விடத்தல்தீவில் சூழல் சுற்றுலாவை ஊக்குவித்தல்: நிலையான வளர்ச்சிக்கான ஒரு உத்தி.

சண்முகசுந்தரம் விஜயமோகன்

அறிமுகம்.

உலகளாவிய சுற்றுலாதற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இது சுற்றுச்சூழல் பொறுப்பையும், உள்ளூர் மக்களின் நலனையும் முன்னிலைப்படுத்தும் சூழல் சுற்றுலாவாகும். பாரம்பரிய வெகுஜன சுற்றுவா, சூழல் மாசடைதல் மற்றும் சமூகச் சீரழிவுகளுக்கு இட்டுச் செல்வதால், அதனைவிட அர்த்தமிக்க ஒரு நிலையான பயண அனுபவத்தை மக்கள் நாடுகின்றார்கள். இதற்கான விடை சூழலையும் மக்களின் கலாச்சாரத்தையும் மதித்துப் பாதுகாக்கும். சூழல்சுற்றுலாவாகும். இலங்கையின் வடக்கு கடற்கரையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள விடத்தல்தீவு, அதன் இயற்கை வனங்களும் வரலாற்றுப் பின்னணியும் காரணமாக, சூழல் சுற்றுலாவை வளர்த்தெழுப்புவதற்கான வலுவான வாதத்தை முன்வைக்கிறது. உலகெங்கிலும் உள்ள சுற்றுலா மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம், விடத்தல்தீவில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு ஆராய்கிறது.

இந்த ஆய்வின் மையக் கொள்கை நிலையானதும், சமூகத்தை மையமாகக் கொண்டதுமான சூழல் சுற்றுலா அணுகுமுறையின் அவசியம்.

விடத்தல்தீவில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அங்குள்ள தனித்துவமான சூழலியல் அமைப்புகளுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் நேரடியாக நன்மை தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதேயாகும். போர் எதிரொலிகளால் சித்தரிக்கப்பட்ட வரலாற்றைப் பெற்ற விடத்தல்தீவு, தற்போது போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வரலாற்றுப் பின்னணி ஒரு முக்கியமான விடயமாகும். எனவே, சூழல் சுற்றுலா முயற்சிகள், உள்ளூர் சூழலைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடனும், உள்ளூர் மக்கள் நன்மையடைய வேண்டும். என்பதற்கான உறுதியுடனும் வடிவமைக்கப்பட வேண்டும்.

தனித்துவமான கடற்கரை சூழலியல் அமைப்பு

விடத்தல்தீவு புவியியல் ரீதியாக பாக்கு நீரிணையின் நீர்வட்டங்களை ஒட்டியவாறு அமைந்துள்ளது. குறிப்பாக, விடத்தல்தீவை அண்டிய பவளப்பாறை விடத்தல்தீவு இயற்கை காப்பகத்தின் (VNR) எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. 2016 மார்ச்சில் நிறுவப்பட்ட இந்த இயற்கைக் காப்பகம், 29,180 ஹெக்டேர்களைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் கடல்சார் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

இதில் VNR இன் ஒரு பெரிய பகுதி பாக்கு நீரிணையின் பகுதிகளுடன் ஒட்டியிருக்கிறது. இப்பகுதி கடல் பாசி வெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற பன்முகத்தன்மை கொண்ட கடல்சார் வாழ்விடங்களைக் கொண்டது (படம் 1).

இக்காப்பகம் உள்ளூர்வாசிகளின் நலன்கள் கருதப்படாமல் அறிவிக்கப்பட்டாலும், இப்பகுதி ஒரு முக்கிய பல்லுயிர் பன்மை மண்டலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடல் பாசி வெளிகள், பல்வேறு பறவைகள் மற்றும் மிக அபாய நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவைப்படும் வாழ்விடங்களை வழங்குகின்றன. இலங்கையில் அனைத்து முக்கியமான கடல்சார் சூழல் அமைப்புகளும் ஒன்றிணையும் மிகச் சில இடங்களில் விடத்தல்தீவும் ஒன்றாகும்.

இவ்வளவு சுற்றுச்சூழல் அருமை இருந்தாலும், இப்பகுதி பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது. இதில், தொழில்துறை அடிப்படையிலான கடல் உயிரி வளர்ப்பு பூங்கா ஒன்றை உருவாக்கும் சாத்தியமுள்ள திட்டங்கள் மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு, மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியன அடங்கும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பவளப் பாறை ஆய்வில், உயிருள்ள பவளப்பாறைகளின் பரப்பளவு ஊக்கமளிக்கும் விதமாக அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக உள்ளது. அதே நேரத்தில், பாசிகளால் மூடப்பட்ட இறந்த பவளப்பாறைகளும் காணப்படுகின்றன. விடத்தல்தீவை இயற்கைக் காப்பகமாக அறிவித்ததாலும், அதன் கடல்சார் சூழலியல் அமைப்புகளின் பன்முகத்தன்மையும், சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளமாக அமைகின்றன. பவளப்பாறைகள் போன்ற தனித்துவ அம்சங்கள், கடல்வாழ் உயிரினங்களில் ஆர்வம் கொண்ட சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட ஈர்ப்பாக அமைகின்றன.

