
1.1985ம் ஆண்டு தொடங்கிய எம் வாழ்க்கை - வரப்பிரகாசம் நிஷாந்தான்
எம்மை இவ் உலகு தத்தெடுத்த ஆண்டு. எம் இனத்தின் இடம்பெயர்வு தொடங்கிய காலமும் எம் ஊர் மக்கள் வேறு ஊர் தேடி அலைந்து திரிந்த ஆண்டும். பல பிரச்சினைகள் மத்தியில் இவ் உலகு எம்மை ஏற்றுக்கொண்ட ஆண்டு.
போற இடத்திலே தங்கள் பிரசவத்தை எதிர்கொண்ட எம் தாய்மார்கள். நாம் பிறக்கும்போதே எம் இனத்தின் பிரச்சினையை எதிர்கொண்ட பிள்ளைகள். 1985ம் ஆண்டு பிறந்த எம் பார்வையில் எம் ஊர்...,
ஆரம்ப பள்ளி யோசப்பின் கொஸ்கா சித்திரா என மிக மிக அருமையான ஆசான்;கள் சிறுவர்கள் போல் மாறி நளினத்தோடு கற்றுத் தருவதில் வல்லவர்கள். பெரிய மூடைகளில் பால்மா கொண்டு வருவதும் அதை எமக்கு தருவதும் வெள்ளிக்கிழமைகளில் இலை கஞ்சி கொடுத்து எமது உடலை பலப்படுத்துவது என்று பல செயல்பாடுகள் அதற்காகவே விரும்பி பாடசாலை சென்ற காலங்கள் அது. எந்த ஒரு துன்பமும் அறியாது எமக்கான சிறுபிள்ளைத்தனத்தோடு கையடக்க தொலைபேசி இல்லாது சிறுவர்களுக்கான சேட்டைகள் அனைத்தும் செய்து மகிழ்வாக இருந்த காலங்கள் பிள்ளையார் கோயிலில் பொங்கல் கடலை வடையென அனைத்தும் வாங்கி உண்பதும் புதுக்கட்டு என்பது அது அப்போது எமக்கு மிகப்பெரும் மைதானம் பிள்ளையார் கோவிலுக்கு முன்னாடி உள்ள வீடுகள் அற்ற வெறும் தரவை அதில் உட்கார்ந்து அனைத்து உணவையும் உண்ட பின் பிள்ளையார் குண்டு தாவீது குண்டு நீர்த்தேக்கங்களில் எங்கள் கை கால் முகம் என அனைத்தையும் கழுவி மகிழ்ந்த காலம் இன்று வரை மறக்க முடியுமா? மதங்கள் மூன்று இருந்தாலும் அனைவரின் மனதிலும் ஊர் என்ற ஒரு மனமே. ஆரம்பப் பள்ளி முடித்து பாடசாலை தொடங்கிய காலம் ஆத றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மணி மாஸ்டர் அதிபராகவும் மலர், கிறிஸ்டின், சாந்தி, விர்றேசன,; கிருசாந்தி என்னும் பல தொண்டர் ஆசிரியர்கள் ஆரம்ப காலத்திலேயே எம்மை பண்படுத்திய ஆசிரியர்கள் மாந்தை பிரதேசத்தில் மிகப்பெரும் பாடசாலை எமது பாடசாலையே என பெருமை பட்டோம். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களின் இடம்பெயர்வால் எமது சொந்தங்கள் பல எமது ஊரை தேடி உறவுகளை தேடி அகதிகள் ஆக்கப்பட்டு வந்தார்கள் அப்போது நாம் சிறு பிள்ளைகள் என்பதால் அவர்களின் வலிகள் எமக்கு புரியவில்லை அந்த நாட்களில் எமது இஸ்லாமிய உறவுகள் இடம் பெயந்து அகதிகளாக புத்தளத்திற்கு வெளியேற்றப்பட்ட நேரம் நான் மிகவும் சிறியவன் அவர்கள் பார ஊர்தியில் ஏற்றி அனுப்பப்பட்டார்கள் என நினைக்கின்றேன் அவ்வேளையில் எமது ஊர் அணைத்து மக்களும் அவர்களை கண்ணீர் மல்க அனுப்பியது சிறிது நினைவு இருக்கிறது அவர்கள் சென்றதினால் அவர்களின் வீடுகள் அவர்களின் நிலங்கள் யாரும் அற்று வெறுமையால் வாடியாது பின்பு இடம் பெயர்ந்து வந்த யாழ்ப்பாண மக்கள் இஸ்லாமிய மக்களின் வீடுகளில் குடியேறினார்கள் அவர்களின் வருகையால் எமது பாடசாலையில் மாணவர்கள் நிறைந்து வழிந்தார்கள் இதில் ஒன்றை கூறவேண்டும் அப்போது அலிகார் பாடசாலை நிறைய குடும்பங்கள் வாழும் ஓர் வாழ்விடத்தை வழங்கி மக்களின் கண்ணீர் துடைத்தது மாணவர்கள் கூடியதால் பல ஓலை கொட்டகைகளில் திறந்த வகுப்பறைகளில் என அனைத்திலும் மாணவர்கள் கல்வி கற்ற காலம் அது. புத்தகங்களின் பற்றாக்குறையால் இருவர் மூவர் என ஒரு புத்தகத்தை சேர்ந்து ஒரு மாணவர் வீட்டிலே இரண்டு மூன்று மாணவர்கள் சேர்ந்து இரவு நேரங்களில் கல்வி கற்று அவர்கள் வீட்டிலேயே இரவு உணவு உண்ட