கொண்டு உரியவர்களிடம் சேர்ப்பதற்காக, விசேட முகாமைத்துவ உதவியாளர் அல்லது சிறாப்பர் ஒருவரையும் எனக்கு உதவியாக நியமித்தனர். இந்தப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில்தான், மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு ஆசிரியர் நியமங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் அனுமதிக் கடிதங்கள் கிடைத்த சகலரும் தோற்றியிருந்தனர். பரீட்சையில் தோற்றுவோர் தாம் பிறந்த கிராமத்துடைய கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட வதிவிடச் சான்றிதழையும் ஒப்படைக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டிருந்தனர். இதை வழங்காதவிடத்து நியமனம் மறுக்கப்படும் என்று கண்டிப்பான உத்தரவும் இடப்பட்டது.
அந்தக் காலத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள பிறந்த கிராமங்களுக்குச் செல்வதை கற்பனையால் கூட நினைக்க முடியாதிருந்தது. இவர்களின் இப்பரிதாப நிலை குறித்து எனக்கு உணர்த்தப்பட்டதால், மன்னார் அரசாங்க அதிபரிடம் இதுபற்றிப் பேசத் தீர்மானித்தேன். பிற்பகல் நான்கு மணியளவில் அரசாங்க அதிபர் குரூஸை சந்தித்து பரீட்சைக்குத் தோற்ற விருப்புள்ளவர்களின் நிலையை எடுத்துரைத்தேன். உடனடியாக தமது பிரத்தியேகச் செயலாளரை அழைத்த அரசாங்க அதிபர், சகல திணைக்களங்களுக்கும் ஒரு அறிவிப்பை விடுத்தார். மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை இணைப்பாளரான தம்மிடம் (முஹ்ஸின்) ஒப்படைப்பதாக அறிவித்து, அவசரமாக இந்தச் சுற்றறிக்கையை சகல திணைக்களங்களுக்கும் டிலாயனெ மூலம் அனுப்புமாறு செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த கணமே இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. இன்றளவும்கூட மன்னார் அரசாங்க அதிபரின் இந்த மனிதாபிமானத்தை மக்கள் நன்றியுடன் நினைப்பதை நானறிவேன்.
இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்ளீர்ப்பு
காலங்கள் இவ்வாறு சுழன்றடித்துக் கொண்டிருக்கையில், இலங்கை நிர்வாக சேவைக்குள் ஆட்களைச் சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதற்கு நானும் விண்ணப்பித்ததால்,2002 ஆம் ஆண்டில் இந்தப் பரீட்சைக்குத் தோற்றக் கிடைத்தது. இலங்கை ரீதியில் ஆறாவது இடத்துக்கு தெரிவான நான், 2003-10-02 ஆம் திகதி நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டேன். ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் சுமார் மூன்று மாதங்கள் பயிற்சி முடித்து, வவுனியாவெங்கலச் செட்டிகுள பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணியாற்றத் தொடங்கினேன்.
2003-10-02 தொடக்கம் 2011-01-08 வரை
வவுனியா வெங்கலச் செட்டிகுளத்தில் பதவிகளைப் பொறுப்பேற்ற வேளையில், கண்டிப்பான ஒரு பெண் அதிகாரியுடன் அறிமுகம் ஏற்படத் தொடங்கியது. வேலை, அலுவலகம் நிர்வாகம் என்பவற்றில் கண்டிப்பும், கவனமும் உள்ள நிர்வாகி அவர். பிரதேச செயலக ஊழியர்கள் குழுக்களாகப் பிரிந்து பணியாற்றும் நிலை ஏற்படுமளவுக்கு பிரதேச செயலகத்தில் நிலைமைகள் இருந்தன. இவர்களில் சிலர், பிரதேச செயலாளருக்கு சார்பாகவும், இன்னும் சிலர் எதிர்ப்பாகவும் மற்றும் சிலர் நடுநிலையுடனும் செயற்பட்டனர்.