இருப்பினும், தொழில்துறை மீன்வளர்ப்புத் திட்டங்களுடன் ஏற்பட்டுவரும் மோதல்கள். சூழல் சுற்றுலா போன்ற நிலையான மாற்றுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. தற்போது காணப்படும் பவளப்பாறைகளின் மீட்பு வளர்ச்சி, இயற்கையை நேசிக்கும் பயணிகளின் பார்வையில் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை. மேலும் வலுப்படுத்தக்கூடியதாக அமையும்.

வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட பிராந்தியம்,

விடத்தல்தீவு அமைந்துள்ள மன்னார் பிராந்தியம் பல நூற்றாண்டுகளாக இலங்கையையும் உலகின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது. இந்தப் பகுதி போர்த்துகீசியர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் போன்ற பல அரசாட்சிகள் மற்றும் காலனித்துவ ஆட்சிகளின் தாக்கத்திற்குள்ளானது. சமீபத்திய காலத்தில் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. விடத்தல்தீவு, அதன் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக இருந்தது. 2008 ஜூலை மாதம், இலங்கை இராணுவம் விடத்தல்தீவைக் கைப்பற்றியது. இது உள்நாட்டு மோதலின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாகும். இந்த மோதலால், விடத்தல்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம்பெயர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவ்வாறான குழப்பங்களுக்கிடையிலும், இந்த பிராந்தியம் பல்வேறு மத வழிபாட்டு தலங்களை கொண்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்கள், ஒரு இந்துக் கோவில் மற்றும் மசூதிகள் ஆகியவை சமூகத்தின் கலாச்சார பன்மை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. தற்போது, இப்பகுதி போருக்குப் பிந்தைய மீள்குடியேற்றச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் பரம்பரை நிலங்களை மீட்டெடுத்து வீடுகளை மீண்டும் கட்டி வாழ்வை புதிதாக தொடங்குகின்றன. இந்த மீன்குடியேற்றம் உட்கட்டமைப்பை மீள்நிர்மாணிப்பதை மட்டும் குறிப்பதல்ல. சமூக மற்றும் ஆன்மீக வாழ்க்கையை உயிர்ப்பிப்பதையும் குறிக்கிறது. இந்த மறுசுழற்சியில், மத நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை சமூக ஒற்றுமை, பிரதிபலிப்பு, மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சிக்கான மையங்களாக செயல்படுகின்றன. அமைதி நிலைக்க ஆரம்பிக்கையில், இவை மக்கள் நம்பிக்கையும் மீள்தன்மையும் கொண்ட எதிர்காலத்திற்குத் வழிசமைக்கும் அடையாளங்களாக அமைகின்றன. மன்னார் மாவட்டத்திலும், விடத்தல்தீவிலும் பெரும்பான்மையான மக்கள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பாரம்பரிய கலாச்சாரம் இந்தப் பகுதிக்கு தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இயற்கை அழகாலும் வர்த்தகச் செயல்பாடுகளினாலும், மோதல்களாலும் குறிக்கப்பட்டுள்ள இப்பகுதி சூழல் சுற்றுலாவிற்கு ஒரு தனிப்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதையை வழங்குகிறது.

பல்வேறு மத தளங்களின் இருப்பும். தமிழ் சமூகத்தின் தனித்துவமான பண்பாடும் சூழல் சுற்றுலா அனுபவங்களை வளப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தப் பகுதிக்கு உரித்தான சமீபத்திய மோதல் வரலாறும், அதனைக் கடந்துபோன உள்ளூர் சமூகங்களின் அனுபவங்களும், சுற்றுலா வளர்ச்சிக்கு உணர்திறனும், உள்ளடக்கமும் கொண்ட அணுகுமுறையைக் கோருகின்றன. இதன் மூலம், சுமூகமாவே வழிநடத்தும் முயற்சிகள் அமையவும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நன்மை அளிக்கும் வழிகளும் உறுதியாக நிலைபெறலாம்.

சூழல் சுற்றுலா வரையறையும் முக்கியக் கொள்கைகளும்.

சுற்றுச்சூழல் சுற்றுலா என்பது அடிப்படையில் இயற்கை வளமிக்க பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும் பொறுப்பான பயணமாகவே வரையறுக்கப்படுகிறது. இது சூழல் பாதுகாப்பில் நேரடி பங்களிப்பு அனிப்பதோடு, உள்ளூர் மக்களின் நல்வாழ்வை நிலைப்படுத்துவதையும், சுற்றுலா பயணிகளுக்கும் அவர்களை விருந்தோம்பும் சமூகத்தினருக்கும் விளக்கங்களுடனும் கல்வியுடனும் கூடிய அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரையறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன்கள் மற்றும் கல்விசார் பயண அனுபவங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான அணுகுமுறையைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார விழிப்புணர்வை ஊக்குவிப்பதோடு, சுற்றுலா காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வழிகாட்டியுமாகும். சுற்றுலாபயணிகள்மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு நேரடி, பயனுள்ள அனுபவங்களை வழங்குவது, பாதுகாப்பிற்கான நேரடி நிதிச் சிறப்பூதியங்களை உருவாக்குவது மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பங்கேற்பு வாய்ப்புகள் மற்றும் வருமான வாய்ப்புகள் கிடைக்கச் செய்வது ஆகியவை முக்கியக் கோட்பாடுகளாகும்.