சந்தோசமான தருணங்கள் இன்று வரை மறக்க முடியாத நேரங்கள் அவை. மாலை 6:00 மணி ஆனது என்றால் தெருக்களிலே பாடசாலை மாணவர்கள் வருவதென்றால் அவசிய தேவைகளுக்கு மட்டுமே. இல்லையென்றால் பல பேரின் பிரம்படி வாங்க வேண்டும். மிகவும் கட்டுப்பாடான மிகவும் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க பல பேரும் முயற்சி செய்தார்கள். யாருடைய பிள்ளைகளை தண்டித்தாலும் பெற்றோர்கள்ஏதும் சொல்வதில்லை தப்புகள் செய்யும்போது யாரும் தண்டிக்கலாம் என்றொருமனப்பாங்கு எமது மக்கள் மத்தியில் அதனாலேயே எமது ஊர் பல பேரின் கைகளால் செதுக்கி எடுக்கப்பட்ட சிற்பத்தை போன்று மிக ஒழுக்கமான சமூகமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அந் நாட்களில் தொலைக்காட்சி பெட்டி ஓரிரு வீட்டில் தான் வைத்திருந்தார்கள். திரைப்படம் பார்ப்பதானால் இந்து கோயில் திருவிழாக்கள் எமது ஊரின் திருமண வீடுகள் என்று சிறு விசேஷங்கள் வந்தால் தான் கண்ணன் அண்ணனினால் திரைப்படம் காண்பிக்கப்படும். இந்தத் தொலைக்காட்சி பெட்டியும் மிகவும் கஷ்ரப்பட்டு தான் இயக்க வேண்டும் என்பது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும்.
அந் நாட்களில் தினமும் சனி கிழமைகளில் இரவு ஒன்பது மணியளவில் ஜெய் ஹனுமான் என்னும் ராமாயண நாடகம் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளி பரப்பாகியது அதைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சி பெட்டி உள்ள வீடுகளுக்கு எம் மக்கள் குடும்பங்களாக சென்றது இன்றும் நினைவிருக்கிறது. எமது பாடசாலையில் மணி மாஸ்டர் ஓய்வு பெற்ற பிற்பாடு திரு.ராஜகோன் அதிபராகவும் டெயிசி ஆசிரியை உப அதிபராகவும் வரும்போது நாம் கொஞ்சம் வளர்ந்து விட்டோம். அடிகளுக்குப் பஞ்சமில்லை நாம் செய்த தப்புகளும் கொஞ்சம் இல்லை பாடசாலை பக்கத்தில் சேமக்காலை அதனில் ஒளிந்திருந்து பாடசாலைக்கு போவதில்லை யாராச்சும் கண்டுவிட்டால் வீட்டிலும் பாடசாலையிலும் அடிக்கு பஞ்சம் இல்லை. ராயகோன் அதிபரைக் கண்டுவிட்டால் தப்பேதும் செய்யாவிட்டாலும் கை கால் நடுங்கும் அவ்வளவு பயம் கலந்த மரியாதை கணக்கு வாய்ப்பாட்டை தலைகீழாக கேட்கும்போது சொல்லாமல் தடுமாறி அடியும் வேண்டி உள்ளோம் டெயிசி டீச்சர் ஆங்கிலம் கற்பிப்பார். மிக மிக கண்டிப்பானவர். ஒழுக்கத்தை மிகவும் எதிர் பார்ப்பவர். தவறுகள் செய்துவிட்டால் யார் என்று பார்க்க மாட்டார் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிதான். பெனெடிற் மாஸ்டர் மற்றும் மரியசீலி ஆசிரியை போன்றோர் மறக்க முடியாதவர்கள். பெனெடிற் மாஸ்டரிடம் ஆங்கிலம் கற்றவர்கள் இன்று வரை அவர் கற்பித்த முறையை மறக்க முடியாது வகுப்பறையில் கடைசி மேசையில் உள்ளவர் வரை ஒரு பாடத்தை கற்று முடித்தால் தான் அடுத்த பாடமே ஆரம்பமாகும் அப்படி ஒரு அக்கறை கொண்ட ஆசிரியர் அவர் கற்பித்த முறை இன்றும் ஞாபகம் இருக்கின்றது அவர் ஆங்கிலத்தில் கற்பிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக கற்று தருவார். மரியசீலி ஆசிரியர் மிகவும் பிடித்த ஆசிரியர் அவரிடம் கண்டிப்பு எப்போதுமே இருக்காது. அன்பினால் அனைவரையுமே திருத்தி எடுத்து விடுவார். அவர் கற்பிக்கும் முறையே வித்தியாசம். அவர் கற்பிக்கும் போதே அனைவருடைய மனசிலும் பதிந்துவிடும். அவர் கற்பிக்கும் போது அந்தப் பாடத்தையே கதையாக சொல்லிவிடுவார். அதனாலேயே அவருடைய பாடம் என்றால் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.