இதனால், சிறிது காலங்களுக்குப் பின்னர் பிரதேச செயலாளர் வவுனியாவுக்கு மாற்றலாகிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதன் பின்னர், பிரதேச பதில் செயலாளராகக் கடமையாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அன்று முதல் பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருந்த சகல குழுக்களும் ஒன்றிணைந்து எனது செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்கின. நிர்வாகத்தை திறன்பட நடத்துவதற்கு இக்குழுக்களின் ஒன்றிணைவுகள் உதவின. யுத்தம் கோரத் தாண்டவமாடிய காலம் என்பதால், வவுனியாவில் இயங்கிய சகல அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டேன். அவதியுறும் மக்களுக்கு அதிகரித்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் தொடர்புகள், பாரியளவில் உதவியதையும் குறிப்பிட வேண்டும்.
எட்டு வருடங்களிலான இக்காலப்பகுதிகளில் இரட்டைச் சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அடுத்தது வடகிழக்கு யுத்தத்தில் பாதிப்புற்று புலம்பெயர்ந்த தமிழ் மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் என்பவையே அவை.
குறிப்பாக 1977 மற்றும் 1978 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தென்னிலங்கையில் நிகழ்ந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வந்த மலையக மக்களுக்கும் எதையாவது செய்வதற்கு இந்தத் தொடர்புகள் உதவின பொதுவாக வீடில்லாதிருந்த குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுத்தல், புலம்பெயர்ந்து வந்தோரை மீளக் குடியமர்த்தல் மற்றும் ஸ்தம்பித்திருந்த இக்குடும்பங்களின் இயல்பு நிலையை இயங்கச் செய்ய வாழ்வாதார உதவிகளை வழங்குதல் என்பவற்றில்தான், எனது கவனம் குவிந்திருந்தது. பதில் செயலாளராகக் கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை இதற்காக உச்சளவில் பயன்படுத்தக் கிடைத்ததை பெரும் பாக்கியமாகவே கருதிகிறேன்.
மெனிக்பாம், கந்தசாமி புரம், தட்டாங்குளம் போன்ற கிராமங்களில் மலையகத்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். இடப்பெயர்வு என்பது வார்த்தைகளால் விளக்க முடியாதளவுக்கு துயர் நிறைந்த சவாலுள்ள வாழ்க்கையாகும். பூச்சியத்திலிருந்து வாழ்வாதாரத்தை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்புலப்பெயர்வில் உள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். எனவே, இவர்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுக்கவும் தொழில் முயற்சிகளுக்கு வழிகாட்டவும் வழியேற்பட்டது.
காணிகளில்லாமல் செட்டிகுளப் பிரதேசத்தில் வாழ்ந்தோருக்கு காணிகளை வழங்கும் நோக்குடன் காணிக் கச்சேரி நடத்தி, சின்னச் சிப்பிகுளம் மற்றும் பெரியகட்டு கிராம அலுவலகர் பிரிவுகளில் இம்மக்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கை எடுத்தோம். மூவினத்தவர்களிலிருந்தும் ஐம்பது குடும்பங்களைத் தெரிவு செய்து, முன்மாதிரி வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் வீடில்லாதோருக்கு வீடுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாதாந்தம் நடமாடும் சேவைகளை நடாத்தி மக்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. இந்த நிர்வாகச் செயற்பாடுகளுக்கு ஊழியர்களதும் பொது மக்களினதும் ஒத்துழைப்புக்கள் கிடைத்தன.
மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த செட்டிகுளப் பிரிவில் எனக்குப் பணியாற்ற கிடைத்ததை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். 95 தமிழ் கிராமங்கள், எட்டு முஸ்லிம் கிராமங்கள் என, 103 கிராமங்கள் இந்த செட்டிகுளப் பிரிவில் இருந்தன. இந்த ஒற்றுமை எனது கடமையை செவ்வனே செய்வதற்கும் வழிகோலியது. இந்த திருப்தியில் இன்புற்றிருக்கையில் மற்றொரு பேரிடியாக வன்னிப்போர் உக்கிரமடைந்தது. உச்சந் தொட்டிருந்த போரின் போக்குகள் வன்னி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து மக்களைப் புலம்பெயரச் செய்தது. ஏதிலிகளாக வெளியேறிய மக்களும் எதையாவது செய்யும் பொறுப்புக்கள் எனது பதவிக்கு வந்து சேரலாயின.
செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லாற்று பாலம் தொடக்கம் பறையனாலங்குளம் வரையிலான அரச காணிகள் 5000 ஏக்கர் வரை துப்புரவு செய்யப்பட்டு மக்களை குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்படலாயின. வன்னிப் புனர்வாழ்வு அமைச்சின் மூலம் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு பத்துக்கு மேற்பட்ட முகாம்களும் அமைக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் ஆரம்பமான இறுதிப்போரில் சரணடைந்த பொதுமக்களின் ஒரு தொகுதியினரை 2008 நவம்பர் 28 ஆம் திகதி இராணுவம் பொறுப்பேற்று
எம்மிடம் ஒப்படைத்தனர். இவர்கள் செட்டிகுளம் மத்திய மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த அகதிகள் வந்து சேர்ந்த அதேநாள் இரவு 12.30 மணியளவில் உறக்கத்துக்குச் சென்றபோது நள்ளிரவு 2.30 மணியளவில் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு என்னைக் கதிகலங்க வைத்தது. எனது மனைவி காலமானதாக அறிவிக்கப்பட்டதால் செய்வதறியாது நின்றிருந்த நிலையில் இன்னுமொரு தொலைபேசி அழைப்பில், இன்னுமொரு மக்கள் கூட்டம் அகதிகளாக வவுனியா வந்து சேர்வதாக அந்த அழைப்பில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மேல்மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துவிட்டு சக பணியாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். இதன் பின்னர் அரசாங்க அதிபரின் அனுமதியுடன் 2008-11-29 அதிகாலை 4.30 மணிக்கு மனைவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக புத்தளம் புறப்பட்டேன். அதே மன நிலையுடன் 2008-11-30 மீளவும் கடமைக்குத் திரும்பினேன்.
மனைவியை இழந்த சோகம் ஒரு புறமும் இடம்பெயர்ந்தவர்களின் துயரம் மறுபுறமும் என்னை நிலை தடுமாற வைத்தன. இருந்தாலும் எனக்கு நானே ஆறுதல் கூறி மக்கள் பணியாற்ற மீண்டும் தலைப்பட்டேன். வன்னிப் போரில் 2009-08-18 வரை சரணடைந்திருந்த சுமார் மூன்றரை இலட்சம் மக்களும் எனது நிர்வாகத்தின் கீழ், மீளத் தங்க வைக்கப்பட்டனர். பத்துக்கு மேற்பட்ட முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் இன்னும் சில பொது இடங்களில் இம்மக்கள் தங்க வைக்கப்பட்டதுடன், நாளாந்த தேவைகளை நிவரத்திக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.
அரச அதிபரின் வழிகாட்டலில் நிர்வாகக் கடமைகளைப் பொறுப்பேற்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட கள அலுவலர்கள், தொண்டர்கள், வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் துணையுடன் இம்மக்களுக்கான நாளாந்த உதவிப் பணிகள் தொடர்ந்தன. எவ்வித தயக்கமோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் வன்னி அகதிகளை மீளக் குடியமர்த்தும் வரை இவர்கள் சகலரும் உழைத்தனர். இந்த உயரிய பண்பாளர்களை என்னால் மறக்க முடியாது.
இந்நிலையில், 2011-01-08 ஆம் திகதி நான் ஓய்வு பெற்றேன். எனக்கு 2011-01-10 ஆம் திகதி வழங்கப்பட்ட பிரிவுபசாரம், கௌரவிப்பு என்பவை என்றைக்கும் பெருமிதமாகவே உள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளிலும் எனக்கு வழங்கப்பட்ட கௌரவங்களை வாழ்நாள் வரைக்கும் நன்றியுடன் நோக்குவதால் நான், பூரிப்படைகிறேன்.