இவற்றுடன் குறைந்த தாக்கம் கொண்ட கட்டமைப்புகள், பூர்வீக உரிமைகளுக்கு மரியாதை அளித்தல், மற்றும் சமூக-அரசியல் மற்றும் சூழலியல் கட்டமைப்புகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்விசார் செயற்பாடுகள் என்பன அடங்கும். விடத்தல்தீவு போன்ற மோதலுக்கு பிந்தைய பகுதிகளில், இந்த கொள்கைகள் மீட்பும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றிணைந்த முறையில் முன்னேற்றப்படுகின்றன. நிலையான சுற்றுலாவின் ஒரு பகுதியாக, சூழல் சுற்றுலா இயற்கை மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மையமாகக் கொண்டிருக்கின்றது. நிலையான சுற்றுலா நடைமுறைகள் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார ரீதியில் நிலைத்தன்மையை உறுதி செய்யும். இந்த அணுகுமுறை பொறுப்பான வளவிநியோகம், நம்பகமான பொருளாதாரத் தளங்கள் மற்றும் கலாச்சார மரியாதை ஆகியவற்றில் தங்கியுள்ளது. இது சுற்றுலாவின் நீண்டகால நன்மைகளை உறுதிப்படுத்துகின்றது. விடத்தல்தீவின்சூழலியல் தொடர்புடைய நிலையில், சூழல் சுற்றுலாவை தனிப்பட்ட நடவடிக்கையாகக் காணாமல், பரந்த நிலையான சுற்றுலா உத்தியின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருத வேண்டும். இது சுற்றுச்சூழலிய உணர்திறனையும், உள்ளூர் சமூகங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளையும், அவர்களின் தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான சமச்சீர் அணுகுமுறையையும் கோருகின்றது.

சமூக பங்கேற்பும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்.

ஒரு வெற்றிகரமான மற்றும் நிலையான சூழல்சுற்றுலாமுயற்சியின் அடித்தளமாக சமூக பங்கேற்பு என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒன்று. உள்ளூர் சமூகங்கள் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் மேலாண்மை செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும்போது, அவர்கள் தங்கள் இயற்கை மற்றும் கலாச்சார வளங்களின்மீது உரிமையுணர்வும் பொறுப்புணர்வும் கொண்டதாக மாறுகின்றனர். இந்த பங்கேற்பு, சூழல் சுற்றுலா உள்ளூர் மக்கள் தேவைகள், மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகும்படி வடிவமைக்கப்படுவதை உறுதிசெய்கிறது. இது சமநிலையான மற்றும் நீடித்த பயன்கள் கொண்ட முடிவுகளை ஏற்படுத்த உதவுகிறது.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உள்ளூர் சமூக நலன்களும் ஒன்றாக மேம்பட, சுற்றுலா செயற்பாடுகள் அவ்வகையில் திட்டமிடப்பட வேண்டும். கட்டணம், வழிகாட்டியுடன் நடைபெறும் பயணங்கள், தங்குமிட வசதிகள் போன்றவையிலிருந்து பெறப்படும் வருவாயைக் கொண்டு பசுமை நிலங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் மீளமுதலீடு செய்யலாம்.

இதேபோல் சுற்றுலா சார்ந்த வேலை வாய்ப்புகள், உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் வீட்டில் தங்குமிட வசதிகள் போன்ற சேவைகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு நேரடி வருமானம் கிடைக்கின்றது. இது அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நேரடியாக இணைந்திருக்கத் தூண்டுகிறது. அவர்கள் வாழ்வாதார வளர்ச்சி சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மீது தழுவியிருப்பதால், அதன் பாதுகாப்பில் தாங்களே பங்கெடுக்க அதிக உந்துதலை பெறுகின்றனர். உண்மையாகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சூழல் சுற்றுலாவின் முதன்மையான மற்றும் முக்கிய இலக்காகும். பொறுப்புடன் பயணிக்கும் நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமாகவும்,

இயற்கை வளமிக்க பகுதிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதன் மூலமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் கல்விச் செயல்பாடுகளின் மூலமாகவும், பல்லுயிர் பரிமாணங்களைப் பாதுகாப்பதிலும், மனிதச் செயல்கள் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை குறைப்பதிலும், சூழல் சுற்றுவாமுக்கிய பங்காற்றுகிறது. விடத்தல்தீவு போன்ற இடங்களின் சூழ்நிலையில், அதன் கடலோர சூழலியல் அமைப்புகளின் பராமரிப்புத் தேவையும், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் குறிப்பிடத்தக்கவை. எனவே, சூழல் சுற்றுலா வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் உள்ளூர் சமூகத்தின் செயல்பாட்டை உறுதி செய்வதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதும், எந்தவொரு சுற்றுவா முயற்சிக்கும் நீடித்த வெற்றிக்கான அடிப்படை நிபந்தனைகளாகும்.

விடத்தல்தீவில் சூழல் சுற்றுலா: இயற்கையும் வரலாறும் சந்திக்கும் இடம்.

பூநகரி வீதியில் இருந்து விடத்தல்தீவுக்குள் நீங்கள் நுழையும் போது கண்கள் கவரும் ஒரு இயற்கைப் பொலிவான காட்சி விரிகிறது. பள்ளமடு எனப்படும் நன்னீர் குளம் அமைதியான நீருடன் உங்களை வரவேற்கிறது. இது வானத்தை அழகாக பிரதிபலிக்கிறது.