பாடசாலை பின்புறத்தில் கடல் நீர் ஆறு வேறு ஆத்துக்குள்ள இறங்குவதும், பல அழுக்குகளை பிரட்டுவதும், மீன் குஞ்சு பிடிப்பதும், இறால் முட்டை தேடுவதும், சிப்பி எடுத்து விளையாடுவதும், சிறு நண்டு பிடிப்பதும் என்று பல பொழுதுபோக்கு திருகுளத்தில் குளிக்காத மாணவர்கள் மிகஅரிதாக இருப்பார்கள் அவர்கள் விரும்பி ஒன்றும் குளிப்பதில்லை பாடசாலை முடிந்ததும் அல்லது பாடசாலை இறுதி நாளில் பாடசாலை பெறுபேறு சான்றிதழ் தந்த உடன் எங்களுக்குள்ளே விடுமுறை வரும் மகிழ்ச்சியினால் ஒவ்வொரு ஆளாக தள்ளுமுள்ளு பட்டு விழுந்து விடுவோம் என்றுமே பச்சைக் கலரில் காட்சி தரும் திருகுளம் நீர் அன்று மட்டும் நிறம் மாறி காணப்படும். பாடசாலை தோட்டத்திற்கு திருகுள நீரையே அள்ளி ஊற்றுவோம். யுத்தத்தின் கொடூரம் எம்மை விட்டு வைத்ததில்லை பல குண்டு சத்தம் பல விமான இரைச்சல் என பலவற்றுக்கும் பாதுகாப்பு தேடி மரத்தின் அடியிலும் பதுங்கு குழியிலும் ஆலய முற்றத்திலும் படுத்து எழும்பிய அனுபவங்கள் எமக்கு நிறையவே உண்டு. பலவற்றுக்கும் பயந்து பயந்து பழகிய காலம் என்றாலும் கடவுளின் கிருபையால் எமது ஊர் எப்போதும் பாதுகாத்து வரப்பட்டது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை. இருந்தபோதிலும் சில உயிர்களையும் விமான செல் தாக்குதலில் பலிக்கொடுத்த கண்ணீர் வலிகளும் அனுபவித்தோம்.
குருசு கோயில் திருவிழா வந்துவிட்டால் ஊர் கூடி உலை வைத்து சமைத்து ஒற்றுமையாய் ஊரோடு உண்டு மகிழ்ந்தோம். கோயில்குளம் அந்தோணியார் கோயில் திருவிழாக்கள் வந்து விட்டாலும் ஊர் கூடி உலை வைத்து சமைத்து உண்ட சந்தோச காலங்களும் உண்டு நுங்கு வெட்டி அய்யனார் கோயில் திருவிழா வந்துவிட்டால் அதில் எம் மக்களின் எண்ணிக்கையே அதிகம் சமயங்கள் தெரிவதில்லை சாதிகள் தெரிவதில்லை சந்தோசம் மட்டுமே அதில் தெரியும். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது விளாங்காய், புளியம்பழம் என்று பலதையும் கட்டி சுமந்தபடி வீடு வந்து சேர்வார்கள். வாரத்தில் சனிக்கிழமை வந்து விட்டால் குளமே கொந்தளிக்கும் ஊர் முழுதும் குளத்தில் நிற்கும் இளசுகள் மட்டும்; மதுர மரத்தில் நிற்கும். போட்டி போட்டு பாய்வதும் குளத்தை நன்கு கலக்குவதும் ஊரவரிடம் திட்டு வாங்குவதும் அதிலும் ஒரு சந்தோசம் தான். குடி தண்ணி மறக்கவே முடியாது. நாலு மணிக்கு எழுந்திருச்சு படையெடுக்க ஆரம்பித்தால் நல்ல தண்ணி கிணறு தாங்காது. துவிச்சக்கர வண்டியின் பின்புறம் இரண்டு குடம் முன்புறம் இரண்டு குடம் கரியரில் தண்ணி கேன் என்று ஒரு வாகனத்தில் ஏற்றும் பாரத்தை போல் குடிதண்ணி அள்ளிச் செல்வார்கள் இது ஆண்களின் வேலை பெண்களோபள்ளிவாசல் கிணறு, யாகப்பர் ஆலய கிணறு, அலிகார் பாடசாலைக்கு முன்னுள்ள குழாய் கிணறு அனைத்திலும் வரிசை கட்டி நிற்பார்கள்.