அந்தக் குளத்தின் கரையில் மருதமரங்கள் வரிசையாக நிமிர்ந்து நிற்கின்றன. அவை நிழலையும் அமைதியையும் வழங்கும் பழங்காலக் காவலர்கள் போல் இருக்கின்றன. நீரின் மேற்பரப்பில், நிறைய தாமரை மலர்கள் மலர்ந்திருப்பதைக் காணலாம். இவை இந்த இடத்தைப் பரந்த இயற்கை எழில் கொண்ட ஒரு புளிதத் தளமாக மாற்றுகின்றது.

இவ்வாறு இயற்கை அழகுடன் ஆரம்பிக்கின்ற இந்த அனுபவம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நிலையான சூழல் சுற்றுலாவுக்கான ஒரு வழிகாட்டும் ஒளியாக விடத்தல்தீவைக் காட்சிப்படுத்துகிறது (படம் 2).

பாலமடு குளம் வெறும் காட்சிக் குளமல்ல. அது இந்தக் கிராம சமூகத்தின் உயிர் நதி போன்றது. குளத்தின் மேல் மோட்டார் இல்லாத படகில் மெதுவாக நகரும் போது பயிற்சி பெற்ற உள்ளூர் படகு ஓட்டுநர் ஒரே நேரத்தில் உங்களுக்கு வழிகாட்டியாகவும் வரலாற்றாசிரியருமாகவும் இருப்பார். அவர் இந்தக் குளத்தின் வரலாற்றையும், விடத்தல்தீவின் மக்களின் அன்றாட வாழ்வில் இதன் மாபெரும் பங்களிப்பையும், மேலும் இதன் பரந்த சுற்றுச்சூழல் முக்கியத் துவத்தையும் விவரிப்பார். இந்த ஆழமான அனுபவம் அமைதியான பயணத்தையும், உள்ளூர் அறிவைப் பாராட்டவைக்கும் கதை சொல்லலையும் இணைக்கும் உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் சமூக மையமுள்ள ஈரநில சுற்றுலா திட்டங்களை நினைவூட்டுகிறது. இதில் உள்ளூர் அறிவும் பார்வையாளர்களின் புரிதலும் ஒன்றிணைந்து பயனளிக்கின்றன.

இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த அமைதியான கடலோரக் கிராமம் இப்போது ஒரு எதிர்பார்க்கத்தக்க சுற்றுச்சூழல் சுற்றுலா தளமாக மாற்றப்படக் கூடியதொரு வாய்ப்பைக் கொண்டுள்ளது. இது இயற்கையின் அழகு, கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் சமூகப் பங்குபற்றலால் நிரம்பிய அனுபவங்களின் அரிய சங்கமத்தை வழங்கக்கூடிய இடமாக திகழ்கிறது.

காலப்பயணத்தின் தடங்கள்

விடத்தல்தீவின் மயக்கும் அழகு அதன் வரலாற்றுப் புகழில் ஆரம்பமாகிறது. கடந்த காலங்களில், இந்தக் கிராமம் டச்சுக்காலனித்துவத்தின்சுவடுகளைசுமக்கும் பண்டைய பவளக்கல் கட்டிடங்களும், சுவர்களும் கொண்ட இடமாக இருந்தது. அவற்றில் ஒன்றை இன்றும் இலங்கை தொல்பொருள் திணைக்களம் பாதுகாப்பதோடு (படம் 3), இது அந்தக் காலகட்டத்தின் கட்டிடக்கலைக் காட்சிப்படுத்தும் சான்றாகத் திகழ்கிறது. கவனமாக செதுக்கப்பட்ட பவளப்பாறைகளாலான தடிமனான கற்கள் கொண்டு கட்டப்பட்ட இக்கட்டடங்கள் இலங்கையின் பல கோட்டைகளில் காணப்படும் பாரம்பரியக் கட்டிடக் கலைமுறைகளைத் தோற்றுவிக்கின்றன. மேலும், திருக்கேதீஸ்வரம் கோயிலிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கற்கள் மன்னார் கோட்டையை கட்டப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளூர்ப் புராணக் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது அந்த இடத்தின் வரலாற்றை மேலும் ஆழமான மற்றும் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது.

இந்த வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு மேலும் உயிரோட்டம் தருவது யாழ்ப்பாணத்தையும் திருக்கேதீஸ்வரம் கோவிலையும் இணைத்த பழமையான பாதை ஆகும், இது விடத்தல்தீவை நடுக்கழித்து சென்றதாக கூறப்படுகிறது. முழுப் பாதை இப்போது காணப்படாமல் போயிருந்தாலும், அதன் சில பகுதிகளை இன்று கூட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாதை, நூற்றாண்டுகளாக முன் நடந்த பயணிகள் மற்றும் வணிகர்களின் அடிச்சுவடுகளில் நடக்க அழைப்பது போல், பாரம்பரிய நடைபயணங்களுக்கு ஒரு தனித்துவ வாய்ப்பை வழங்குகிறது. இது நூற்றாண்டுகளைக் கடந்து யாத்ரீகர்களும் வர்த்தகர்களும் நடந்து சென்ற பாதையைப் பின்தொடரும் ஒரு அனுபவமாக அமைகிறது. இதைவிடவிடத்தல்தீவின்பரந்த சதுப்புநிலக்கண்டல்காடுகள் ஒருமுக்கியமானகடலோரவாழ்விடமாக உள்ளன (படம் 4). பசுமை நிறைந்த இவைகள், அமைதியாகச் சலசலக்கும் சதுப்புநிலங்களினால் சூழப்பட்டுள்ளன. அந்த நுண்ணிய நீர்வழிகளில் மோட்டார் இல்லாத படகில் மெதுவாகச் செல்லும் பயணத்தை கற்பனை செய்து பாருங்கள் இது வெறும் பயணம் அல்ல, இயற்கையை உரிய மரியாதையுடன் நோக்கும் ஒரு பார்வையும் ஆகும். இந்த அனுபவத்தை மேலும் வளப்படுத்த, தாய்லாந்தின் கிராபி பகுதியில் உள்ள ஆவோ லுயெக் சதுப்புநில பூங்கா அல்லது இந்தியாவின் சுந்தர்பன்கள் போன்ற இடங்களில் காணப்படும் மரத்தாலான நடைபாதைகளை உருவாக்கலாம். இத்தகைய நடைபாதைகள், மனிதர்கள் இவ்வாழ்விடத்தை குறைந்த பாதிப்புடன் அனுபவிக்க அனுமதிக்கின்றன. இவை வேர்களுக்கு இடையில் அலையும் நண்டுகள் முதல், இவற்றைத் தாயகமாகக் கொண்டிருக்கும் பறவைகள் வரையில் பலதரப்பட்ட உயிரினங்களை நேரில் காணும் அனுபவத்தை அளிக்கின்றன.

பறவைகளை நேசிப்பவர்களுக்கு விடத்தல்தீவு ஒரு சொர்க்கம் போலவே திகழ்கிறது. இந்தப் பகுதி. உள்ளூர் மற்றும் வலசை பறவைகள் வெகுவாகக் கூடும் ஒரு முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவின் Keoladeo National Park அல்லது கோஸ்டாரிக்காவின் Monteverde Cloud Forest போன்ற உலகப் புகழ்பெற்ற பறவை சரணாலயங்களில் காணப்படுவது போல், முறையாக அமைக்கப்பட்ட பறவை கண்காணிப்பு மறைவிடங்கள், தொந்தரவு இல்லாத நெருக்கமான பார்வையையும், தனித்துவமான புகைப்பட வாய்ப்புகளையும் வழங்குகின்றன.

இவை கல்வி மையமான சுற்றுலாவிற்கு ஒரு அருமையான வாய்ப்பை உருவாக்குகின்றன இதில் பயணிகள் பறவைகள் சார்ந்த பல்லுயிர் பரிமாணங்களைப் பற்றி நுணுக்கமானமுறையில் கற்றுக்கொள்ள முடிகின்றது. முக்கியமாக, உள்ளூர் சமூக உறுப்பினர்களுக்கு பறவைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அடையாளம் காணும் வகையில் பயிற்சி அளிக்கப்படுமானால், விடத்தல்தீவுக்கு திறமையான உள்ளூர் வழிகாட்டிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கலாம்.

இந்த மாதிரி, பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் வாழ்வாதாரத்தைக் நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களின் நேரடி பங்களிப்பையும் ஊக்குவிக்கின்றது. அவர்களின் வருமானம், சூழலிய அமைப்பின் ஆரோக்கியத்துடன் நேரடியாகப் பிணைந்திருப்பதனால் அடுத்த தலைமுறைக்கும் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

கடலின் அழைப்பு விடத்தல்தீவின் ஈர்ப்பில் இன்னொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மீனவர்களுடன் சேர்ந்து அவர்களின் படகுகளில் உண்மையான மீன்பிடி அனுபவங்களில் ஈடுபடலாம். இந்த பங்கேற்பு, கடலோர சமூகத்தின் பாரம்பரிய வாழ்வாதாரங்களை நேரடியாகப் பார்வையிட அனுமதிக்கின்றது. தென்கிழக்கு ஆசியாவின் கடலோர கிராமங்களில் நடைமுறையில் உள்ள சமூக அடிப்படையிலான சுற்றுலா முயற்சிகளைப் போலவே, இது கலாச்சாரப் பரிமாற்றத்தையும், பகிர்வையும் ஊக்குவிக்கிறது.