தலையில் இருக்கும் குடம் இடுப்பில் ஒரு குடம் என்று சிறு உவர் கலந்த நீரை பாத்திரங்கள் கழுவுவதற்கும் முகம் கை கால்கள் கழுவுவதற்கும் அள்ளி சரிப்பார்கள் அதில் சிங்கம் ஐயாவின் மாட்டு வண்டி தண்ணி அள்ள வரும் அழகே தனி வண்டியில் தண்ணியை அள்ளிவிட்டால் யாருடைய உதவியும் இன்றி தனக்குரிய பாணியில் வீதியின் ஓரமாக நடந்து சென்று வீடு சேரும் அப்படி ஒழுக்கமான மாடுகள். காலை ஆறு மணி மட்டும் தண்ணி அள்ளி முடித்துவிட்டு திருப்பலிக்கு போக வேண்டும். போகா விட்டால் அதற்கு வேறு அடி வாங்க வேண்டும். அனைத்திலும் ஒழுக்கங்கள் பழையவர்கள் சொல்லி கேள்விப்பட்டதுண்டு றெயிஸ் இராஜநாயகம் பங்குத் தந்தைதான் எமது ஊரை நல்வழிப்படுத்தியவர் எமது கழகங்களை ஒன்றிணைத்து ஐக்கிய விளையாட்டு கழகம் உருவாக்கியவர் என்றும் மறக்க முடியாதவர் என்றும் நாம் கேள்விப்பட்டோம; ஆனால் எங்கள் காலத்திலும் மறக்க முடியாத பங்குத்தந்தை ஒருவர் பணி செய்தார் இரண்டு கோயில் அமைப்புகளையும் ஒன்றாக்கி மக்களிடையே அன்பு என்னும் ஒரு விளக்கை ஏற்றி முன்மாதிரியாக வாழ்ந்தவர். அருள்மாரி மண்டபம் என்று உருவாக்கி அதில் மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியும் செய்து தந்தார் அனைவருக்கும் பிடித்தவர் மிகவும் நேர்மையானவர் வின்சன் பற்றிக் அடிகளார். பாடசாலை செல்லுங்காலங்களில் ஒரு றாத்தல் பாண் வாங்கி நாலு துண்டாக வெட்டி தேனீர் உண்ட காலங்கள். ஆளுக்கொரு ஆட்டுக்காலுடன் கையிலே சீனியை கொட்டி தேனீர் தொட்டு குடித்த காலங்கள். சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது கடாவி தோடம்பழ இனிப்பு என்று பலவற்றுடன் தேனீர் பருக்கிய
அனுபவமும் உண்டு. அதுதான் எம் வறுமையை உணர்த்தியது இரவு கடலுக்குப் போய் வருபவர்களின் மீன்களை எடுத்து அந்த நேரத்திலே புளி மிளகாய் வைத்து உண்ணும்போது அந்த சுவை வேறு எதிலும் கிடைக்காது இன்னமும் அந்த ருசி நாவிலே இருக்கு. லுக்ஸ் ஐயா, செபமணி சிலுவை ஐயா போன்றோரின் வள்ளம் வரும் வரை காத்திருந்து 50ரூபாய்கு ஒருகிலோ கொட்டுவலை விளமீன் வாங்கியதும் சாலமோன் அண்ணன் வாடியில் ஐஸ் எடுத்து உண்பதும் இன்னும் மறக்க முடியாதவை. மாசி பங்குனி காலங்களில் எம்மை கண்ணா காடுகளில் அதிகமாக காணலாம் கிளிக்குஞ்சு எடுப்பதும் அதை வித்து வரும் பணத்தில் செல்லன் மத்தேஸ்அப்பா, வலோரியான் ஐயா போன்றோரின் கடைகளில் தின் பண்டங்கள் வாங்கி தின்பதும் இலந்தைகாய், புளியம்பழம் பிடுங்கி தூள் போட்டு சாப்பிடுவது என்று சொல்லில், அடங்காதவை. இந்த சந்தோஷங்கள் மத்தியிலும் சில கசப்பான சம்பவங்களும் நம் மக்களுக்கு இடம் பெற்றன எமக்கு விவரம் தெரிய முன்னரே இஸ்லாமிய சகோதரர்கள் இடம்பெயர்வு இடம் பெற்றதால் இஸ்லாமிய சகோதரர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை ஆனால் நம் பெற்றோர்களின் வாய் மூலமாக அவர்களுடன் வாழ்ந்த ஒற்றுமை நல்லிணக்கம் பற்றிய தகவல்கள் எமக்கு பரிமாறப்பட்டன. ஆதலால் அவர்களைப் பற்றிய தகவல் கொஞ்சம் அதிகம் எமக்கு தெரியும். 1999ம் ஆண்டு இடம்பெயர்வின் பின்னாடி எம் ஊரின் கட்டுப்பாடு ஒழுக்கங்கள் தளர்த்தப்பட்டன என்று கூறுவேன்.