கடற்கரையைத் தாண்டி, கடல் நீரில் பதுங்கியிருக்கும் ஒரு அரியச் செல்வம் - கரையோர பவளப்பாறை. உள்ளூர் மக்கள் இதை "சல்லி" என்று அழைக்கிறார்கள். இது பொறுப்புடன் ஆராயப்பட வேண்டிய இயற்கைப் பொக்கிஷமாக உள்ளது. கண்ணாடி அடிப்பகுதியுடன் கூடிய படகுச்சுற்றுலாக்கள் மூலமும் சுழிஓடுதல் மூலமும் கடல் பல்லுயிர்களை பார்வையிடலாம். இது, அருகிலுள்ள மாலைத்தீவுகள் மற்றும் எகிப்தின் செங்கடல் பகுதிகளில் காணப்படும் வெற்றிகரமான பவளப்பாறை சுற்றுலா மாதிரிகளைப் பிரதிபலிக்கின்றது. எப்போதும், பவளப்பாறைகளின் பாதுகாப்பும், சுற்றுச்சூழல் சேதத்தைத் தவிர்க்கும் கல்விசார் முயற்சிகளும் இத்தகைய சுற்றுலா நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற வேண்டும். உணவின் சுவையுடன் இணைந்தாலன்றி எந்த சுற்றுச்சூழல் சுற்றுலா அனுபவமும் முழுமையடையாது. விடத்தல்தீவு அதன் உணவுச் சுவையில் பயணிகளை ஈர்க்கும் வல்லமை கொண்டது. புதிய கடல் உணவுகள் அதன் பாரம்பரியக் கலையமைந்த உணவுகளின் இதயமாக உள்ளன. உள்ளூர் மீனவர்கள் மற்றும் சமையல் கைவினைஞர்களின் திறமையை நேரடியாக ஆதரிக்கும் வகையில் பாரம்பரிய சமையல் முறைகளைப் பின்பற்றி தயார் செய்யப்பட்ட உணவுகளை சுவைத்துப் பார்ப்பதை கற்பனை செய்து

பாருங்கள். இந்த உண்மையான உணவுப் பகிர்வு சுற்றுலாப் பயணிகளுக்கு இனிமையான அனுபவத்தை அனிப்பதோடு, அதன் பொருளாதார நன்மைகளை நேரடியாக உள்ளூர் சமூகத்திற்குள் கொண்டு செலுத்துகின்றது.

நிலையான சுற்றுலாவின் ஒரு மாதிரி.

இந்தப் பன்முகத்தன்மை கொண்ட ஈர்ப்புடைய இடங்களை சிந்தனையுடனும் பொறுப்புடனும் மேம்படுத்துவதன் மூலம், விடத்தல்தீவு இலங்கையின் முக்கிய சூழல் சுற்றுலா தளமாக தன்னை நிலைநிறுத்த முடியும். சமூக ஈடுபாடு, பாதுகாப்புடன் தொடர்புடைய வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் இயற்கை சார்ந்த ஆழமான அனுபவங்களின்மீது செலுத்தப்படும் கவனம், உலகளாவிய

சுற்றுச்சூழல் சுற்றுலா கொள்கைகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகின்றன. இது நிலையான வளர்ச்சிக்கான பாதையைக் காட்சியளிக்கிறது. அதில், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிக்கொணர்வதோடு, இந்த அழகிய நிலத்தை "வீடு" என அழைக்கும் மக்களால் அவை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. விடத்தல்தீவு பார்வையிட வேண்டிய ஒரு இடம் மட்டுமல்ல இது இயற்கையை மையமாகக் கொண்ட செழிப்பான எதிர்காலத்தை அனுபவிக்கவும், கற்றுக்கொள்ளவும், பங்களிக்கவும் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். விடத்தல்தீவு சூழல் சுற்றுலா சங்கம் போன்ற ஒரு உள்ளூர் அமைப்பை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களை வழிகாட்டிகளாக பயிற்றுவிக்கலாம். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிக்கலாம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்காமல் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சுற்றுலா நடைமுறைகளை நிபுணர்களுடன் இணைந்து திட்டமிடலாம். இயற்கை அழகு, வரலாற்று ஆழம் மற்றும் சமூக பங்கேற்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் விடத்தல்தீவு இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நிலையான சுற்றுலாவின் முன்னோடித் தளமாக உருவாகத் தயாராக உள்ளது.

உலக அனுபவங்களிலிருந்து கற்றல்: ஒத்த சூழல்களில் வெற்றிகரமான சுற்றுச்சூழல் சுற்றுலா மாதிரிகள்.

பல்வேறு கடல்சார் பல்லுயிர் வளங்களை கொண்ட உலகத் தளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொருளாதார நன்மைகளையும் ஒரே நேரத்தில் நிலைநிறுத்தும் விதமாக, சூழல் சுற்றுலாவை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளன.

ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் இந்த துறையில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது. இவை கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதோடு, உள்ளூர் வளங்களை முன்னுரிமை அளித்து, தனித்துவமான வனவிலங்கு அனுபவங்களை வழங்குகின்ற போதிலும் தீவுகளின் சூழலியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சமூக பங்கேற்பை உறுதியாகக் கொண்டுள்ளன.

கோஸ்டாரிகா பசுமையான மழைக்காடுகள், வனவிலங்குகளின் பன்மை, மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழல் சுற்றுலா வளங்கள் காரணமாக சுற்றுலா மற்றும் சூழலியல் பாதுகாப்பை சமநிலைப்படுத்தியதற்காக உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

பூட்டான், “மொத்த தேசிய மகிழ்ச்சி" என்ற கொள்கைக்கு அர்ப்பணிப்பு தெரிவிக்கின்றது. இந்த நாடு, சுற்றுலாவுக்கான "உயர் மதிப்பு - குறைந்த தாக்கம்" மாதிரியை ஏற்றுக்கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல், கலாச்சார பாதுகாப்பில் வலுவான நிலைப்பாட்டுடன் தனது கார்பன் நடுநிலை நிலையைப் பராமரித்துள்ளது.