இடம்பெயர்வின் முன்னாடி நம் மக்களிடம் பெரிதாக பணம் இல்லை பெரிதாக அபிவிருத்தி இல்லை ஆனால் அன்புக்கு பஞ்சமில்லை, பல திறமைக்கு பஞ்சமில்லை பல ஊர்களின் முன்மாதிரி எம் ஊராகவே இருந்தது இன்று அனைத்தும் சிறு கேள்விக்குறி ஆகவே இருக்கின்றது. 1985ம் ஆண்டு தலைமுறையே எமது ஊரின் அனைத்து சுகங்களையும் கண்ட கடைசி தலைமுறை அதன் பின் உள்ளவர்கள் இடப்பெயர்வின் பின்னர் 1999ம் பின்னாடி உள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அந்தக் கால வாழ்க்கைக்கும் தற்போதுள்ள இந்தக் கால வாழ்க்கைக்கும் வித்தியாசம் பல உண்டு. அன்று சந்தோசம் நிறைந்திருந்தது. வீட்டில் பல உறவுகள் நிறைந்திருந்தது. உறவுகளுடன் சேர்ந்திருக்கும் நேரம் நிறைந்திருந்தது. இன்று இதில் எதுவும் இல்லை அவசர உலகம் உழைக்கும் நேரம் அதிகம். உறவுகள் பக்கத்தில் இல்லை. சேர்ந்து உண்ணும் காலமும் இல்லை. தொலைத்து விட்டோம் எமது ஒழுக்கத்தை. எமது பண்பாட்டை எமது பெருமையை. எப்போது மீட்டெடுப்போம் எமது ஒற்றுமை நமது பண்பாடு எமது பாரம்பரியம். கேள்விக்குறியே சில பாரம்பரிய பழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வோம். இருக்கும் எமது ஊரின் கொஞ்ச பாரம்பரியத்தையாவது கட்டிகாப்போம்.
நாம் கண்ட ஊர், நாம் வாழ்ந்த ஊர், நாம் கண்ட ஒற்றுமை இனி எப்போது வரும். தொலைந்து போகுறது தொலைபேசியில் சில உறவுகளின் பொழுது போக்கும் பாச பிணைப்பும் தொலையாமல் மீட்டெடுக்க முயற்சியே இந்த மாநாடு.
கொடி கட்டி பறந்த எமது ஊரும் இப்போ கொடி கட்டி பறக்க துடிக்கும் நமது ஊரும்
பாப்பா மோட்டை தொடங்கி பள்ளிக்குடா வரைக்கும் கடல் முழுதும் ஆண்ட பரம்பரை பல ஊருக்கு கூலி கொடுத்து வாழ வைத்த பரம்பரை இன்று கடல் சுருங்கி கையளவு வந்த பின்பு மற்றவரின் ஊருக்கு போய் கையேந்தும் நிலை வந்திடுமோ அன்று ஊர் கூடி ஒன்றாய் நின்றோம் ஒருவர் நம்மை தொட நினைத்தால் நம் ஊரின் ஒற்றுமை தான் அவர்கள் கண் முன்னே தோன்றி விடும். வானுயர் ஆலயங்கள் இரண்டாக இருந்தாலும் மிகச் சிறப்பாக திருவிழாக்கள் வருடம் தோறும் செய்து விடுவோம் வடையுடன் மோதகமும் சர்க்கரைப் பொங்கலுடன் கடலையும் இனிதாய் சாப்பிட்டு மகிழவே நம்ம ஊரு பிள்ளையார் கோயில் பணி நம்மை நித்தமும் அழைத்திடும். ரமலான் மாதம் வந்து விட்டால் நோன்பு கஞ்சிக்கு பஞ்சம் இல்லை ஒவ்வொரு வீடாக கொண்டு வந்து தந்து விடுவார். இப்படி நம் சமயங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருந்ததுவே. விளையாட்டை எடுத்து விட்டால் எம்மை அடிக்க ஆள் இல்லை ஊரோடு சென்றிடுவோம் அங்கேயே தங்கிடுவோம் வெற்றி கிண்ணம் கையில் ஏந்தும் மட்டும் சமையல் பல செய்திடுவோம் எத்தனை நாள் ஆனாலும் விளையாட்டு முடித்துவிட்டு வெற்றிக் கிண்ணத்தோடு ஓடி வந்து சேர்ந்திடுவோம் அத்தனை செலவுகளையும் அன்று எம் சம்மட்டிமார் பார்த்திடுவார்.
அறுவடைக்கு சென்று விட்டால் அக்கம் பக்கம் வீட்டார் என்று திருவிழாவே நடந்து விடும் வந்தவர் பசியாற உண்டு விட்டு செல்லும் போது நெல்லு மூட்டை கொடுத்து விடுவோம்.
கல்வி என்றால் தனித்திறமை விடத்தல் தீவான் எங்கு சென்றாலும் படிப்பை என்றும் விட்டதில்லை என மற்றவர்கள் சொல்லி எம் காது பட கேட்டிருக்கிறோம் ஆடல் பாடல் நாடகம் ஒப்பாரி அனைத்தும் ஓர் தனி ரகம் அவை அனைத்தும் இப்போது இந்த எழுத்துக்களில் மட்டும்தானே உள்ளது அத்தனையும் தொலைந்துகொண்டு போகுறதே எம் கண்முன்னே அடுத்து வரும் தலைமுறைக்கு எதை நாம் தருவோம்? பஞ்சம், பசி, பகை இவைகள் மட்டுமா கொஞ்சம் சிந்திப்போம் ஒற்றுமையை விதைப்போம் ஊரை ஒன்றிணைப்போம் இழந்தவற்றை மீட்டெடுப்போம் ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவோம் மீண்டும் எமது கொடி பறக்க ஒன்று சேருவோம்.
வளத்தை பாத்துக்காத்து கொடுக்கா விட்டால் நாமும் நமக்கு பின்னால் உள்ள சந்ததி வாழ வழி ஏது........
1926 அன்று செபஸ்தி விசிறித்தம்மா ஆகியோருக்கு மகளாக பிறந்த சவிரியம்மா(புஸ்பம்) மிகுந்த அமைதியும் கடவுள் பக்கித்தியும் கொண்டு பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார.; இளமை காலத்திலே எல்லோரோடும் நன்று பழகி பாசம் காட்டி வந்தார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் உள்ளபடியினால் தன் தாய் விசிறித்தம்மா செய்துவந்த பிள்ளை பெறுப்பேற்று சேவையை தானும் செய்ய ஆசைப்பட்டு எங்கு பிரசவம் பார்க்க அவர் அம்மா செல்வாரோ அங்கெல்லாம் அவரும் கூடவே செல்வார; அப்படி சென்று பிள்ளை பேறுவிக்கும் முறைகள் அனைத்தையும் கற்று படிக்காமலே வைத்தியர் ஆனார.; பின்பு மனுவேல் பிள்ளை என்பவரை திருமணம் செய்தும் அவர் பிள்ளை பெறுவிக்கும் பணியை தொடர்ந்து செய்து வந்தார் அவர் கணவரும் அதற்கு முழு ஆதரவு வழங்கினார் எந்த நேரம் ஆனாலும் எந்த இருட்டு ஆனாலும் யார் வந்து கூப்பிட்டாலும் உடனே சென்றிடுவார் அந்த பிள்ளை நல்லபடியாக பிறகும்மட்டும் இருந்து பிள்ளையை பெறுவித்துவிட்டுத்தான் வீடு வருவார். விடத்தல் தீவு, கள்ளியடி பெரியமடு என்று எல்லா இடங்களிலும் அவர் சேவை செய்திருக்கிறார். பல நூற்றுகணக்கான பிள்ளைகளை பெறுவித்து இருக்கிறார் பெறுவிக்கும்போது எந்த இழப்பும் நடந்ததில்லை. கடவுளுக்கு நன்றி அவர் தன்னால் முடியும் வரைக்கும் அந்த பணியை செய்தார் அவர் பேரன் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் இப்போது இத்தனை நவீனத்துவம் வந்தும் சுகமாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகின்றது அன்று எந்த வசதியும் இல்லாமல் எல்லாம் சுகமாக பெறுவிக்கபபட்டது என்பது குறிப்பிடதக்கது.
இயற்கை சொத்தின் அபிவிருத்தியே.... விடத்தல்தீவு கடல்சார் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு அதன் நீண்டகால பொருத்தம்.