கரீபியன் பிராந்தியத்தில், சதுப்புநிலங்கள், கடற்புல் படுகைகள் மற்றும் பவளப்பாறைகள் ஒன்றோடொன்று இணைந்து, சூழல் சுற்றுலாவுக்கான அடித்தளமாக இருந்ததோடு, கடலோரப் பாதுகாப்பையும் வழங்குகின்றன.

தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள், பெரும்பாலான இடங்களில் உள்ளூர் சமூகங்களின் தீவிர பங்கேற்புடன் வனவிலங்கு கண்காணிப்பு, படகுச்சுற்றுலா மற்றும் சதுப்புநில நடவு போன்ற பல்வேறு சதுப்புநில சுற்றுலா நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.

VNR போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அறிவிப்பதன் மூலம், பூர்வீக மக்களின் நிலங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, அவ்விடங்களை இயற்கைக்கும் மக்களுக்கும் ஒரு சேவையாக மாற்ற முடியும். மோதல் அனுபவித்த பல பிராந்தியங்களில் சூழல் சுற்றுலா ஒரு வலுவான சமூக பொருளாதார மற்றும் சூழலியல் மீட்பு கருவியாக உருவெடுத்துள்ளது.

ருவாண்டா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மலைக் கொரில்லாக்களை மையமாகக் கொண்ட சூழல் சுற்றுலா முயற்சிகள், அந்த உயிரினங்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வதோடு பரந்தபட்ட பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ஆதாரமாக அமைகின்றன.

மொசாம்பிக்கின் கோரோங்கோசா தேசிய பூங்கா போருக்குப் பிந்தைய சிறப்பான மீட்பை சாதித்துள்ளது. இது மனிதாபிமான முயற்சிகளாலும், ஒரு உற்சாகமான சூழல் சுற்றுலா துறையின் மறுசீரமைப்பினாலும் இயக்கப்பட்டது.

இதேபோல் கொலம்பியாவில், பறவை கண்காணிப்பு சுற்றுலா முயற்சிகள், முந்தைய மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வாழ்வாதாரத்தையும், அமைதியின் கட்டமைப்பையும், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒன்றாக இணைத்துச் செல்கின்றன.

இலங்கையின் உள்நாட்டுப் போரை அனுபவித்த விடத்தல்தீவு இந்த மாதிரிகளிலிருந்து உணர்ச்சிப்பூர்வமான மற்றும் நடைமுறைசார்ந்த ஊக்கத்தையும் கற்றல்களையும் பெற முடியும். சமூக மற்றும் பொருளாதார மீட்சியை எளிதாக்கவும், நல்லிணக்கம் மற்றும் சூழலியல் புத்துயிர்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் சுற்றுலாவின் திறனை அங்கீகரிக்க வேண்டும்.

இந்த இடங்களிலிருந்து கிடைக்கும் பாடங்கள் விடத்தல்தீவின் எதிர்கால வளர்ச்சி பாதையில் சமூக நலன்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டிற்குமான சமநிலையை நிலைநிறுத்த வழிகாட்டியாக அமைகின்றன.

முடிவுரை.

விடத்தல்தீவில் சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பது. சுற்றுச்சூழலியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. தகவல் பகிர்வு, திறன் அபிவிருத்தி மற்றும் சம நன்மைப் பகிர்வு ஆகியவைகளின் வழியாக உள்ளூர் சமூகங்களின் பங்கு மற்றும் அதிகாரமளிப்பு முக்கியக் கோட்பாடுகளாக இருக்க வேண்டும். விடத்தல்தீவின் தனித்துவமான இயற்கை அழகு, கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக்கும் பல்வேறு சூழல் சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் அனுபவங்கள் உருவாக்கப்பட்டால், பொறுப்புள்ள சுற்றுலாப்பயணிகளை பெரிய அளவில் ஈர்க்க முடியும். இயற்கை சூழலிய அமைப்புகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியதுடன், சூழல் சுற்றுலாவுடன் ஒருங்கிணைந்த நிலையான மீன்வளர்ப்பு நடைமுறைகள் பற்றிய சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட வேண்டும். இது பிராந்தியத்தின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கு உதவலாம். சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைக்கும் நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதும், பிராந்தியத்தின் இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வலுவான சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு உத்திகளை செயல்படுத்துவதும் வெற்றிக்கு அவசியமானவை. நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த. சுற்றுலாவின் சாத்தியமான சூழலியல் தாக்கங்களை முன்னமே கவனித்து தீர்வுகளை வடிவமைத்தல், வளங்களின் சிக்கனமான பயனளிப்பு மற்றும் கழிவுகளை நிர்வகித்தல், மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார அதிர்வுகளை எதிர்கொள்ளும் திறனை கட்டியெழுப்புதல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகள்