கரையோர மீன்பிடி சமூகம் இன்றைய வாழ்வாதார சாவால்களை எதிர் கொல்லவதற்கு நிறைய பிரச்சனைகளை முகாம்கொடுக்க நேரிடுகின்றது
1. இயற்கை அனர்த்தம்
2. நவீன தொழில் முறை
3.வளங்களை கொள்ளையிடுதல்
4. பெறுகிவரும் சனத்தொகை
1. இயற்கை அனர்த்தம்
அனர்த்தத்தினால் பலத்த காற்று அதிக வெள்ளபெருக்கு அதி கூடிய மழை கடல் கொந்தளிப்பு போன்றவற்றினால் கடல் வளங்கள் அழிகின்றன பவள பாறைகள் உடைகின்றன கடல் தாவரம் அழிகின்றன இதனால் கடல் தொழில் செய்வோர் பெரிதும் சவால் களை எதிர் கொள்கின்றனர் இயற்கையை நாம் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அவை வராமல் இருக்க நாம் சில இயற்கைக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும் உதாரணம் சொல்வதானால் கடல் காடுகளை அழித்தல் பவள பாறைகளை அழகுக்காக உடைத்து கொண்டுவறுதல் நவீன ஆயுதங்களை கடலில் பரிசோதித்தல் தொழில்சலை கழிவுகள் கடலுடன் கலக்கவிடுதல் இப்படியான செயல் முறைகளை நாம் கைவிடுவோம் ஆனால் இயற்கை அனத்ததித்தில் இருந்து கடல் வளங்களை பாது காத்து கொள்ளமுடியும் அதிக சுற்றுலா படகுகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீசுவதால் அதை உண்ணும் கடல் உயிரினம் கடல் பறவைகள் இறக்கின்றன ஆகவே இயற்கை அனத்தத்தை நாம் தடுப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை கையாளுவோம் கடல் வளம் பெருக வழி செய்வோம்
2. நவீன தொழில் முறையால் கடல் வளம் பாதிக்கப்படும்
ஆரம்ப கால தொழில் முறைகளில் இயற்கைக்கும் கடல் நீருக்கும் எந்தபாதிப்பும் இல்லை இப்போது வரும் தொழில் முறைகள் பல தொழில்நுட்ப்ப வளர்ச்சி காரணமாக இயற்கைக்கும் கடலுக்கும் நம்மை அறியாமலேயே பல பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றது கடலில் பயணிக்கும் கடல் இயந்திரத்தினால் வெளியிடப்படும் எண்ணை கசிவுகளும் அதன் புகைகளும் இயந்திரத்தின் இரைச்சல்களும் கடலையும் இயற்கையையும் பெரிதும் பாதிக்கின்றன கடலில் உள்ள தாவரங்களை இயந்திரத்தின் வேகத்தை கூட்டுவதற்காக பின்னால் பொருத்தப்பட்டிருக்கும் விசிறியினால் வெட்டி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது இதனால் கடல் தாவரங்கள் அழிவடைந்து செல்கின்றன மற்றும் இலுவைப் படகின் வரவினால் கடலின் அடிமட்டத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மண்ணோடு அள்ளப்பட்டு அழிவடையச் செய்கின்றன ஒருமுறை ஓரிடத்தில் இலுவை படகு அதன் தொழில் நுட்பத்தைக் கொண்டு அதன் வலையை போட்டு இழுத்து செல்லும்போது அதில் உள்ள அனைத்து தாவர செடிகளும் கடலூரில் உள்ள சிப்பி சங்கு சிறிய சிறிய உயிரினங்கள் அனைத்தும் அழிகின்றன மற்றும் தங்கூசி வலையின் வருகையினால் கடலில் உள்ள மீன் இனத்தின் வாழ்விடங்கள் இடமாற்றப்படுகின்றன ஏனெனில் தங்குசி வலையில் இருந்து வரும் ஒலியானது மீனுக்கு ஒருவகை பயத்தை உண்டாக்குகின்றது என பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்கள் இதனால் மீன்கள் அவைகளின் வாழ்விடங்களை மாற்றுகின்றன மேலும் பெரும் ஒளியை உண்டாக்கக்கூடிய வெடி மருந்துகளை கடலினுள் போட்டு அவ் சத்தத்தினால் மீன்களைக் கொண்று மீன்பிடிக்கும் முறையும் உருவாகியுள்ளது.
இம்முறையானது கூடுதலாக பவளப்பாறையை அண்டிய பகுதிகளிலே பெரிதும் பாவிக்கப்படுகின்றது இதனால் பவளப்பாறை பெரிதும் பாதிக்கப்படுகின்றது அவ் பவளப்பாறையில் இனப்பெருக்கத்திற்காகவருகின்ற மீன்களும் அல்லது புதிதாக உருவாகிய சிறிய வகை மீன்களும் இறக்க நேரிடுகின்றது அதுமட்டுமல்லாமல் வெடிமருந்தின் துர்நாற்றத்தினால் அவ்விடத்திற்கு மீன்கள் வருவதை தவிர்த்து விடுகின்றது.இவ்வாறாக நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் அனைத்து விதமான மீன்பிடி முறைகளும் பெரிதும் மீன் வளங்களை அழிய செய்வதாகவே இருக்கின்றது எனவே இவ் வழிமுறைகளை நாம் முடிந்தவரை தவிர்த்துகொள்வது எமக்கும் எம் சந்ததியினருக்கும் சிறந்ததாக இருக்கும்.