விடத்தல்தீவு இயற்கை காப்பகமாக 2016ம் ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாக மீன்பிடித்தல், கால்நடை மற்றும் ஆடு மேய்த்தல் மற்றும் விவசாயம் போன்ற வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய உள்ளூர் சமூகங்களுடன் போதுமான ஆலோசனை இன்றி இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. பல உள்ளூர்வாசிகள் இந்த அறிவிப்பைப் பற்றிய தகவல்களையே அறியாமலிருந்தனர். அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே அவர்களை பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுத்தியிருக்க வேண்டியது அத்தியாவசியம். இதைவிட, உள்ளூர் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து தங்களைச் செவ்வனே ஒதுக்கப்பட்டவர்கள் என உணர்ந்துள்ளனர். கொழும்பில் தலைமையகத்துடன் இயங்கும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் (DWC), பொதுமக்கள் பங்கேற்பின் முக்கியத்துவத்தை பொருட்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, உள்ளூர் மக்களின் பங்களிப்பின்றி விதிமுறைகளை மட்டும் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது. இந்த சமூக பங்கேற்பு மற்றும் ஆலோசனையின் பற்றாக்குறை, விடத்தல்தீவின் இயற்கையியல் ரீதியாக முக்கியமான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முயற்சிகளின் நீடித்த வெற்றிக்கும் நிலைத்தன்மைக்கும் விடாமுயற்சியான சந்தேகங்களை எழுப்புகிறது.

எனவே, பின்வரும் தரப்புகள் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகள்:

அரசாங்க நிறுவனங்கள்:

  • விடத்தல்தீவில் நிலையான சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்கான தெளிவான கொள்கைச் சூழலை உருவாக்கி, அதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க வேண்டும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்திணையப்பட வேண்டும்.

  • பிராந்தியத்தில், மீன்வளர்ப்புத் திட்டங்கள் உட்பட எந்தவொரு வளர்ச்சி முன்முயற்சிக்கும் முன் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • விடத்தல்தீவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சியை நோக்கிய அனைத்து முயற்சிகளிலும், உள்ளூர் சமூகங்களுடன் வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை முன்னுரிமை அளித்து நடாத்த வேண்டும்.

  • VNR (விடத்தல்தீவு இயற்கை காப்பகம்) பற்றிய தற்போதைய மேலாண்மை அணுகுமுறையை மீனாய்வு செய்து, முடிவெடுப்புகளில் உள்ளூர் சமூக பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தின் பாரம்பரிய அறிவு மற்றும் நிலம், கடலுடன் உள்ள அவர்களது வரலாற்றுச் சங்கத்தை மதிக்க வேண்டும்.

  • பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் தொடர்பான அச்சங்களை தீர்க்கும் வகையில், உள்ளூர் சமூகங்களை முக்கிய பங்காளிகளாக மதிக்கும் ஒரு கூட்டுச் சூழலை உருவாக்க வேண்டும்.

  • சமூக பங்கேற்பையும் அதிகாரமளிப்பையும் ஊக்குவிக்கும் திட்டங்களை எளிதாக்க வேண்டும். சூழல் சுற்றுலாவுடன் தொடர்புடைய துறைகளில் உள்ளூர் மக்களுக்கு திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும்.

  • விடத்தல்தீவின் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவை உள்ளூர் மக்களால் வழிநடத்தப்பட்டு நேரடியாக அவர்களுக்கே பயனனிக்கும்படி இருக்க வேண்டும்.

  • வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளூர் சமூகத்திற்குமிடையிலான இடைவெளியை குறைத்து, பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அதிகரிக்க வேண்டும்.

உள்ளூர் சமூகங்கள்:

  • சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டங்களின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் தீவிர பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும்.

  • சமூக அடிப்படையிலான சுற்றுலா நிறுவனங்களை உருவாக்கி, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் தங்களது அன்றாட வாழ்க்கையில் நிலையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • விடத்தல்தீவு இயற்கை காப்பகம் தொடர்பான மேலாண்மையில் அதிக பங்கேற்பைப் பெற்றுத் தர, சமூகத்தின் பாரம்பரிய அறிவு, கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் பாதுகாப்பு உத்திகளில் பிரதான அம்சங்களாக இருக்க வேண்டும்.

  • அரசாங்க நிறுவனங்களுடனும், அரசு சாரா அமைப்புகளுடனும் திறந்த உரையாடலில் ஈடுபட்டு. நம்பிக்கையை உருவாக்கி, தங்கள் குரல்கள் கேட்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

சாத்தியமான முதலீட்டாளர்கள்:

  • சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்குமிடங்கள், நிலையான போக்குவரத்து மற்றும் குறைந்த தாக்கம் கொண்ட சுற்றுலா நடவடிக்கைகள் ஆகியவற்றில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  • மேற்கொள்ளப்படும் திட்டங்கள் உள்ளூர் மக்களுக்கு நேரடி பயனளிப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

  • உள்ளூர் சமூகங்களுடன் நெருங்கிய கூட்டுறவுகளை அமைத்து, அவர்களது உரிமைகளை மதித்து, சுற்றுலா முயற்சிகளில் நன்மைகள் சமமாக பகிரப்படுவதையும், முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளடங்கியதாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் சுற்றுலாவின் முழுமையான மற்றும் சமூகமயமான அணுகுமுறையை ஏற்கும்போது. விடத்தல்தீவு இலங்கையில் நிலையான சுற்றுலாவிற்கான முன்னோடியான மாதிரியாக உருவாகும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது அதன் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் நீண்டகால பாதுகாப்புக்கு பங்களிப்பதோடு, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியையும், மேலும் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க மோதலுக்குப் பிந்தைய பிரதேசத்தில் குணப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கிறது.