3.வளங்களை கொள்ளையிடுதல்
அரசு அதிகாரங்கள் இருப்பவர்கள் குறுகிய இலாபத்திற்காக கடலும் கடல் சார்ந்த நிலங்களிலும் ரசாயனம் கலந்த கடல் உணவுப் பொருட்களை வளர்ப்பதற்கு அனுமதி அளித்தல் அதற்கான நிலங்களை வழங்குதல் பவளப்பாறையில் உள்ள விலை உயர்ந்த மீன் வகைகளை நண்டு மற்றும் சிங்கி இறால் வகைகளை பிடிப்பதற்காக பவளப்பாறைகளை உடைத்தல் கூடிய லாபம் பெறுவதற்காக இரவினில் மின் விளக்குகள் பயன்படுத்தி சிறிய வகை அட்டைகளை எடுத்தல் அளவுக்கு அதிகமான தொழில் முறைகளை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக கடல் உணவுப் பொருட்களை பிடித்தல் சிறிய படகுகள் தொழில் முயற்சியில் ஈடுபடும் ஆழம் குறைந்த பகுதிகளில் பெரிய படகினை பயன்படுத்தி தொழில் செய்தால் கண்டல் மற்றும் கண்ணா தாவரங்களை வெட்டிச் செல்லுதல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் வெடி மருந்து வைத்து மீன் பிடித்தல் இது போன்ற அரச சட்டங்களுக்கு எதிரான வேலைகளை செய்வதனால் கடல் சொத்துக்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வளங்களும் அழிக்கப்படுகின்றன இவைகள் மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும் இவைகள் மீன்பிடித் துறையின் எதிர்காலத்தையே பாதித்துவிடும் என்பதனை நாம் மனதில் கொள்ள வேண்டும்
4. பெருகி வரும் சனத்தொகை
ஆரம்ப காலங்களில் குறைந்த மக்களினால் குறைந்த அளவான கடல் உணவு பொருட்களே பிடிக்கப்பட்டன கடல் உணவு பொருட்களுக்கான கேள்விகளும் குறைந்ததாகவே இருந்தன காலம் செல்லச் செல்ல சனத்தொகை பெருகியதால் கடல் உணவுப் பொருட்களின் கேள்விகள் அதிகரித்தன கடலினில் தொழில் செய்யும் மக்களின் தொகையும் விரைவாக அதிகரிக்கிறது இதனால் கடலில் தொழில் செய்யும் எல்லைகள் விரிவாக்கப்பட்டது கரை தொடங்கி ஆழக்கடல் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் மீன்பிடிக்கத் தொடங்கின இதனால் அதிகளவான கடல் உணவுப் பொருட்கள் பிடிக்கப்படுகிறது கடல் உணவுப் பொருட்களின் இனப்பெருக்கங்கள் குறைவடைந்து போகின்றன இனப்பெருக்கத்துக்கான வாழ்விடங்களும் அளிக்கப்படுகின்றன அளவுக்கு அதிகமான தொழில் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன இவ்வாறு இருப்பினும் கடல் சார்ந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான வருமானங்கள் மிகக் குறைந்து கொண்டே போகின்றது இது சனத்தொகையின் அதிகரிப்பு கூடியதும் ஒரு காரணம் எனலாம் மேற்கூறிய அனைத்தையும் அரசாங்கமானது கருத்தில் கொள்ள வேண்டும் கடல் வளத்தை பெருக்குவதற்கு அதன் இனப்பெருக்கத்துக்குரிய வதிவிடங்களை பாதுகாக்க வேண்டும் கடல் உணவுப் பொருட்களை பாதுகாப்பான இனப்பெருக்கம் செய்ய வைத்து அதன் குஞ்சுகளை கடலில் விட வேண்டும் அனைத்து மீனவர்களுக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் தொழில் முறைகளில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் சட்டத்தை மீறுவர் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் கண்டல் காடு மற்றும் கண்ணா காடுகளையும் மற்றும் கடல் தாவரங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் இவை அனைத்தும் அரசு மட்டும் நடைமுறைப்படுத்தினால் போதாது மீன்பிடியில் ஈடுபடும் அனைத்து மக்களும் இதற்கான ஒத்துழைப்புகளை அரசுக்கு வழங்க வேண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீசுவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் இவ்வாறு நமக்கு இயற்கையாகவோ அருளப்பட்டுள்ள மிகப்பெரும் சொத்தான கடல் வளத்தை பாதுகாப்பது மூலம் கரையோர மீன் புடி சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் இயற்கையின் சொத்தை அபிவிருத்தி செய்தால் என்றும் நமது வாழ்வாக முன்னோக்கிய செல்லும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை இயற்கையை பாதுகாப்போம் இயற்கையோடு ஒன்றித்திருப்போம் இயற்கை எம்மை மேன்மைப்படுத்தும்.